வடகொரியாவில் கடும் உணவுப் பிரச்சனை நிலவுவது ஏன்? பருவநிலை மாற்றம் எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா பிக்கர்
- பதவி, பிபிசி நியூஸ், சோல்
வடகொரியாவுக்கு உள்ளேயும் வெளியில் இருந்தும் எச்சரிக்கைகள் தெளிவாக வருகின்றன. தென் கொரியாவில் இருப்பவர்கள், வட கொரியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் பசியோடு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். குளிர்காலம் நெருங்க நெருங்க, விளிம்பு நிலை மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
"தெருக்களில் அதிகம் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாகவும் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன" என்கிறார் டெய்லி என்.கே என்ற நாளிதழின் ஆசிரியர் லீ சாங் யாங். இவருக்கு வடகொரியாவில் செய்தித் தொடர்புகள் உள்ளன.
"வட கொரியாவில் உள்ள அடித்தட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்ததை விட உணவுத் தட்டுப்பாடு மோசமாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
வட கொரியாவிலிருந்து செய்தியைப் பெறுவது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டிருக்கிறது. சீனாவிலிருந்து கோவிட்-19 பரவிவிடக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே எல்லை மூடப்பட்டிருக்கிறது. கொரியப் பிரிவினையின்போது தென்கொரியாவுக்குச் சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தி அனுப்புவதுகூட ஆபத்தான வேலையாக மாறியிருக்கிறது.
அங்கீகரிக்கப்படாத செல்போன்களை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் தங்களுக்கு விருப்பமானவர்களுக்குப் பலரும் செய்திகளையும் கடிதங்களையும் அனுப்புகிறார்கள். சோலில் பதிப்பகங்களுக்கும் செய்தி அனுப்புகிறார்கள்.
பாதுகாப்பு கருதி பெயரை வெளியிட விரும்பாத சில நபர்கள் மூலம் அங்கு என்ன நடக்கிறது என்பதை விளக்க முயற்சி செய்திருக்கிறோம்.
"ஒவ்வொரு அரிசி மணியும்"

பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவில் எப்போதுமே உணவுத் தட்டுப்பாடு இருந்திருக்கிறது. ஆனால் கொரோனா இந்த சூழலை மோசமாக்கியுள்ளது. 1990ல் "கடினமான மார்ச்" என்று அழைக்கப்பட்ட ஒரு பேரிடரோடு இதை ஒப்பிடுகிறார் தலைவர் கிம் ஜாங் உன். அந்தப் பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கானோர் பட்டினியால் இறந்தார்கள்.
இன்னும் நிலைமை அந்த அளவுக்கு மோசமாக மாறிவிடவில்லை என்று நம்பப்படுகிறது. நம்பிக்கைக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. சீனாவுடனான தனது எல்லையைத் திறக்க வட கொரியா ஏற்பாடு செய்வதாகத் தெரிகிறது. ஏற்கனவே சீர்குலைந்துபோயிருக்கும் பொருளாதார சூழலை சீராக்க எவ்வளவு வணிகமும் நிதி உதவியும் தேவை என்பது சரியாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டின் அறுவடை முக்கியமானது. சென்ற ஆண்டு தொடர் சூறாவளிகளால் பாதியளவு பயிர்கள் அழிந்துபோயின. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக ஐ.நா சபை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு அறுவடை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக ராணுவத்தினர் உட்பட லட்சகணக்கானவர்கள் வயலில் வேலை செய்ய அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் விளையும் ஒவ்வொரு அரிசி மணியும் பாதுகாக்கப்படவேண்டும் என்று கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது, உணவு உண்ணும் எல்லாரும் அறுவடைக்குச் செல்லவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
"அறுவடையின்போது இழப்புகளைக் குறைக்க ஒரு திட்டம் வகுக்கப்படுள்ளது. திருட்டோ ஏமாற்றும் வேலையோ நடந்தால் கடுமையாக தண்டனை விதிக்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதால் அச்சம் நிலவுகிறது" என்கிறார் டெய்லி என்.கே இதழைச் சேர்ந்த லீ.
சென்ற வாரம் தென்கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை ஒரு ரகசிய நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தியது. அதில் "பொருளாதார சூழலால் தான் அபாயகரமான சூழலில் இருப்பதாக கிம் தெரிவித்திருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள் இதைத் தெரிவித்தனர். போதுமான அளவு மருந்துகளும் அத்தியாவசிய பொருட்களும் இல்லாததால் டைபாய்டு போன்ற தொற்று நோய்கள் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
அரசு ஊடகங்கள் இதை அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. பயிர்ச்சேதம், உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகியவை பற்றிய செய்திகளையும் விழிப்புணர்வு போஸ்டர்களையும் அவை வெளியிட்டு வருகின்றன.
நவீன விவசாயம்

வடகொரியாவில் உணவு பற்றிய இரு பிரச்சனைகள் நிலவுகின்றன.
முதலாவது அதன் விவசாய முறை. பியோங்யாங் நகரம் போதுமான அளவுக்கு ராணுவ தொழில்நுட்பத்திலும் ஏவுகணையிலும் முதலீடு செய்துள்ளது. ஆனால் விரைவாகவும் வெற்றிகரமாகவும் அறுவடை செய்ய அவர்களிடம் நவீன உபகரணங்கள் இல்லை.
கொரியாவின் கிராமப்புற பொருளாதாரக் கழகத்தைச் சேர்ந்த சோய் யோங்க்ஹோ பேசும்போது, "போதுமான அளவுக்கு விவசாயக் கருவிகள் இல்லாததால் உணவு உற்பத்தி குறைந்திருக்கிறது" என்றார்.
இதை நாங்களே பரிசோதிக்க விரும்பினோம்.
தென்கொரியாவின் மேற்கு முனையில் நின்று பார்த்தால் சோலின் கட்டிடங்களுடைய பின்னணியில் வடகொரியாவின் ஹான் நதி தெரிகிறது. ஒரே நேரத்தில அது அருகிலும் தூரத்திலும் இருப்பதான பிரமை ஏற்பட்டது.
தொலைநோக்கியில் பார்த்த ஒரு சிறுமி, "எல்லாரும் ஒரே மக்கள்தான், அவர்கள் நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள்" என்றபடியே அம்மாவிடம் தாவினார்.
பல கிராமத்துவாசிகள் நெல் மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு ஒரு பழைய டிராக்டரை நோக்கி செல்வதைப் பார்க்க முடிந்தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள ராணுவ உள்ளீடற்ற பகுதியான பஜூவைச் சேர்ந்த ஒரு தென்கொரிய விவசாயி, ஒரு சராசரி வயலை இயந்திரத்தால் அறுவடை செய்வதற்குத் தனக்கு ஒரு மணி நேரமாகிறது என்றார். வடகொரியாவைப் போலக் கையால் அறுவடை செய்தால் அதற்கு ஒரு வாரம் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடு

தொழில்நுட்பம், விவசாயக் கருவிகளின் தட்டுப்பாடு தவிர, உணவு உற்பத்தியைக் குறைக்கும் ஒரு பெரிய நீண்டகாலப் பிரச்சனையையும் வடகொரியா சந்தித்துவருகிறது.
உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 11 நாடுகளில் வடகொரியாவும் ஒன்று என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. விவசாயம் செய்வதற்கென வடகொரியாவில் இருக்கும் குறைந்த அளவிலான நிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்படலாம்.
"வரலாற்று ரீதியாக வடகொரியாவின் மேற்கு கடற்கரையோரப்பகுதி, ப்ரெட்கூடை என்று புகழப்பட்டது. ஆனால் இப்போது அங்கு பயிரிடப்படும் அரிசி மற்றும் சோளப்பயிர்களில் மகசூல் தோல்வியடைய அதிகம் வாய்ப்பு உள்ளது" என்கிறார் "வடகொரியாவில் ஒன்றுகூடும் பிரச்சனைகள்" என்ற தலைப்பிலான அறிக்கையை எழுதிய கேத்தரின் டில். இவர் ஆபத்துகள் பற்றிய கவுன்சிலில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
கிளாஸ்கோவில் நடந்துவரும் 26வது ஐ.நா பருவநிலை உச்சிமாநாட்டுக்குத் தனது பிரிட்டன் தூதுவரை வடகொரியா அனுப்பியதற்கான காரணம் இதுதான்.
"வடகொரியாவில் அதிகமான பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெள்ளம், கனமழை, சூறாவளி போன்றவை மக்களை பாதிக்கின்றன. இவை மகசூலைக் குறைப்பதோடு பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளையும் அதிகப்படுத்துகின்றன" என்கிறார் சோய்.
"ஒன்றிணையும் பிரச்சனைகள்" என்கிற அறிக்கை, அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பிரச்சனை தீவிரமடையும் என்று கூறுகிறது. வறட்சியாலும் வெள்ளத்தாலும் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது.
"ஏற்கனவே வட கொரியாவில் தீவிர புயல்கள் அதிகரித்து வருகின்றன. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் புயல் காலங்களில் அதிகப் புயல்கள் வீசின. கடலோரப் பகுதிகள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும்" என்கிறார் டில்.
வெளி உலகத்தோடு வடகொரியா தொடர்பில் இல்லாவிட்டாலும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக அந்த நாடு ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டத்துக்காக 2003 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு விரிவான தேசிய அறிக்கைகளை வடகொரியா உருவாக்கியது. க்யோட்டோ மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் வடகொரியாவின் உணவு உற்பத்தியை பாதிப்பதால் இந்த ஈடுபாடு வந்திருக்கலாம்.
2012 ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அறிக்கையின்படி, 1918 முதல் 2000 வரை வடகொரியாவின் சராசரி வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. ஆசியாவின் மிக வேகமான உயர்வு இது.
2019 பசுமை காலநிலை நிதி அறிக்கை, 2050களுக்குள் வடகொரியாவின் சராசரி வெப்பநிலை 2.8 முதல் 4.7 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.
இரு நாடுகளையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பாகவே தென்கொரியா இதைப் பார்க்கிறது.
தென் கொரியாவின் சுற்றுசூழல் அமைச்சர் ஹான் ஜியோங் அயே சென்றவாரம் என்னிடம் பேசும்போது கிளாஸ்கோவில் வடகொரியாவின் சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திக்கமுடியும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகக் கூறினார். காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இரு கொரிய நாடுகளும் பங்கேற்பதற்கான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தப்போவதாகவும் கூறினார்.
ஸ்காட்லாந்தில் நடந்த பேச்சுக்களை வடகொரிய அதிகாரிகள் கேட்டிருப்பார்களானால், கொரோனா பயம் முடிந்து சீனாவுடன் வர்த்தகம் தொடங்கப்பட்டாலும், எல்லை தாண்டிப் பொருட்கள் வந்தாலும் ஏற்கனவே நலிவடைந்துள்ள வடகொரிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள்.
வளர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்சனையை வடகொரியாவால் தனியாக எதிர்கொள்ள முடியாது.
பிற செய்திகள்:
- மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன?
- தமிழ்நாட்டின் வட பகுதியை நோக்கி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
- அமெரிக்க விமான நிறுவனத்தின் ரகசியங்களை திருடியதாக சீன அதிகாரிக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை
- முகக்கவசம் சிறார்களின் நீண்ட கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துமா?
- "ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் கிடையாது": டி.டி.வி. தினகரன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












