மாணவர் பருவத்தில் திருமணம், தாலி கட்டும் நிகழ்வுகள்: தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பள்ளிச் சீருடையில் மாணவிக்கு மாணவன் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வது போன்ற காணொளி ஒன்று சமீபத்தில் வெகுவாக பரவிய நிலையல், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடப்பது ஏன்?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேருந்து நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு, ஒரு மாணவர் தாலி கட்டுவதாக காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலானது. இதில் சம்பந்தப்பட்ட மாணவி 12ஆம் வகுப்பு படித்துவருவதும் மாணவன் பாலிடெக்னிக்கில் படிப்பதும் தெரியவந்ததையடுத்து, மாணவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, தற்போது சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திருமண விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இப்படி நடப்பது ஒன்றும் முதல் முறையில்லை. வீடியோ வெளிவந்ததால், விவகாரம் பரபரப்பாகிவிட்டதே தவிர, தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இதுபோல நடக்கிறது என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.
இதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, கடந்த மார்ச் மாதம் திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர் காணாமல் போனார். பிறகு, அவர் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையும் காணாமல் போனார். அந்த இருவரும் திருச்சி எடமலைப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டனர். தாங்கள் இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர். அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
தொடரும் சம்பவங்களும் விளைவுகளும்
கடந்த ஏப்ரல் மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த மாணவர் ஒருவர் மாயமானார். பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவனின் பெற்றோர், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து விசாரணை தீவிரமடைந்ததில், மாணவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அவர் உடன் பழகிய மாணவியையே திருமணம் செய்து அங்கே குடும்பம் நடத்தி வந்தார்.
ஆனால், இருவரும் காணாமல் போன தருணத்தில் மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. மாணவி 18 வயது நிரம்பியவர். ஆகவே சிறுவனைக் கடத்திய குற்றத்தில் மாணவி மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்தது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார்.
கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி காணாமல் போனார். பிறகு, அவருக்கும் 19 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணமானது தெரியவந்தது. இதையடுத்து மாணவி மீட்கப்பட்டு, வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த ஆண்டுத் துவக்கத்தில், வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் திருச்சியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறை ஒன்றுக்கு வரச் சொல்லி, தாலி கட்டினார். பிறகு பாலியல் உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டிவந்தார். இது குறித்து மாணவியின் தாயார் புகார் அளிக்க, அந்த மாணவர் இப்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

- 'மீண்டும் இந்தி திணிப்பா?' - அமித் ஷா அறிக்கையால் கொந்தளிக்கும் தென் மாநிலங்கள்
- சாண வண்டுகள்: மனித தவறால் பாதிக்கப்படும் இந்த உயிரினம் வேளாண் நண்பன் தெரியுமா?
- பள்ளி சீருடையில் திருமணம் செய்த மாணவ, மாணவி மீது வழக்கு - வைரலாகும் காணொளி
- கேரள நரபலி: மாந்திரீகரின் சர்ச்சை திட்டம், இரண்டு பெண்களை பலி கொடுத்த தம்பதி - சமீபத்திய தகவல்கள்

தகாத உறவால் விபரீதம்
சென்னை அம்பத்தூரில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் தூக்கிலிட்டு தற்கொலைசெய்து கொண்டார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த மாணவனும் அவர் படித்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்த பெண்ணும் காதலித்ததும், அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயம் நடந்ததால், மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்திருக்கிறது. இப்போது அந்தப் பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் மாணவி ஒருவரும் 18 வயதை எட்டாத இளைஞர் ஒருவரும் பெங்களூர் சென்று திருமணம் செய்துகொண்டனர். பிறகு இருவரும் மீட்கப்பட்டனர்.
மேலே சொன்ன நிகழ்வுகள் எல்லாம் ஊடகங்களில் பதிவானவை. ஊடகங்களில் பதிவாகாத பல திருமணங்கள் இதுபோல இருப்பதாகச் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக, வட மாவட்டம் ஒன்றில் இதுபோல திருமணம் செய்துகொண்ட மாணவனும் மாணவியும் தங்கள் நண்பர்களுக்கு பீர் வாங்கிக் கொடுத்து, விருந்து வைத்துள்ளனர். இது குறித்துத் தெரியவரவும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி, அனைவரையும் மீட்டனர்.
இதுபோன்ற சிறுவயதுத் திருமணங்கள் தமிழ்நாடு முழுக்க மிகப் பெரிய பிரச்னையாக உருவாகிவருவதாக குழந்தைகள் நல ஆர்வலர்களும் பள்ளிக் கல்வி குறித்து கவனிப்பவர்களும் தெரிவிக்கிறார்கள்.
சட்ட நடவடிக்கைகள்
"கடந்த சில ஆண்டுகளில் குழந்தைகல் இப்படி ஓடிப்போவது அதிகரித்திருக்கிறது. அப்படி ஓடிப் போனவர்கள் மீட்கப்படும்போது, அந்த இருவரில் யார் 18 வயதைத் தாண்டியவர்களோ, அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. சில சமயங்களில் இருவரும் குழந்தைகளாக இருக்கிறார்கள். ஆகவே, சட்டத்திற்கு முரணாகச் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவாகிறது. இதற்குப் பிறகு இருவரது வாழ்க்கையுமே நாசமாகிவிடுகிறது. நமது சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை இது" என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரான தேவநேயன் அரசு.
எதையாவது செய்து தான் சாதித்தவனாகக் காட்ட வேண்டுமென நினைக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இது நடக்கிறது.
"சினிமாவில் தவறு செய்பவனை ஹீரோவாகக் காட்டுகிறார்கள். பேருந்தில் தொங்கிச் செல்வது ஹீரோயிசம் என நினைக்கிறார்கள். ரயிலில் தொங்கிக் கொண்டே பிளாட்பாரத்தில் காலை தேய்த்துச் செல்வது ஹீரோயிசமாக இருக்கிறது. இப்போது பெண் குழந்தைகளும் இதைச் செய்கிறார்கள். இதற்கு இணையான ஒரு செயலாகத்தான் திருமணத்தையும் பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் பார்க்கிறார்கள். எவ்வித மன முதிர்ச்சியும் இல்லாமல் அதைச் செய்துகொள்கிறார்கள். இது தனி நபர் பிரச்சனையல்ல. ஒரு சமூகத்தின் பிரச்னை" என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது, நீதி நெறி வகுப்புகளை நடத்த வேண்டும், பள்ளிக்கூடங்களுக்கு மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
"இதனை மனநலப் பிரச்னையாக அணுகுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் மனநல நிபுணர்களை நியமித்தால் குழந்தைகள் வந்து எல்லா பிரச்னைகளையும் சொல்லிவிடுவார்களா? பள்ளிக்கூடம், வீடு, சமூகம் என இந்தப் பிரச்சனையை முழுமையாக அணுக வேண்டும். அப்போதுதான், என்ன செய்ய வேண்டுமென்பதே நமக்குப் புரியும்" என்கிறார் பிரின்ஸ்.
குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறை ஒருபுறமிருக்க, குழந்தைகளால் நடத்தப்படும் வன்முறையும் பெருமளவில் அதிகமாகியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் தேவநேயன். "இந்தத் திருமணங்கள். பாலியல் உறவுகள் எல்லாம் வெறும் பாலியல் சார்ந்த விஷயம் மட்டுமே இல்லை. வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் சம்பாதிக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதற்குப் பணம் தேவைப்படுகிறது. இதற்காக தவறான வழியில் இறங்குகிறார்கள். முன்பைப் போல குழந்தைகள் குழுவாகச் செயல்படுவதில்லை. தனித்தனி தீவாக மாறிவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் ஆலோசகரை நியமித்தால் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள். சரியாகாது." என்கிறார் தேவநேயன்.
நகர்ப்புறங்கள் இந்த விஷயத்தில் மோசமெனப் பலரும் கருதினாலும், கிராமப்புறங்களில்தான் இது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது என்பது, மேலே உள்ள சம்பவங்களைப் பார்த்தாலே தெரியும். "நம் சமூகத்தில் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு இடமே இல்லை. ஆகவே கவர்ச்சி வார்த்தைகளை, தம்மிடம் அன்போடு சொல்லும் வார்த்தைகளை நம்புகிறார்கள். வீடுகளில் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். நல்ல முன்னுதாரணமான மனிதர்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களே ஆலோசகர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எளிதில் அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும்." என்கிறார் தேவநேயன்.
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அவர்களுக்கு முத்திரை குத்துவது, அதை சந்தேகப் பார்வையோடு பார்ப்பது, திட்டுவது, இணைத்துப் பேசுவது போன்றவற்றை செய்யக்கூடாது. இது போன்ற மாணவர்களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டால் அதனை பக்குவமாக்க கையாள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எப்படி தடுப்பது?
"மாணவர்களிடம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். எல்கேஜியில் உன்னுடன் பள்ளியில் சேர்ந்தவர்கள் இன்னும் எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்க வேண்டும். பள்ளியில் தொடர்ந்து 12வது படிப்பது மிகப் பெரிய வாய்ப்பு என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அவர்களுக்கு கிடைத்த சமூக வாய்ப்பு என்பதை புரிய வைக்க வேண்டும்" என்கிறார் பிரின்ஸ்.
இந்த விவகாரத்தில் இன்னொரு பெரிய பிரச்சனை, 18 வயதுக்குட்டவர்களைக் காதலிக்கும், திருமணம் செய்துகொள்ளும் 18 வயதுடைய நபர்களோ அல்லது சில மாதங்களே மூத்தவர்களோ போக்சோ சட்டத்தில் கைதாகும் அபாயம்தான்.
குழந்தைகள் உடல் ஈர்ப்பால் பழகும்போது, அதில் ஒரு குழந்தையையோ, இருவரையுமோ தண்டிப்பது சரியா என்பது குறித்து இந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் விவாதிக்கவிருக்கிறது. அதில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படலாம்.
ஆனால், குழந்தைகளுக்கிடையில் நடக்கும் இத்தகைய ஹீரோயிச திருமணங்கள், குழந்தைகளின் வாழ்வையும் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வாழ்வையும் பெரும் நெருக்கடியில் தள்ளிவிடுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













