தமிழ்நாட்டின் வட பகுதியை நோக்கி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

பட மூலாதாரம், Getty Images
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தமிழ்நாட்டின் வடபகுதியை நோக்கி நகருமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்து வருகின்ற 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 10, 11, 12ஆம் தேதிகளிலும், தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நவம்பர் 11, 12ஆம் தேதிகளிலும் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீட்டரை எட்டக்கூடும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையோ, மிக கனமழையோ பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.
மீனவர்கள் நவம்பர் 9, 10 தேதிகளில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும், நவம்பர் 10 முதல் 12 வரை தென் மேற்கு வங்க கடல், தமிழக கடற்கரை பகுதி அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நவம்பர் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் காலை முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பிவருகின்றன. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பியுள்ளதால், அவற்றிலிருந்து 6,100 அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையாலும், காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து பத்தாயிரம் கன அடியிலிருந்து 23,000 ஆயிரம் கன அடியாக உயர்வு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.46 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 84.91 டி.எம்.சியாக இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி முதலாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியா vs ஸ்காட்லாந்து: அதிரடி வெற்றியால் மீண்டும் போட்டிக்குள் வருகிறதா கோலி படை?
- ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
- குடிசையிலிருந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்
- தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
- ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?
- “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








