அமெரிக்க விமான நிறுவனத்தின் ரகசியங்களை திருடியதாக சீன அதிகாரிக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை

இயந்திரம்

பட மூலாதாரம், Reuters

சீன உளவுத்துறை அதிகாரி ஒருவர் அமெரிக்க விமான நிறுவனங்களின் ரகசியங்களை திருடியதாக அமெரிக்காவின் நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஷு யான்ஜுன் என்னும் அந்நபர் பொருளாதார தகவல்கள் மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருக்கு 60 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 50 லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும்.

ஷு முதலில் 2018ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பின் முதன்முதலாக விசாரணைக்காக அமெரிக்கா கொண்டுவரப்பட்டார். அவ்வாறு விசாரணைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட முதல் நபரும் ஆவார்.

இதுகுறித்து சீன அதிகாரிகள் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் இந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சீனா தெரிவித்திருந்தது.

ஷு சீனாவின் ஜியாங்சு மாகாண கிளை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஆவார். இந்த முகமைதான் எதிர் உளவு, வெளிநாட்டு உளவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிக்கிறது.

கொடி

பட மூலாதாரம், Getty Images

2013ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள பல நிறுவனங்களின் ஊழியர்களை ஷு கண்காணித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு தருணத்தில் ஜிஇ ஏவியேஷன் என்ற விமான நிறுவனத்தின் ஊழியரை சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பிரசன்டேஷன் வழங்க 2017ஆம் ஆண்டு அழைத்திருந்தார் ஷு. அவர்களின் பயணச் செலவையும் ஷு ஏற்றிருந்தார்.

அடுத்த ஆண்டு, ஷு நிபுணரிடம் "கணினியின் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பு செயல்முறை" குறித்து கேட்டுள்ளார். எஃப்பிஐ-யுடன் பணிபுரியும் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முக்கியமான தரவுகள் என்று பெயரிட்ட இருபக்க ஆவணங்களை ஷுவுக்கு அந்த ஊழியர் அனுப்பி வைத்தார்.

அதேபோன்று அந்த ஊழியரின் கணினியின் கோப்பு விவரங்களையும் கேட்டுள்ளார் ஷு. பின் அவரை பெல்ஜியத்தை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளார். அப்போதுதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"சீனாவின் நோக்கம் குறித்து சந்தேகிக்கும் பலருக்கு இது ஒரு எச்சரிக்கை," என எஃப்பிஐ-ன் துணை இயக்குநர் அலன் கோலெர் தெரிவித்தார். சீனா தங்களது பொருளாதாரம் மற்றும் ராணுவத்தின் நன்மைக்கு அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை திருடுகிறது" என அவர் தெரிவித்தார்.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்குள்ளும் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபமாக சீனா ஹைபர்சோனிக் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்ததில் அமெரிக்கா கோபமாகவுள்ளது. அதேபோன்று சீனாவின் ராணுவ தலையீட்டிலிருந்து தைவானை காப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

"அமெரிக்காவின் சிஐஏ இயக்குநர், சீனா அமெரிக்காவுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப அச்சுறுத்தலாக உள்ளது," என சிஎன்என் செய்தி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சீனா மேலும் கவனமாக கண்காணிக்கவுள்ளதாக சிஐஏ தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :