காற்று மாசுபாடு: அபாய கட்டத்தை தொட்ட டெல்லி காற்றின் தரத்துக்கு தீபாவளி பட்டாசுகள்தான் காரணமா?

பட்டாசு விற்பனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டாசு விற்பனை
    • எழுதியவர், பிபிசி உண்மை கண்டறியும் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

தீபாவளி பண்டிகை நாளில் டெல்லி நகரத்தின் காற்று மாசுபாட்டளவு மிகவும் மோசமடைந்தது.

இந்த காற்றுத் தர வீழ்ச்சியில் பட்டாசுகளின் தாக்கம் அதிகம் கவனம் பெற்றது. சமீபத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் கூட பசுமைப் பட்டாசுகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பட்டாசுகளை வெடிக்க அனுமதித்தது.

மோசமான காற்றின் தரத்துக்கு பாட்டாசுகள் எவ்வளவு பங்களிக்கின்றன?

தீபாவளி காலத்தில் சில மாசுபடுத்திகளின் அளவு கணிசமாக அதிகரித்திருப்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன, ஆனால் காற்று மாசுபாட்டுக்கு மற்ற பல காரணிகளும் உள்ளன.

டெல்லியில் காற்று மாசுபாடு எவ்வளவு மோசமாக உள்ளது?

இந்திய நகரங்களில் சமீபத்திய ஆண்டுகளில் காற்று மாசுபாடு மிகத் தீவிர பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும், டெல்லி நகரத்தில் காற்று மாசுபாட்டால் 57,000 பேர் இறந்துள்ளதாக கிரீன்பீஸ் என்கிற அமைப்பு கூறுகிறது.

2020ம் ஆண்டுக்கான உலக காற்றுத் தர அறிக்கையின் படி, உலகின் 30 மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரங்களில் 20 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. மனித உடலுக்கு மிகவும் மோசமாக தீங்கு விளைவிக்கக் கூடிய பி எம் 2.5 என்கிற காற்று மாசு நுண்துகள் செறிவு அளவு இந்திய நகரங்களில் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை விட காற்றில் உள்ள பி எம் 2.5 செறிவு மிக அதிகமாக உள்ளது.

பி எம் 2.5 என்றால் என்ன?

பி எம் 2.5 நுண் துகள் அளவு வரைபடம்
படக்குறிப்பு, பி எம் 2.5 நுண் துகள் அளவு வரைபடம்

பார்டிகுலேட் மேட்டர் அல்லது பி எம் 2.5 என்பது கண்ணுக்குத் தெரியாத 2.5 மைக்ரான் (0.0025 மில்லி மீட்டர்) விட்டம் கொண்ட நுண்துகள் மாசுபொருட்களால் ஏற்படும் ஒரு வகையான மாசுபாடு.

இதனைத் தொடர்ந்து பி எம் 10 என்றழைக்கப்படும் 10 மைக்ரான் விட்டம் கொண்ட, அதைவிட பெரிய நுண் துகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கூறலாம்.

சிலவகை காற்று மாசுபாடுகள் இயற்கையாக ஏற்படும். எடுத்துக்காட்டாக தூசுப் புயல், காட்டுத் தீ போன்றவற்றால் ஏற்படுகிறவை. தொழிற்சாலை செயல்பாடுகள் போன்றவற்றால் ஏற்படுகிற செயற்கை மாசுபாடுகளும் உண்டு.

இந்த நுண்துகள்கள் மனித தலைமயிரை (50 - 60 மைக்ரான்) விட மிகவும் நுண்ணியது என்பதால், மனிதர்களின் நுரையீரலுக்குள் சென்றுவிடும், சில நேரங்களில் மனிதர்களின் ரத்த நாளத்துக்குள் கூட செல்லும்.

டெல்லி காற்று மாசு

பி எம் 2.5 & பி எம் 10 விளக்கப்படம்
படக்குறிப்பு, பி எம் 2.5 & பி எம் 10 விளக்கப்படம்

இந்த ஆண்டு டெல்லி உள்ளிட்ட பல வட இந்திய நகரங்களில், தீபாவளி பட்டாசு வெடிப்பைத் தாண்டி பல காரணங்களால், காற்று மோசமான தரத்தை அடைந்தது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் வயல்வெளிகளை எரித்துவிட்டது, மோட்டார் வண்டிகளின் புகை, டெல்லி மற்றும் சுற்றுப் புறங்களில் நடக்கும் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள் போன்றவை டெல்லியின் காற்றுத் தரக் கேட்டுக்கு காரணமாகின்றன.

தட்பவெட்ப நிலை காரணமாக, வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசுபடுத்திகள் அப்பகுதிகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டன.

தீபாவளி எப்படி காற்றின் தரத்தை பாதித்தது?

தூசி மூட்டமாக உள்ள டெல்லி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தூசி மூட்டமாக உள்ள டெல்லி

தீபாவளி காலத்தில் பல்வேறு மாநிலங்களும் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்தன, இருப்பினும் அதை பல மாநிலங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

தீபாவளி பட்டாசுகளால் சிறிய அளவில் மாசுபாடு ஏற்பட்டாலும் அது தரவுகள் அடிப்படையில் பார்த்தால் கணிசமாக உள்ளது என கடந்த 2018ம் ஆண்டில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.

டெல்லி நகரத்தில் உள்ள ஐந்து இடங்களில் 2013 முதல் 2016 வரையிலான தரவுகளை இந்த ஆய்வு எடுத்துக் கொண்டது

தீபாவளி என்பது இந்துக்களின் நிலவு நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது, பொதுவாக அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவபர் மாத தொடக்கத்தில் இப்பண்டிகை வரும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தை சுத்தம் செய்ய எரித்துவிடுவதை ஒரு காரணியாக கணக்கில் எடுத்துக் கொள்ள, இந்த தேதிகள் மிகவும் முக்கியம். விவசாய பயிர்க் கழிவு எரிப்பு நடவடிக்கையும் தீபாவளி காலகட்டத்தில்தான் நடக்கும்.

"நாங்கள் நாசா செயற்கைக் கோளின் தரவுகளைப் பயன்படுத்தி, வட இந்தியாவில் எப்போது விவசாய பயிர்க்கழிவு எரிப்பு நடக்கிறது என்பதை உறுதிப்படுத்தினோம்" என அவ்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான தனஞ்ஜெய் கய் கூறினார்.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நான்கு ஆண்டுகளில், இரண்டு ஆண்டுகளில், பயிர்களை எரிப்பது தீபாவளி காலகட்டத்துடன் நேரடியாக ஒத்துப்போகவில்லை.

தீபாவளியன்று விடுமுறை என்பதால் தொழில்துறை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், மேலும் வானிலை சூழல்களையும் தங்கள் கணக்கீடுகளில் எடுத்துக்கொண்டனர்.

தீபாவளி பண்டிகையின் இரண்டாவது நாளில், பி எம் 2.5 நுண்கள்களின் செறிவு கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர். தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் நிறைவடைந்த பின், காற்று மாசுபாடு முந்தைய நிலைக்கு திரும்பிவிடுகின்றன.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்கிற டெல்லியை தளமாகக் கொண்ட, லாப நோக்கற்ற அமைப்பின் அறிக்கை, தலைநகரில் 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தீபாவளியின் பண்டிகையின் போது பி எம் 2.5-ன் செறிவு அதிகரித்ததாகக் காட்டுகிறது.

மற்ற காரணிகள் என்ன?

பட்டாசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டாசு

எல்லா பட்டாசுகளும் அதிக அளவில் பி எம் 2.5 துகள்களை உற்பத்தி செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் பெரிய பட்டாசுகள் அதிக செறிவு கொண்டவை.

தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் வெளியே செல்வதால் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கிறது. பி எம் 2.5 நுண் துகள்களின் செறிவு அதிகரிப்புக்கு பட்டாசுகளைத் தாண்டி, சாலைகளில் அதிக போக்குவரத்தும் காரணமாக இருக்குமா?

எதிர்கால ஆராய்ச்சியில் இதற்கான விடையைக் காண விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பட்டாசுகளில் கண ரக உலோகங்கள் உட்பட மற்ற நச்சுப் பொருட்கள் உள்ளன.

இந்திய நகரமான ஜாம்ஷெட்பூரில் நடத்தப்பட்ட ஒரு தனி ஆய்வில், தீபாவளி காலத்தில் பின்வரும் பொருட்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது:

பி எம் 10 நுண் துகள்கள்

கந்தக டை ஆக்சைடு

நைட்ரஜன் டை ஆக்சைடு

ஓசோன்

இரும்பு

ஈயம்

மாங்கனீசு

செம்பு

பெரிலியம்

நிக்கல்

புகை மூட்டமான டெல்லி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகை மூட்டமான டெல்லி

பட்டாசுகளில் உள்ள 15 பொருட்களைப் பட்டியலிட்டு, அவை "அபாயகரமானவை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை" என்று கூறுகிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

இந்த பொருட்களில் சில வாகன உமிழ்வுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை நினைவு கூற வேண்டும்.

இந்த கட்டுரை முதன்முதலில் நவம்பர் 2018ல் வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள் மற்றும் மாசு தரவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :