பெண்கள் மீது ஆண்களின் வன்முறை தொடர்வது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடா?

பட மூலாதாரம், BBC/Nikita Deshpande
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச நாள். அதையொட்டி இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.
இந்தியாவில் பாலின வன்முறைக்கு பலியான பெண்களின் பட்டியல் நீளமானது. இப்படியான மரணங்களுக்கு காரணமாக இருக்கும் ஒரு செயல்பாடு, இத்தகைய இழப்புகள் சமூகத்தில் நிகழும் போதெல்லாம் விவாதப் பொருளாக மாறுவதுண்டு. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஸ்டாக்கிங் என்றழைக்கப்படும் 'விடாது பின்தொடரும் செயல்பாடுக்கு' பலியான பெண்களின் பட்டியல் மிக நீளமானது.
பள்ளி, கல்லூரி காலங்களில் மனதுக்குப் பிடித்த பெண்ணை அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் விடாமல் பின்தொடர்ந்து செல்வது, அவருக்குப் பேச விருப்பமில்லை என்றாலும் பேச முயன்று அவருடைய தனியுரிமையைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்பாடுகளை பலரும் பார்த்திருப்போம். சில நேரங்களில் நாமே கூடச் செய்திருப்போம்.
நம்முடைய மனங்களில், இத்தகைய செயல்பாடுகளின் மூலம் நாயகத்தன்மையை வெளிப்படுத்துவதைப் போன்ற எண்ணமே தோன்றியிருக்கும். ஒரு பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவரிடம் தொடர்ந்து பேச முயல்வது, அவரை கட்டாயப்படுத்தி தன்னிடம் பேசுமாறும், தன்னை விரும்புமாறும் அழுத்தம் தருவது ஆகிய செயல்பாடுகளை 'நாயகத்தன்மை' நிறைந்ததாக திரைப்படங்கள் இயல்பாக்கிவிட்டதாக ஒரு கூற்று உண்டு.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டாக்கிங்: ஆணாதிக்க உலகின் வெளிப்பாடு
"காதலுக்கும் ஸ்டாக்கிங் என்ற குற்றத்திற்கும் இடைவெளி பெண்ணின் விருப்பத்தில் தான் இருக்கிறது. பெண்ணுக்கு விருப்பமில்லை என ஒதுங்காமல் தன்னுடைய நாயகத்தன்மையை வெளிப்படுத்தும்போது அது ஸ்டாக்கிங் குற்றமாகிறது," என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியலாளருமான நிவேதிதா லூயிஸ்.
"என் விருப்பத்தை உன்னிடம் சொல்லும்போது ஓர் ஆண் மகனான என்னையே நீ வேண்டாமனெ மறுக்கிறாயா" என்ற மனப்பான்மையில் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதால், வன்முறையைக் கையில் எடுப்பதைப் போன்ற உச்சகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்று தான் கருதுவதாகக் கூறுகிறார் நிவேதிதா லூயிஸ்.
ஆனால், ஒரு கட்டத்தில் இவற்றைக் கண்டு அஞ்சி, பின்வாங்கிக் கொண்டிருந்த பெண்கள், அத்தகைய செயல்பாடுகளைக் கண்டிப்பதும் எதிர்த்துச் செயல்படுவதும் அதிகரித்தது. அதற்கான எதிர்வினைகளாக ஆண்களில் சிலர் வன்முறையைக் கையில் எடுக்கத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது.
"பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை, உரிமைகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய தைரியத்தை வழங்கியுள்ளது. ஆணாதிக்க உலகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆண்கள் அவர்களுடைய வீடுகளில் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள், ஆணாதிக்க தன்மைக்கு உட்பட்டு, அதன் வரையறுக்குள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டவர்கள். ஆகவே, இப்போதைய நவநாகரிக பெண்களைப் பார்க்கையில் தங்களுடைய ஆதிக்கத்தை இழப்பதாக அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அதுவே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம்," என்கிறார் நிவேதிதா.
"கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளை, விருப்பு வெறுப்புகளை அதிகம் முன்னிலைப்படுத்துகிறார்கள், அதை யாரும் வந்து கொடுக்க வேண்டுமெனக் காத்திருக்காமல் அவர்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்கள் மத்தியில் இது புதிதாகத் தெரிகிறது. ஒருவரைப் பிடிக்கவில்லை அல்லது ஓர் உறவில் நீடிக்க விருப்பமில்லை என்றால் அதை தைரியமாக வெளிப்படுத்துகிறார்கள். அதை நடைமுறையில் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகக்கூடிய சமூக உளவியல் பிரச்னையாகத் தான் இந்தச் சம்பவங்களைப் பார்க்க வேண்டும்," என்கிறார் பேராசிரியர் முனைவர்.ஆ.தே.ரேவதி.


குடும்ப வன்முறை, இடிப்பது, தொடுவது, பாலியல் தொந்தரவு போன்ற செயல்பாடுகள் பாலியல் குற்றங்களாகக் கருதப்படுவதைப் போலவே, ஸ்டாக்கிங் எனப்படும் விடாது பின்தொடரும் செயலும் பாலியல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஸ்டாக்கிங் வன்முறையாக மாறும்போது என்றில்லை, விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து, இடையூறு செய்வதும் கூட பாலியல் குற்றம் தான்.
"விருப்பங்களை வெளிப்படையாகப் பேசினால் திமிரானவள்"
"ஸ்டாக்கிங் செய்வது, அதை எதிர்கொள்ளும் பெண்களிடையே அச்சத்தைத் தூண்டுகிறது. இது அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாகச் சீர்குலைக்கிறது" என்று 2007ஆம் ஆண்டு பாலின ஆய்வுகள், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு, மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்விதழான டெமிடாவில் வெளியான ஓர் ஆய்வு குறிப்பிட்டது.
"இப்போது தான் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இத்தகைய வன்முறைகள் பெண்களிடையே ஓர் அச்சத்தை ஏற்படுத்தும். பெண்கள் முன்னேற்றம் அடைந்துவரும் சூழலில், போக்குவரத்து, வெளியே செல்வது போன்றவற்றில் இதனால் ஏற்படும் அச்சம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, இதை பெண் சமூகத்திற்கே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஆபத்தாகப் பார்க்க வேண்டும்," என்கிறார் நிவேதிதா.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பெண்களிடையே பல்வேறு நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும். தாங்கள் பின்தொடரப்படுவதைத் தவிர்க்க, அடிக்கடி செல்லும் வழிகளைத் தவிர்ப்பார்கள், வெளியில் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பார்கள், கைபேசி அழைப்புகளில் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தவிர்ப்பது, கைபேசி எண்ணையே மாற்றுவது என்று அச்சம் காரணமாகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இது அவர்களை மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கும்.
அதோடு, இத்தகைய செயல்பாடுகள் பெண்களின் முன்னேற்றத்தையே பாதிக்கும். இன்னொருபுறம், பெண்கள் சமூகத்தில் அடைந்த முன்னேற்றத்தால், அவர்கள் தைரியமாகப் பேசுவதை, தன்னை மறுப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஓர் ஆண் இல்லாதபோது, 'என்ன இந்தப் பெண் இவ்வளவு திமிரோடு நடந்துகொள்கிறாள்' என்பதைப் போன்ற அணுகுமுறையை அவர் கையாளுவதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரேவதி. "அப்போது பெண்ணைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர, 'அவள் எனக்கானவள், என் இஷ்டப்படி அவள் நடக்க வேண்டும்' என்ற தனது மனப்பான்மையை நிலைநாட்ட, வன்முறையைக் கையாள்வதும் அது கொலை வரைக்கும் செல்வதும்கூட நடக்கிறது."
பிற்போக்கான தாய்மார்களின் வளர்ப்பும் ஒரு காரணம்
இன்றைய இளம் பெண்களிடையே இப்போது முற்போக்கு சிந்தனை அதிகமாகவே உள்ளது. ஆனால், அத்தகைய முற்போக்கு சிந்தனைகள், ஆண்களிடையே இல்லாததற்குக் காரணம் அவர்கள் வளர்க்கப்படும் விதம் என்று கூறுகிறார் முனைவர்.ரேவதி.
"இளம் தலைமுறையினராக இருக்கும் ஆண்களின் பெற்றோர் குறைந்தபட்சம் 50 வயதுடையோராக இருப்பர். அந்தப் பெற்றோரால் அவர்கள் ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் வளர்க்கப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பெண்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது, இடைவெளியைக் கொடுப்பது ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். வளர்க்கும் முறையில், கல்விமுறையில் மாற்றம் வரும்போது தானாக அனைத்தும் மாறும். ஆனால், இப்போதுள்ள இளம் ஆண்கள் பெரும்பாலும் பிற்போக்கான தாய்மார்களால் வளர்க்கப்படுவதால் அவர்களும் பிற்போக்கானவர்களாகவே இருக்கிறார்கள்," என்று கூறுகிறார்.
இதுமட்டுமின்றி, ஒரு பெண்ணை காதலிப்பது, அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவிப்பது ஆகியவை இயல்பு என்பன போன்ற உரையாடல்களை நம் சமூகத்திலுள்ள குடும்பங்கள் ஆண் குழந்தைகளிடம் தொடங்கவே இல்லை. இந்திய குடும்பங்களில், பதின்பருவ குழந்தைகளுக்கு முதலில் ஏற்படும் காதல் உணர்வு குறித்த உரையாடல்கள் நிகழ்வதே இல்லை.
இன்றளவும் காதல் என்பதைக் குற்றமாகக் கருதும் குடும்ப அணுகுமுறையே பெரும்பான்மையாக நிலவுவதால், தங்கள் பள்ளிப்பருவ காதல் குறித்தெல்லாம் மாணவர்கள் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. இதனால், காதலில் இணைவதும் காதலை இழப்பதும் இயல்புதான் என்ற அனுகுமுறையோ அல்லது ஒருவருடன் உறவில் இருக்கும்போது எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவமோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை.


அதுமட்டுமின்றி, "ஆண் குழந்தைகளிடையே தோல்வி என்பது வாழ்வில் இயல்பானது என்பதைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை. குறிப்பாக அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அவர்கள் நினைப்பதெல்லாம் கிடைத்துவிடும் என்ற மனப்பான்மையில் வளர்ப்பதும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வளர்க்கப்படும் விதமே, ஆண் குழந்தை என்ற தனி அணுகுமுறையில் தான் இருக்கிறது. இதனால் ஆணாதிக்க சுழலுக்குள் அவர்களும் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதோடு சேர்த்து, அவர்கள் பார்க்கக்கூடிய காட்சி ஊடகங்களில் பெண்ணை மட்டமாக நடத்துவது, ஸ்டாக் செய்வது ஆகியவற்றை நாயகத்தன்மையோடு பார்க்கும் வகையில் இருப்பது, அவர்களின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது," என்கிறார் நிவேதிதா லூயிஸ்.
ஒரு பெண்ணுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதிக்கும் முதல் நபர்
இந்தியாவின் மற்ற பெருநகரங்களில் சமூகவியல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள அளவுக்கு சென்னையில் ஏற்படாமல் இன்னும் பழைமைவாதத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதுகூட இத்தகைய குற்றங்களுக்குக் காரணமாக இருக்கலாமா எனக் கேட்டபோது, "நிச்சயமாக, நம் அடிப்படைக் கல்வி, கணிதம், வரலாறு, அறிவியலை கற்பிக்கும் அளவுக்கு மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மானுடவியலை கற்பிப்பதில்லை," என்கிறார் நிவேதிதா லூயிஸ்.
ஒரு பெண் அணியக்கூடிய ஆடை எதுவாக இருந்தாலும், அவரைப் பார்க்கும் ஆண் அந்தப் பெண்ணை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால், "பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி போன்ற பெருநகரங்களில் ஒரு பெண் சுதந்திரமாக ஆடை அணிந்து செல்வதைப் போல் சென்னையில் அணிந்து செல்ல முடியாது. அப்படி ஒரு பெண் சார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டுக்கொண்டு வெளியே வரலாமா என்றால் அதில் பல சிக்கல்கள் உள்ளன," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"இதை கல்விமுறையின் மூலம் நாம் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் அந்த பிற்போக்குத்தனங்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது நம் பண்பாடு, கலாசாரம். தமிழ் பெண் என்றால் புடவை, தாவணி அணிந்திருக்க வேண்டும். பெண் பிள்ளை அணிந்து செல்லும் ஆடையைக் கட்டுப்படுத்தும் முதல் நபர் அவருடைய தாயாகத்தான் இருக்கிறார்," எனக் கூறிய நிவேதிதா, இத்தகைய அணுகுமுறைக்கு நடுவே வளரும் ஆண் குழந்தை, வளரும்போதே பிற்போக்கான ஆணாதிக்க சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள் என்றார்.
ஒரு பெண் செய்யும் வேலை, கல்வி, காதல், திருமணம், பாலியல் என்று எதன்மீது மற்றவரின் கட்டுப்பாடு திணிக்கப்பட்டாலும் அந்தக் கட்டுப்பாட்டை உடைக்கும் மனப்பான்மை பெண்களிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய மனப்பான்மையை ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தில் உருவாக்க வேண்டுமெனில், இளைய தலைமுறைக்கு கல்வி மற்றும் குடும்ப அமைப்பில் அது குறித்த புரிதலை அவர்கள் வளரும் போதே ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம்.
ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் வன்முறைகளுக்குத் தொடக்கமே ஆணாதிக்கச் சிந்தனை தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அத்தகைய ஆணாதிக்கச் சிந்தனை வெளியுலக ஆண்களிடம் மட்டுமே நிகழ்வதில்லை. தனது மகளின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்காமல் கட்டுப்பாடுகளைத் திணிக்கும் தாயிடம் இருப்பதும்கூட அத்தகைய பிற்போக்குத்தனமான ஆணாதிக்கச் சிந்தனை தான். அந்த மனப்பான்மையை உடைக்கும்போதே இந்தக் குற்றங்களும் உடையத் தொடங்கலாம் என்கிறார் நிவேதிதா லூயிஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













