முகமது நபியை இழிவுபடுத்தியதாக கூறி கை துண்டிக்கப்பட்ட பேராசிரியர் ஜோசப் தற்போது எப்படி இருக்கிறார்?

- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் கேரளாவில் கடந்த 2010ஆம் ஆண்டு கல்லூரி தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கியதாகக் கூறி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களால் பேராசியர் டி.ஜே.ஜோசப்பின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் இந்த அமைப்பை இந்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்திருக்கும் நிலையில், அந்த கொடூரமான பழைய சம்பவம், அதன் விளைவுகள் குறித்து அறிய பிபிசி கேரளாவுக்குச் சென்றது.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் சிலருக்கு வேதனையைத் தரலாம்.
12 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தத் தாக்குதலை டி.ஜே.ஜோசப் தெளிவாக நினைவுகூர்ந்தார்.
அன்று ஜூலை மாதத்தின் பகல்பொழுது. கல்லூரி ஒன்றில் மலையாள மொழி பேராசிரியரான 52 வயது ஜோசப், மூவாட்டுபுழாவில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையை முடித்துவிட்டு தனது தாய், சகோதரியுடன் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அவரது வீட்டிலிருந்து 100மீ தொலைவில் ஜோசப் சென்ற காரை ஒரு சுஸுகி மினிவேன் இடைமறித்தது.
அந்த மினிவேனில் இருந்து ஆறு நபர்கள் இறங்கிய நிலையில், கையில் கோடாரி வைத்திருந்த ஒரு நபர் ஜோசப்பின் காரை நோக்கி ஓடிவந்தார்.
அவர் ஓட்டுநருக்கு அருகே இருந்த கதவைத் திறக்க முயற்சித்தபோது, மற்றொரு நபர் காரின் பின்புறத்தைத் திறந்தார். மற்ற மூவர் அவரது சகோதரிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே இருந்த கதவைத் திறக்க முயற்சித்தனர்.
ஓட்டுநர் பக்க ஜன்னல் கோடாரியால் துண்டுதுண்டாக நொறுக்கப்பட்டதும், தான் சிக்கிக்கொண்டதை ஜோசப் உணர்ந்தார்.
பின்னர் கதைவைத் திறந்து அவரை வெளியே இழுத்த கோடாரி வைத்திருந்த நபர், அவருடைய கைகள் மற்றும் கால்களில் வெட்டியதாக கூறப்பட்டது.
"என்னைக் கொல்லாதே... தயவுசெய்து என்னைக் கொல்லாதே" என்று பேராசிரியர் ஜோசப் கெஞ்சியுள்ளார்.
ஆனால், அவர் மரம் வெட்டுவதுபோல ஜோசப்பின் கைகள் மற்றும் கால்களை வெட்டிக்கொண்டு இருந்தார்.
அவரது இடது கையின் உள்ளங்கை துண்டிக்கப்பட்டு ஒருபுறம் தூக்கி எறியப்பட்டது. வலது கை உடலில் வெறுமனே தொங்கிக்கொண்டிருந்தது.
பேராசிரியர் ஜோசப்பின் மகனும் மனைவியும் அலறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவரது மகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது தந்தையை தாக்கிக்கொண்டிருந்த நபர்களை நோக்கி கத்தியை வீசியுள்ளார்.
சிறிய ரக நாட்டு குண்டை வெடிக்கச் செய்துவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
அவரை உடனடியாக மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துண்டிக்கப்பட்ட அவரது கை காய்ந்த தேக்கு இலை போல பக்கத்து வீட்டாரின் தோட்டத்தில் கிடந்தது. பின்னர், அந்தக் கை ஒரு பையில் போட்டு மருத்துவமனைக்கு தனியாக கொண்டு செல்லப்பட்டது.

சுயநினைவை இழந்த பேராசிரியர் ஜோசப் 50 கிமீ தொலைவில் இருந்த மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆறு மருத்துவர்கள் 16 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட கையை சரி செய்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு 18 மணி நேரம் கழித்து ஜோசப் கண் விழித்தபோது மருத்துவமனையில் ஊடகத்தினர் குவிந்திருந்தனர். மொத்தம் 11 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஜோசப் இருந்த நிலையில், 35 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் ஜோசப் வீடு திரும்பினார்.
"ஒரு தேர்வுத் தாளில் இஸ்லாத்தை அவமதித்ததாக சிலர் நினைத்த கேள்வியை தேர்வு செய்ததே எனது குற்றம். அது என் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது" என பேராசிரியர் ஜோசப் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்தச் சம்பவம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பேராசிரியர் ஜோசப்பிற்கு மார்ச் 26 காலை ஒரு ஃபோன் கால் வந்தது. மறுமுனையில், உள்ளூர் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் நியூமன் கல்லூரியின் முதல்வர் பேசினார்.
கல்லூரி மைதானம் காவல்துறையினரால் நிரம்பியுள்ளது. நீங்கள் இங்கு வந்தால் நிலைமை மோசமாகிவிடும் என முதல்வர் எச்சரிக்க, தான் செய்த தவறு என்ன என்று ஜோசப் கேட்டுள்ளார்.
இறை தூதர் முகமது நபியை அவமதித்து விட்டதாக கல்லூரி சுவர்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கும் விஷயத்தை முதல்வர் அவருக்கு விளக்கியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் பி.டி.குஞ்சு முகமது எழுதிய திரைக்கதைகள் பற்றிய புத்தகத்திலிருந்து 'கடவுளுக்கும் ஒரு பைத்தியக்காரனுக்கும்' இடையேயான கற்பனை உரையாடலை 'நிறுத்தக்குறி' (punctuations) பயிற்சி கேள்வியில் ஜோசப் பயன்படுத்தியிருந்தார்.
அந்தக் கேள்வியில் 'பைத்தியக்காரன்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'முகமது' என்ற சொல்லை ஜோசப் பயன்படுத்தினார். பி.டி. குஞ்சு எழுதிய நூலின் பெயரின் பின் பகுதியை மனதில் வைத்தே அந்த சொல்லைப் பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார்.
"முகமது என்பது இஸ்லாமியர்கள் மத்தியில் பொதுவான பெயர். அதை இறை தூதர் முகமது நபியுடன் தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும் என்பது அப்போது எனக்குத் தோன்றவில்லை" என்கிறார் ஜோசப்.
நான்கு இஸ்லாமியர்கள் உட்பட மொத்தம் 32 பேர் தேர்வு எழுதிய நிலையில், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரேயொரு மாணவி மட்டும் தயக்கம் காட்டியிருக்கிறார்.
பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியதும் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கல்லூரியின் கதவுகளுக்கு முன்பே தடுத்து விட்டனர். அதில் சிலர் அருகேயிருக்கும் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். உடனடியாக கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜோசப்பை இடைநீக்கம் செய்தது.

"எச்சரிக்கை கொடுக்காமல் ஒரு மனிதனை நிர்வாணமாக்கியதுபோல நான் உணர்ந்தேன்" என்கிறார் ஜோசப்.
உடனடியாக ஜோசப் மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு தன் மனைவியுடன் நகரத்திற்கு வெளியே சென்றார். அடுத்த சில நாட்களுக்கு, மலிவான விடுதியில் தங்கியிருந்து என்ன நடக்கிறது என்பதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். ஜோசப்பை தேடுவதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரது இருப்பிடம் குறித்து அறிய ஜோசப்பின் 23 வயதான மகனை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஆறு நாட்களுக்குப் பிறகு ஜோசப் காவல்துறையிடம் சரணடைந்தார்.
பின்னர், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் ஜோசப் அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் கடவுச்சீட்டு, வங்கி ஆவணங்கள் மற்றும் பிற அதிகாரபூர்வ ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது கடவுளை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஏறக்குறைய ஒரு வார சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த ஜோசப், தன்னுடைய மனைவி குடும்பத்தாருடன் வாழத் தொடங்கினார். அவர் வெளியே போகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார்.
"வெறியர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பார்கள் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது" என்கிறார் பேராசிரியர் ஜோசப்.
2010ஆம் ஆண்டு மே மாதம் வேறுவேறு கும்பல்கள் அவரைத் தேடி மூன்று முறை வந்துள்ளன. அதில் ஒருமுறை ஜோசப் அவர்களிடம் சிக்கியிருக்க வேண்டியது.
முதலில், தங்களை மாணவர்கள் என்று கூறிக்கொண்டு ஆறு பேர் அவர் வீட்டிற்கு வந்து, அவரைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை.
இரண்டாவது முறை, சிலர் கும்பலாக வந்து அதிலுள்ள ஒருவரின் குழந்தை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கு நன்கொடை வேண்டும் எனக் கூறி, அவருக்குத் தெரிந்த ஒருவர்தான் பரிந்துரை கடிதம் அளித்ததாக ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.

"அந்த கடிதத்தை வாங்கி விட்டு நான் வீட்டிற்குள் வந்துவிட்டேன். அதில் என் பெயர் இருந்தது. ஒருவேளை அது கடித வெடிகுண்டாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு கதவைப் பூட்டிவிட்டேன்" என்கிறார் ஜோசப்.
தன்னை அவர்கள் தாக்க வருவார்கள் என்ற விஷயத்தை பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னபோது அவர் வெளியே செல்லும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், தன்னுடைய வயதான அம்மா மற்றும் குடும்பத்தாரைவிட்டு அவரால் செல்ல முடியவில்லை.
ஜோசப் காவல்துறையினரிடம் விஷயத்தைக் கூறியதும், அவர் வீட்டைச் சுற்றி இரவு ரோந்தில் ஈடுபடுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக, சிலர் வந்துள்ளனர். அதில் இருவர் தாங்கள் வங்கியில் இருந்து வருவதாகவும், ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும் கூறியுள்ளார். அப்போது, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரரைப் பார்ப்பதற்காக ஜோசப் வெளியே சென்றிருந்தார்.
அப்போது முதல், ஜோசப்பின் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரதான மற்றும் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டு உள்ளிருந்து ஒருவர் சாலையைக் கண்கானித்துக்கொண்டே இருந்தார்.
இரண்டு கத்திகளை வாங்கி தன்னுடைய அறையில் திரைக்குப் பின்னால் ஜோசப் மறைத்து வைத்தார். அவர் அரிதாகவே வெளியே சென்று வந்தார்.
ஆனால், இந்த அதிர்ஷ்டம் அவர் தாக்கப்பட்ட அன்று கைகொடுக்கவில்லை.

பட மூலாதாரம், PTI
இந்த சம்பவத்தோடு தொடர்புடைய 31 பேரை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
மொத்தம் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 பேருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பினர் குற்றவாளிகளுக்கு மென்மையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மேல்முறையீடு செய்தனர். அந்த மனு நிலுவையில் உள்ளது.
மேலும் 11 பேர் பின்னர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். இதில் சுமார் 400 பேர் சாட்சியமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவம் நடந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில், பேராசிரியர் ஜோசப் நீதிமன்ற உத்தரவின்படி தண்டனை பெற்றவர்களிடமிருந்து எட்டு லட்ச ரூபாய் இழப்பீடு பெற்று வருகிறார்.
சம்பவத்தின் போது கேரள காவல்துறையின் தலைமை அதிகாரியாக இருந்த ஜேக்கப் புன்னூஸ், தான் விசாரித்த வழக்குகளிலேயே இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல் என்று பிபிசியிடம் கூறினார்.
"தாக்குதல் நடத்தப்பட வேண்டியவரை அடையாளம் காண்பது, தாக்குதல் இடம் தேர்ந்தெடுப்பது என நிறைய திட்டமிட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளனர். இரண்டு தப்பிச் செல்லும் கார்கள் உட்பட மூன்று வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள்" என்கிறார் ஜேக்கப் புன்னூஸ்.
இந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டுவதற்காக வெவ்வேறு இடங்களில் குறைந்தது நான்கு முறைகள் அவர்கள் சந்தித்துள்ளனர். பேராசிரியர் ஜோசப்பை வீட்டில் தாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததும், ஒரு மினி வேனை வாங்கி தவறான நம்பர் பிளேட்களை பொருத்தியுள்ளனர். ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஜோசப் தேவாலயத்திற்குச் செல்லும் வழியைப் பார்ப்பதற்காக அவரைப் பின்தொடர்ந்துள்ளார்.

"தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் புதியவை. அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தனர். தாக்கியவர்களில் ஒருவர் சிறிய தவறு செய்தார். அவர் தனது புதிய தொலைபேசியில் புதிய சிம் கார்டை சோதிக்க முயன்றார். அதற்காக ஒரு எண்ணை அழைத்து, பிறகு அழைப்பைத் துண்டித்துவிட்டார். அந்த எண்ணை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்கிறார் புன்னூஸ்.
"இது மாஃபியா பாணி தாக்குதல். இந்த வழக்கை விரைந்து முடித்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் பேராசிரியர் ஜோசப்பிற்கு உண்மையான சோதனை அதன் பிறகுதான் தொடங்கியது.
மருத்துவமனையில் இருந்து ஜோசப் வீடு திரும்பிய ஒரு மாதத்திலேயே கல்லூரி நிர்வாகம் அவரைப் பணி நீக்கம் செய்தது.
அதை எதிர்த்து கேரளாவில் பெருமளவில் போராட்டங்கள் நடந்தன. இரு போராட்டக்காரர்கள் கல்லூரிக்கு வெளியே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
"உணர்ச்சி அற்றவர்களால் மட்டுமே இந்த மோசமான சூழ்நிலைகளைக் கவனிக்காமல், மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்போது அவரைப் பணியிலிருந்து நீக்கியிருக்க முடியும்" என்று ஓர் உள்ளூர் செய்தித்தாள் தலையங்கம் எழுதியது.
பேராசிரியரின் வாழ்க்கை அதன் பிறகு வேகமாக சரிந்தது.

2010 மற்றும் 2011ஆம் ஆண்டில் சேதமடைந்த கால், முன் கை மற்றும் விரல்களைச் சரி செய்வதற்காக தொடர் அறுவை சிகிச்சைகள் ஜோசப் செய்ய வேண்டியிருந்தது. தனது வலது கையில் அனைத்து உணர்ச்சிகளையும் அவர் இழந்துவிட்ட நிலையில், இடது கைகளால் எழுதுவதற்கும் உண்பதற்கும் பழகத் தொடங்கினார்.
அடகுக் கடைகளில் உள்ள நகைகளை மீட்க வேண்டும், குழந்தைகளின் கல்விக்கடன் செலுத்த வேண்டும் உட்பட பல நெருக்கடிகளை அவர் குடும்பம் சந்தித்தது. பேராசிரியர் ஜோசப்பின் மனைவி சலோமி, வேலைக்குச் செல்வது குறித்து யோசிக்கத் தொடங்கினார்.
2013 நவம்பரில் அவர் மீதான அவதூறு குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், இந்தக் கேள்வியை சில முஸ்லிம்கள் தவறாகப் புரிந்து கொண்டு சர்ச்சையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதன் பிறகு, அவர் வாழ்க்கையில் நம்பிக்கை பிறந்தது போல தெரிந்தது.
ஆனால், இதை மகிழ்ச்சியின் குறுகிய தருணம் என்கிறார் ஜோசப்.
அதன் பிறகு, 48 வயதான அவரது மனைவி சலோமி மன அழுத்தத்திற்கு ஆளானார். தான் சாக விரும்புகிறேன் என்று அவர் கூறியதாக ஜோசப் கூறுகிறார். இதையடுத்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லிகள், கத்திகள், அவர் பயன்படுத்தும் மாத்திரைகள் என அனைத்தையும் ஜோசப் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் தொடங்கினார்.
எனினும், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு மதிய உணவுக்குப் பிறகு, சலோமி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் கேரளாவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்தக் குடும்பத்தின் இன்னல்களுக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

சலோமி இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, பேராசிரியர் ஜோசப் கல்லூரியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அப்போது, அவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களே இருந்தன.
இது தொடர்பான உள்ளூர் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையிலேயே ஜோசப் மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும், அதற்கு பொதுமக்களின் அழுத்தம் காரணமல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜோசப் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதால், அவரால் தனது சம்பள பாக்கி மற்றும் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும். அவருக்கு ஆதரவு தெரிவித்த மற்றொரு மறைமாவட்டம், இந்தச் சம்பவத்தால் ஜோசப்பின் வாழ்க்கை வாழும் நரகமாக மாறிவிட்டதாக அறிக்கை வெளியிட்டது.
இந்தத் தாக்குதலை தான் ஏற்றுக்கொண்டதாகக் கூறும் ஜோசப், ஆனால் சலோமியின் மரணம் இன்னும் என் நினைவில் உள்ளது என்கிறார்.
தற்போது எழுத்தாளராக மறுபிறவி எடுத்துள்ளதாக ஜோசப் கூறுகிறார். இடது கையால் 700 பக்கங்களுக்கு தனது நினைவுக் குறிப்புகளை 'ஆயிரம் வெட்டுகள்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், 30,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தற்போது சிறுகதைத் தொகுப்பு வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
தன்னுடைய ஓய்வூதியம் மூலம் வீட்டை விரிவுபடுத்திய அவர், தன்னுடைய 95 வயது அம்மா, 35 வயது மகன், பொறியாளராக பணி செய்யும் மருமகள், மூன்று வயது பேரனுடன் வசித்துவருகிறார்.

தாக்குதலின் போது காரில் உடனிருந்த அவரது சகோதரி கன்னியாஸ்திரியாக உள்ளார். அவரும் அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு சென்று வருகிறார்.
தன்னைத் தாக்கியவர்கள் மிகப் பெரிய விளையாட்டின் சிப்பாய்கள் என்பதால் அவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறும் ஜோசப், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை வரவேற்கிறார்.
ஆனால், நீதி வழங்கும் முறையில் உள்ள துரிதமற்ற தன்மை அவரைச் சோர்வடைய வைக்கிறது.
"ஒவ்வொரு முறையும் வழக்குடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யும் போது நான் சிறைக்குச் சென்று அவரை அடையாளம் காணவும், நீதிமன்றங்களைச் சுற்றியும் வர வேண்டும். நான் ஒரு வருடத்திற்கு முன்பு நீதிமன்றத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்தேன். தாக்குதலின் போது நடந்த அனைத்து விவரங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளது," என்கிறார் அவர்.
அவர் குடும்பம் எதிர்கொண்ட இந்தக் கொடூரத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து கேட்டபோது, அவர் ஒரு கதையைச் சொன்னார்.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தனது குடும்பத்துடன் ஒரு சுற்றுலா பயணத்தில் இருந்தபோது, தனது எட்டு வயது மகளுடன் ஒரு மாணவியை சந்தித்துள்ளார்.
அப்போது, இவர்தான் ஜோசப் சார், துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தைச் சந்தித்து விட்டார் என தன் மகளிடம் அந்த மாணவி அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்கு, கை துண்டிக்கப்பட்ட செய்தி கேட்டதும் சத்தமாக அழுதீர்களே, அது இவர்தானா என்று அந்த மகள் கேட்டதாக ஜோசப் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












