மூடநம்பிக்கை கொலை: தஞ்சாவூரில் மந்திரத்தை நம்பி 6 மாத பெண் குழந்தையை பலி கொடுத்த தாத்தா, பாட்டி கைது

குழந்தையின் கால்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

(இன்று 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக, அக்குழந்தையின் தாத்தா, பாட்டி மற்றும் மந்திரவாதியை காவல் துறையினர் கைது செய்ததாக, தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

மல்லிப்பட்டினம் சாபிஇமாம் தெருவை சேர்ந்த தம்பதியர் நசுருதீன் - ஜாலிகா. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இத்தம்பதியர், நசுருதீனின் தாய், சகோதரர், சித்தப்பா குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஜாலிகாவின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 6 மாத பெண் குழந்தை அருகில் கிடந்த இறால் பெட்டியில் இறந்து கிடந்தது.

குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி, இரவோடு இரவாக அடக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஜாலிகாவின் சகோதரர் வாட்சப்பில் அனுப்பிய தகவல், அப்பகுதியில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக, சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து, போலீசார் விசாரணையில், குழந்தையை கொலை செய்ததாக, நசுருதீனின் சித்தப்பா அசாருதீன், அவரது மனைவி சர்மிளா பேகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாசிபட்டிணத்தைச் சேர்ந்த மந்திரவாதி முகமது ஜலீம் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், அசாருதீனுக்கு உடல்நிலை சரியில்லாததால், மந்திரவாதி முகமது ஜலீமை சென்று சந்தித்துள்ளனர். அப்போது, அசாருதீனுக்கு தீயசக்தி பிடித்துள்ளதாகவும், ஆடு, கோழியை பலியிட்டால் சரியாகும் எனவும், மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

ஆனால், அவ்வாறு செய்தும் அசாருதீனின் உடல்நிலை சரியில்லாததால், 6 மாத குழந்தையை இறால் பெட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

படுகர் பழங்குடியின 8 வயது சிறுவன் அர்ச்சகராக தொடர தடை கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம்
படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

படுகர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 8 வயது மாணவர், கோயில் அர்ச்சகராக தொடர தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஸ்ரீ ஹெத்தை கோயிலில் படுகர் பழங்குடியின வழக்கப்படி, அர்ச்சகராக உள்ள 8 வயது சிறுவனை, அதிலிருந்து விடுவித்து, அச்சிறுவன் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு, உள்ளூரைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டி.சிவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அச்சிறுவன், 'இல்லம் தேடிக் கல்வி' உள்ளிட்ட வேறு வழிகளில் தொடர்ந்து படிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அதிகாரி பாலமுருகன் தாக்கல் செய்த அறிக்கையில், அச்சிறுவன் தற்போது 3-ம் வகுப்பு படித்து வருவதாகவும், அக்கிராமத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் தகுதிவாய்ந்த ஆண் ஆசிரியர் மூலம் வீட்டிலேயே கல்வி கற்கும் வகையில், அனைத்து பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை செயல் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் பி.டி.ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் முக்கிய கோரிக்கை தீர்க்கப்பட்டுள்ளதாக கூறி, அவ்வழக்கை தள்ளுபடி செய்தனர்.

பிரதமர் மோதி இந்துவா, இந்துத்துவவாதியா? ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி: கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோதி இந்துவா, இந்துத்துவவாதியா என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளதாக, தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அமேதி மாவட்டத்தின் ஜக்தீஷ்பூர் பகுதியிலிருந்து ஹரிமௌ கிராமம் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நடைபயணம் மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, ஹரிமௌவியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஒரு இந்து அநீதிக்கு எதிராகப் போராடுவார் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதேவேளையில், ஒரு இந்துத்துவவாதி காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே போன்றவர்.

பிரதமர் நரேந்திர மோதி தன்னை இந்து என்று கூறிவருகிறார். அவர் எப்போது உண்மையைப் பாதுகாத்துள்ளார்? அவர் இந்துவா அல்லது இந்துத்துவவாதியா?

ஒரு இந்துத்துவவாதி கங்கையில் (அண்மையில் பிரதமர் மோதி, கங்கையில் நீராடியதை கங்கையில் நீராடியதைச் சுட்டிக்காட்டி) தனிமையில் புனித நீராடினார். ஆனால், ஒரு இந்து கோடிக்கண்ககான மக்களுடன் சேர்ந்துதான் புனித நீராடுவார்" என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: