கேரள நரபலி: மாந்திரீகரின் சர்ச்சை திட்டம், இரண்டு பெண்களை பலி கொடுத்த தம்பதி - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், BBC/ARUN CHANDRA BOSE
(எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில தகவல்கள் சில வாசகர்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.)
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் வசிக்கும் ரஷீத் என்கிற முகமது ஷாபி மற்றும் பத்தனம் திட்டாவில் உள்ள எலந்தூரைச் சேர்ந்த தம்பதி பகவல் சிங் மற்றும் லைலாவிடம் கொச்சி போலீஸார் நேற்றிரவு (அக்டோபர் 11) நடத்திய விசாரணையில் இரட்டை கொலைகள் குறித்த பல்வேறு தகவல்கள் பிபிசிக்கு தெரிய வந்துள்ளன.
பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
பலியான இரு பெண்களும் காணாமல் போனதாக, கொச்சி நகரின் கடவந்திரா காவல் நிலையத்திலும், எர்ணாகுளம் கிராமத்தைச் சேர்ந்த காலடி காவல் காவல் நிலையத்திலும் ஏற்கெனவே போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அவற்றின் மீதான விசாரணையில்தான் கேரள தம்பதி மற்றும் அவர்கள் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் நரபலிக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் பத்மா என்ற தருமபுரியைச் சேர்ந்த பெண் காணாமல் போனது தொடர்பாகவே போலீஸார் விசாரித்து வந்தனர். அதில் ரஷீத் என்கிற முகமது ஷாஃபியை விசாரித்தபோது, எலந்தூர் தம்பதிக்காக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அவரை கடத்தி நரபலி கொடுத்ததாக தங்களிடம் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அத்துடன் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி ரோஸ்லின் என்ற பெண்ணையும் இதேபோல கடத்தி வந்து நரபலி கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
கொச்சி போலீஸ் ஆணையர் பேட்டி

இந்த இரண்டு பெண்களும் காணாமல் போன இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கொல்லப்பட்டதாக கொச்சி காவல் துறை ஆணையர் நாகராஜு தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில் கிடைத்து வரும் தகவல்கள் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடந்து வருவதாகவும் கொலைக்கான உண்மையான நோக்கமும் அவை நடத்தப்பட்ட விதமும் விசாரணை முடிவிலேயே தெரிய வரும் என்றும் காவல் ஆணையர் கூறினார்.
"குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் சேர்ந்து நரபலி கொடுத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர்களால் கொல்லப்பட்ட இருவரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்னிலையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களின் உறவினர்கள் ஏற்கெனவே இங்கு வந்து விட்டனர். அக்டோபர் 13ஆம் தேதி (வியாழக்கிழமை) உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இறந்தவர்களின் திசு, ரத்த மாதிரி மற்றும் அவர்களின் உறவினர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரசாயன ஒப்பீடு செய்யப்பட்டு இறந்தவர்களின் அடையாளத்தை அதிகாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் உறுதிப்படுத்துவோம்," என்று பிபிசி தமிழிடம் பேசிய காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மூவரின் பங்களிப்பு மற்றும் குற்றம் தொடர்பான விசாரணை தகவல்கள் பற்றி கேட்டபோது, "தம்பதிக்கு முகமது ஷாஃபிதான் நரபலி யோசனையையே கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஷாஃபி மீது 2020இல் எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிக் காயப்படுத்தி கொலை செய்ததாக ஒரு கொலை வழக்கு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார். அது தவிர வேறு சில சிறிய குற்றங்களுக்கான வழக்குகளும் அவர் மீது உள்ளன. இந்த நபர்தான் தம்பதியை நரபலி கொடுக்க சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்காகவே ஒரு கதையை உருவாக்கி மூன்று ஆண்டுகளாக தம்பதியுடன் பேசிப்பழகி அவர்களை இணங்கச் செய்திருக்கிறார் ஷாஃபி. மற்றபடி அந்த தம்பதி மீது வேறு முன்குற்றங்கள் நிகழ்ந்ததற்கான தகவல்கள் இதுவரை நடந்த விசாரணையில் தெரிய வரவில்லை," என்று ஆணையர் நாகராஜு குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு உள்ளூர் அளவிலும் மாநிலத்திலும் ஒருவித பீதி ஏற்பட்டிருப்பதாக நாம் கூறியபோது, "நடந்த சம்பவத்தால் ஒருவித பதற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். பொதுவாகவே கேரள மக்கள் இதுபோன்ற குற்றங்களை வெறுக்கக் கூடியவர்கள். இத்தகைய செயல்பாடுகளை அவர்கள் எதிர்க்கவே செய்வர். அரிதினும் அரிதாக நடந்த இதுபோன்ற சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் மேலும் விழிப்புடன் இருப்பார்கள். நாங்களும் இருப்போம்," என்கிறார் காவல் ஆணையர் நாகராஜு.

பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில், ரோஸ்லினை அழைத்து வர எவ்வளவு ரூபாய் வாங்கப்பட்டது என்பதை முகமது ஷாபி குறிப்பிடவில்லை என தெரிகிறது.
முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் 'ஸ்ரீதேவி' என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார்.
பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.
மூவரின் பின்னணி என்ன?
இந்த தம்பதியில் பகவல் சிங் உள்ளூரில் ஆயுர்வேத பரம்பரை மருத்துவராகவும் மசாஜ் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மனைவி அவருக்கு உதவி வந்துள்ளார். முகமது ஷாஃபி மாந்திரீகராக உள்ளூரில் அறியப்படுகிறார்.

பண ஆசையில் கேரள தம்பதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா செல்வச்செழிப்போடு, வாழும் நோக்கத்துக்காக இந்த நரபலி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கொச்சி நகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் சசிதரன் கூறுகையில், "ஆரம்பத்தில் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவராகவே ஷாஃபி காணப்பட்டார். எதையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். கடைசியில் அவரை ஒப்புக் கொள்ள வைக்க அறிவியல்பூர்வ விசாரணை முறைகளையும் பிற நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. கடவந்திராவிற்கும் திருவல்லாவிற்கும் இடையே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காணாமல் போன பத்மாவுடன் ஷாஃபி ஒரு வாகனத்தில் நுழைந்த மங்கலான காட்சி மூலம் அவர்களின் அடையாளத்தை மீட்பது சவாலாக இருந்தது. அதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது," என்று தெரிவித்தார்.
நரபலி கொடுப்பதற்காக ஒரு பெண்ணுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்படி பத்மாவை ஒப்படைக்க முகவராக செயல்பட்ட முகமது ஷாஃபிக்கு அந்த பணம் தரப்பட்டுள்ளது. அதில், ரூ. 15 ஆயிரத்தை முன்பணமாக முகமது ஷாஃபி வாங்கியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், BBC/ARUN CHANDRA BOSE
"பதினோரம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவர் தமது 16-17ஆவது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். மாநிலத்தின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் அவர் சுற்றியிருக்கிறார். கிடைத்த வேலைகளை செய்திருக்கிறார். கடைசியில் தமது நரபலி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் லாட்டரி சீட்டுகளை விற்கும் வெளி மாநில பெண்களை நோட்டம் பார்த்து அவர்களுக்கு புதிய வேலை ஆசை காட்சி தமது சதியை செயல்படுத்தியிருக்கிறார்," என்று புலனாய்வாளர்கள் நம்மிடையே தெரிவித்தனர்.
"இப்படியொரு சம்பவம் கேரளாவில் அசாதாரணமாக நடந்துள்ளது," என்று பகவல் சிங்கின் வீடு அருகே வசிப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், ARUN CHANDRA BOSE
இந்த நிலையில், பத்மா மற்றும் ரோஸ்லின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பத்மா தமது முடிக்கு அணியும் கிளிப்பை வைத்து, அது அவரது உடல்தான் என அவரது சகோதரி உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, ஷாஃபியிடமிருந்து தப்பிய பெண் என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு அளித்த பேட்டியில், ஷாஃபி மீது கொச்சி களமசேரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை மிதித்துக்கொன்றதாக வழக்கு உள்ளது. நான் அதிர்ஷ்டவசமாக அவரிடம் இருந்து தப்பித்தேன்," என்று தெரிவித்தார்.
நர மாமிசத்தை சாப்பிட்டார்களா?
இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் கைதான மூன்று பேரும் வெட்டப்பட்ட உடல்களை சமைத்து சாப்பிட்டதாக எந்த தகவலும் இல்லை என்று காவல் ஆணையர் நாகராஜு தெரிவித்தார்.
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரும் வாக்குமூலத்தை வைத்து மட்டும் விசாரணை நடத்த மாட்டோம். உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் எப்படி குற்றம் நிகழ்த்தினோம் என்பதை சம்பவ பகுதியில் செயல்முறையில் காட்டச் செய்து அதன் அடிப்படையிலும் அறிவியல்பூர்வமாகவும் நடந்த குற்றத்தை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். எனவே, அந்த ஆதாரங்களை நோக்கியே எங்களுடைய விசாரணையின் போக்கு இருக்கும் என்று காவல் ஆணையர் கூறினார்.
மத்திய அமைச்சரின் சர்ச்சை குற்றச்சாட்டு
இந்த நிலையில், கேரளவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் இரட்டை நரபலி சர்ச்சை தொடர்பாக கேரள அரசை விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மாநில காவல்துறையின் "தாமதமான நடவடிக்கை இது" என்றும், இந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் முரளிதரன் குற்றம்சாட்டினார்.
இத்தகைய சூழலில் இரண்டு நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் பகவல் சிங், லைலா, முகமது ஷாஃபி ஆகிய மூன்று பேர் எர்ணாகுளம் துணை நீதிமன்றம் மற்றும் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மூவரையும் அக்டோபர் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது ஷாஃபி மற்றும் பகவல் சிங் காக்கநாடு மாவட்ட சிறைக்கும் லைலா பெண்கள் சிறைக்கும் அழைத்துச் சென்று நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













