வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

AI can predict if it will rain in two hours' time

பட மூலாதாரம், Getty Images

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் மழை பொழியுமா இல்லையா என்று கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான, லண்டனில் உள்ள டீப்மைண்ட் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் எக்செட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் மூலம் அடுத்த ஆறு மணி நேரம் முதல் இரண்டு வார காலம் வரையில் மழை பொழியுமா இல்லையா என்று மட்டுமே பெரும்பாலும் கண்டறிய முடியும். இந்த முறைகளில் மிகவும் நுணுக்கமான சமன்பாடுகள் பயன்படுத்தப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் புதிய முறை மூலம் ஆபத்தான புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவை வருவதையும், குறுகிய காலத்தில், முன்கூட்டியே கணிக்க முடியும்.

வானிலை எவ்வளவு நேரத்தில் மாறும், மழைப்பொழிவு எப்போது அதிகரிக்கும், வானிலை நிலவரம் எப்போது தீவிரமாகும் போன்றவற்றை முன்கூட்டியே கணிப்பது, பருவநிலை மாற்றம் காரணமாக ஆய்வாளர்களுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது.

இத்தகைய வானிலை நிகழ்வுகளால் கணிசமான அளவில் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகின்றன.

"தீவிர வானிலை மாற்றங்களால் பேரழிவை உண்டாக்கும் பின் விளைவுகள் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளும் அவற்றில் அடக்கம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும்," என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்தைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப அதிகாரி நியால் ராபின்சன் தெரிவிக்கிறார்.

குறுகிய காலத்தில் வானிலையை கணிப்பது என்பது மக்கள் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் இருக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு அமைப்பு எப்படி இயங்குகிறது?

2016 முதல் 2018 வரையிலான பிரிட்டனின் ரேடார் வரைபடங்களை ஆராய்ந்து மழைப்பொழிவு எப்பொழுது எப்படி நடக்கிறது என்பதை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிந்துகொண்டது.

மழை வெள்ளம் வானிலை
படக்குறிப்பு, குறுகிய நேரத்தில் நிகழும் வானிலை மாற்றங்களைக் கணிப்பது தற்போது கடினமாக உள்ளது.

2019ல் எடுக்கப்பட்ட ரேடார் வரைபடங்களின் முடிவுகளை கணிக்குமாறு சோதனை செய்யப்பட்ட பொழுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காட்டிய முடிவுகள் 89 சதவிகிதம் துல்லியமாக இருந்தன.

பிரிட்டன் வானிலை ஆய்வு அலுவலகத்தைச் சேர்ந்த 50 வானிலை ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காட்டும் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்று ஆராய்ந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

குறுகிய நேரத்தில் மழைப்பொழிவை கணிப்பதற்கு வேறு முறைகளைவிட செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் முறையையே பின்பற்றலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணிசமாக முன்னுரிமை அளித்தனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த ஆய்வு இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. ஆனால் வானிலை ஆய்வாளர்கள் தரவுகளை ஆராய்வதில் குறைவான நேரத்தை செலவிட்டு, வானிலை மாற்றத்திற்கு பிந்தைய விளைவுகளின் அதிக கவனம் செலுத்த இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு திறன்மிக்க கருவியாக இருக்கும்," என்று டீப்மைண்ட் ஆய்வகத்தில் உள்ள மூத்த அறிவியலாளர் ஷகீர் முகமது தெரிவிக்கிறார்.

"பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் மோசமான வானிலை மாற்றங்களின் விளைவுகளை அறிந்து, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாவதற்கு இது ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும்," என்று அவர் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :