பருவநிலை மாற்றம்: 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' என்பது என்ன? இதற்காக நாடுகள் என்ன செய்கின்றன?

பட மூலாதாரம், Reuters
உலகின் 85% காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை "நிறுத்தி, தலைகீழாக மாற்ற" உறுதியளித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் வந்திருக்கிறது. இந்த மாநாடு "நிகர பூஜ்ஜிய" உமிழ்வு இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"நிகர பூஜ்ஜிய உமிழ்வு" என்றால் என்ன?
நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்பது வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் அதிகரிக்காமல் இருப்பதைக் குறிக்கிறது.
பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை முடிந்தவரை குறைத்து, எஞ்சியிருக்கும் உமிழ்வின் அளவுக்குச் சமஅளவிலான பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்திலிருந்து நீக்கி சமநிலைப்படுத்துவதாகும்.
வீடுகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து என பல இடங்களில் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களை எரிக்கும்போதும் கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. இது சூரியனின் வெப்பத்தைப் பூமிக்குள் தக்க வைத்து புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது.
2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி, பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கட்டுப்படுத்த 197 நாடுகள் ஒப்புக்கொண்டன.
இந்த இலக்கை அடைய வேண்டுமெனில், நாடுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் COP26 மாநாட்டில், இந்த இலக்கை நோக்கி நகர்த்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றி நாடுகளிடம் கேட்கப்படும்.
காடழிப்பு குறித்த அறிவிப்பால் என்ன தாக்கம் ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
மரங்களை வெட்டுவது வெப்பமயமாதலை ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை உறிஞ்சும் காடுகளை குறைக்கிறது.
100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் காடழிப்பை நிறுத்துவதற்கு உறுதியளித்துள்ளனர். இது இந்த மாநாட்டில் செய்து கொள்ளப்பட்டிருக்கும் முதலாவது மிகப்பெரிய உடன்படிக்கையாகும்.
அமேசான் மழைக்காடுகள் வெட்டப்பட்ட இடங்களைக் கொண்ட பிரேசிலும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று. பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சீனா, இந்தோனீசியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளும் இதில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த உறுதிமொழியில் சுமார் 140 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் நிதி பங்களிப்பும் அடங்கியுள்ளது.
சூழல் நிபுணர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். ஆனால் 2014-ஆம் ஆண்டில் காடழிப்பை குறைப்பது தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய ஒப்பந்தம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதையும் சுட்டிக் காட்டி எச்சரிக்கிறார்கள். இப்போது அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நிகர பூஜ்ஜியத்தை அடைய உலகளாவிய முயற்சி என்ன?

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாற்றத்தை சமாளிக்க உலகளாவிய முயற்சி தேவை என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரே திசையில் நகர்ந்தால் மட்டுமே நிகர பூஜ்ஜிய இலக்குகள் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
132 நாடுகள் 2050-க்கு முன் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தாலும், கார்பன் டை ஆக்சைடை உமிழ்வதில் முதலாவது பெரிய நாடான சீனா, 2060 ஆம் ஆண்டிற்குள் "கார்பன் நடுநிலையை" இலக்காகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. இதற்கு என்ன பொருள் என்றோ, எப்படி அதை அடையப் போகிறது என்றோ சீனா இதுவரை விளக்கவில்லை. ஒருவேளை அதுவே நிகர பூஜ்ஜிய இலக்காக இருந்தாலும், உலகளாவிய இலக்கில் அது 10 ஆண்டுகள் தாமதமாகும்.
கார்பன் டை ஆக்சைடை உமிழ்வதில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பிறகு உலகிலேயே நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா - 2070ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவோம் என உறுதியளித்திறது. இது பொதுவான இலக்கைக் காட்டிலும் 20 ஆண்டுகள் தாமதமாகும்.
இவை பரவாயில்லை. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளிள் அடங்கும் ரஷ்யா, இந்தோனீசிய போன்ற சில நாடுகள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு குறித்து எந்தவிதமான உறுதியையும் தரவில்லை.
வளிமண்டலத்திலிருந்து கார்பனை வேறு எப்படி அகற்ற முடியும்?

பட மூலாதாரம், Getty Images
காடழிப்பை நிறுத்துவதுடன், கார்பனை உறிஞ்சுவதற்கு மலிவான வழியாகக் கருதப்படும் மரங்களை நடும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் மரங்களை நடுவதற்குத் தேவையான இடங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மரங்களைத் தவிர, தொழில்நுட்பத்தின் மூலமாகவும் கார்பனை சேகரித்து அழிக்கலாம். கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு என இதைக் கூறுகிறார்கள்.
இது காற்றிலிருந்து கார்பனை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இதன் மூலம் பிடிக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடு திட வடிவமாக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்படும்.
இந்தத் தொழில்நுட்பங்கள் இன்னும் வளரும் நிலையில்தான் இருக்கின்றன. விலையும் மிக அதிகம். எந்த அளவுக்குப் பலன் கிடைக்கும் என்பதும் இன்னும் நிரூபணமாகவில்லை.
நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்கிற இலக்கை அடைவதற்கு சில நாடுகள் பயன்படுத்தும் வழிகள் சர்ச்சைக்குள்ளாகின்றன.
உதாரணமாக, எஃகு உற்பத்தி போன்ற அதிக எரிசக்தி தேவைப்படும் தொழில்களை மூடினால் A என்ற நாடு கார்பன் உமிழ்வைக் குறைக்கலாம்.
ஆனால் அதே நாடு, B என்ற மற்றொரு நாட்டிலிருந்து எஃகு இறக்குமதி செய்தால், மொத்த பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்குப் பதிலாக B என்ற நாட்டுக்கு அதன் கார்பன் உமிழ்வை மறைமுகமாக கடத்திவிடுகிறது.
இதேபோல, பணக்கார நாடுகள் தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதற்காக ஏழை நாடுகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் தங்கள் உமிழ்வை அவர்கள் கணக்கில் கொண்டுவரும் திட்டங்களும் இருக்கின்றன.
இருப்பினும், உள்நாட்டில் அதிக தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக இவை பார்க்கப்படுகின்றன.
உமிழ்வை ஈடுசெய்வதற்காக பணம் தரும் முயற்சிகள் எங்கும் நடந்திருக்காது என்று கூறுவது கடினம்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியின் காலநிலை மாற்றத்திற்கான வாக்குறுதி: 'இந்தியா எப்படி நிறைவேற்றும்?'
- தமிழக மீனவர்களுக்கு இனி அவகாசம் தர முடியாது : இலங்கை மீனவர்கள்
- இயற்கையை மீட்க ரூ.14 ஆயிரம் கோடி வழங்கும் அமேசான் நிறுவனர்
- மெட்டாவெர்ஸ்' மூலம் ஃபேஸ்புக் வருங்காலத்தை ஆக்கிரமிக்கப் போகிறதா?
- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












