தீபாவளி பசுமைப் பட்டாசுகளால் மாற்றம் பெறும் கொண்டாட்டங்கள் - மக்கள் மனநிலை என்ன?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
நாடு முழுக்க தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பசுமை பட்டாசுகளின் விலை அதிகமாக இருப்பதாலும், அதிகளவிலான சத்தம் மற்றும் வண்ணங்களும் அதில் தெரிவதில்லை என்று கருதுவதாலும், பட்டாசு வாங்கும் பட்ஜெட்டை இந்த ஆண்டு குறைத்துள்ளதாக இளைஞர்கள் கூறுகிறார்கள்.
சரவெடி பட்டாசுகளுக்கு பதிலாக தொடர்ந்து வெடிக்கும் சில வெடி வகைகள் அறிமுகம் ஆகியிருந்தாலும், பட்டாசு வாங்குவதில் விருப்பம் குறைந்துள்ளதாக சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பசுமை பட்டாசுகளுக்கு வரவேற்பு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த லட்சுமியின்(38) குடும்பத்தில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசுக்கு குறைவாக, அதாவது ரூ.1,500 மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறுகிறார்.
''போன வருஷம் ரூ.3,000க்கு பட்டாசு வாங்கினோம். ஆனால் என் பெரிய மகள் அனுஷையா (13) அணுகுண்டு பட்டாசு அவ்வளவாக சத்தம் இல்லை, பெரிய வெடியாக இல்லை என்கிறாள். சிறிய மகள் ரித்திவிகா(8) ட்ரோன் பட்டாசு வேண்டும் என சொல்லிவிட்டாள். அதனால் இந்தமுறை, இரவு நேரம் வெடிக்கும் பட்டாசுகளை மட்டும் வாங்குகிறோம். பட்டாசுகளின் விலைப் பட்டியலைப் பார்த்தோம். இரண்டு குழந்தைகளுக்கும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற ஆசை. அதனால் ரூ.1,500 மட்டும் பட்டாசுக்கு ஒதுக்கியுள்ளோம். பட்டாசுக்கு அதிகம் செலவு செய்யாமல், கொஞ்சம் அதிக விலை கொடுத்து ரூ.4,000க்கு ஆடைகள் வாங்கி விட்டோம். இரண்டு மகளுக்கும் கிராண்ட் டிரஸ் வாங்கியுள்ளோம்,''என்கிறார் லட்சுமி.
இந்த ஆண்டு விலை அதிகம்
தஞ்சாவூரைச் சேர்ந்த சிவகுமாருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் தினேஷ் குமார் கல்லூரி மாணவர், இளைய மகன்கள் முத்துகுமார் மற்றும் நிதிஷ். இருவரும் பள்ளி மாணவர்கள். மூவருக்கும் அதிகபட்சமாக ரூ.3,000க்கு பட்டாசு வாங்கவேண்டும் என ஏற்கெனவே முடிவு செய்தாகி விட்டது என்கிறார் சிவகுமார்.
''புஸ்வாணம், யானைவெடி, அணுகுண்டு வெடி, ஸ்டோன் ஷாட் வெடிகள் வாங்கவுள்ளோம். மூன்று பேரும் விதவிதமாக வாங்குவார்கள். விலை அதிகமாக இருப்பதால், வெடிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று கூறி ஆளுக்கு ரூ.1,000 என முடிவு செய்திருக்கிறார்கள். இதைவிட குறைவாகத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செலவு செய்தோம். அப்போது ரூ.2,000க்கு அதிக பட்டாசுகள் வாங்கினார்கள். இந்த ஆண்டு விலை அதிகம் என்பதால் ரூ.3,000 செலவிடுகிறோம்,'' என்கிறார் சிவகுமார்.
சரவெடி வாடிக்கையாளர்கள் வருவதில்லை

சென்னை வடபழனியில் பட்டாசுக் கடை நடத்தும் பாலமுருகன், இந்த ஆண்டு ரூபாய் ஐந்து லட்சத்திற்கு பட்டாசு விற்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறார். வாடிக்கைளார்கள் விலையைப் பற்றி பேசும்போது, சிறிய தள்ளுபடி கொடுத்து விற்பனை செய்வதாக கூறுகிறார்.
''நான் காய்கறி கடை நடத்துகிறேன். தீபாவளி சமயத்தில், பட்டாசு விற்பனையில் இறங்கிவிடுவேன். கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு விற்பனை எனக்கு கைகொடுத்தது. ஆனால் கொரோனாவுக்கு பின்னர், தீபாவளி பட்டாசு என்பதற்கு மவுசு குறைவுதான். விலை அதிகமாகியுள்ளது என்பது உண்மைதான். காற்று மாசுபாட்டை காரணம் காட்டி, பசுமை பட்டாசுதான் விற்கவேண்டும் என சொல்லி விட்டார்கள். ஆனால் பசுமை பட்டாசுகளுக்குப் பெரிய வரவேற்பு இல்லை.
வண்ணங்கள் குறைவாகவும், பட்டாசுகளின் வீரியமும் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். சரவெடிகள் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னர், ஆயிரம் வாலா வெடியில் எங்களுக்கு நல்ல லாபம் இருக்கும். அதை வாங்குபவர், ஒரு வெடி பெரிதாக வாங்கி வெடிப்பார்கள். தற்போது அந்த வியாபாரம் இல்லை,''என்கிறார் பாலமுருகன்.
இந்த ஆண்டு விற்பனையில் உள்ள பட்டாசுகளின் விவரம் பற்றி பேசிய அவர், ''கலர் பூ வெடி, மயில் வெடி போன்றவை ஒரு பாக்ஸ் ரூ.240ல் இருந்து ரூ.10,000 வரை கிடைக்கிறது. ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர் வெடிகள் ரூ.250ல் இருந்து கிடைக்கின்றன. ஒரு பெட்டியில் ஐந்து வெடிகள் இருக்கும். தொடர் வெடிகள் ஒரு பாக்ஸ் ரூ.250ல் இருந்து கிடைக்கிறது. சங்கு சக்கரம், புஷ்வாணம் ஆகிய வெடிகள் ரூ.80ல் இருந்து கிடைக்கின்றன. குறைந்தபட்சம் தீப்பெட்டி வெடிகள், மத்தாப்பு வெடிகள் ரூ.20ல் இருந்து கிடைக்கின்றன,'' என்றார் பாலமுருகன்.

பட்டாசு வெடிப்பது கட்டாயமில்லை
பசுமை பட்டாசுக்கு ஆதரவான குரல்களும் ஒலிக்கின்றன. மதுரையைச் சேர்ந்த 22 வயது சாரதா தனக்கு, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை விட, குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்கு செலவிடலாம் என்று இந்த ஆண்டு திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.
''தீபாவளி பட்டாசு கட்டாயம் வெடிக்கவேண்டும் என்பதில்லை. நாங்கள் சினிமாவுக்கு போகிறோம். இரவு புஸ்வாணம், சங்கு சக்கரம் ஆகிய வெடிகளை வெடிப்பேன். காற்று மாசுபாட்டை தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறன். ஒவ்வொருவரும் ஒரு மரம் வைப்போமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வெடியை தவிர்க்க முடியும் என்பதால் வெடிகளை குறைத்துவிட்டேன்,''என்கிறார் சாரதா.
பசுமை பட்டாசு என்றால் என்ன?
பட்டாசுகளால் காற்று மாசுபாடு அதிகரிப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் 2018ல் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாரம்பரியமாக பட்டாசு தயாரிக்கும் முறைகளில் சில திருத்தங்களை செய்து, பசுமை பட்டாசுகள் மட்டும்தான் வெடிக்கவேண்டும் என அறிவுறுத்தியது. குறிப்பாக பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அத்துடன், "குறைந்த அளவிலேயே மாசுகளை வெளியிடக்கூடிய, மேம்படுத்தப்பட்ட பட்டாசுகளை, சத்தமும், ஒளியும் மட்டும் வெளியாகும் வகையிலான நவீன வகை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கலாம். பிற பட்டாசுகளை தயாரிக்கக்கூடாது" என்றும் உத்தரவிட்டது.
'பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு ஆகும். இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம். பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது குறைவாகவே மாசுபாடு ஏற்படும். சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50% குறைவான நச்சு வாயுவை வெளியிடும் என்றும் நீரி அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













