கேரளாவில் இரு பெண்களை நரபலி கொடுத்த தம்பதி; 3 பேர் கைது - என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை கொன்றதாக கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பண ஆசையில் மந்திரவாதி என அறியப்பட்டவரின் யோசனையைக் கேட்டு இரண்டு பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல்சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்படுகிறார்.
காலடியில் லாட்டரி சீட்டு விற்ற 49 வயது பெண் ரோசிலின். இவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் வசிக்கும் இவரது மகள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று, தனது தாய் காணாமல் போய் விட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் புலனாய்வு செய்து வந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற தமிழகத்தின் தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற 52 வயது பெண் காணாமல் போனதாக போலீஸுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இந்த இரு பெண்கள் காணாமல் போன வழக்கை போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கில் துப்பு துலங்கியது குறித்து கடவந்திரா போலீஸார் பிபிசி தமிழிடம் விவரித்தனர்.
"பத்மா என்ற பெண்ணை ஒரு நபர் அழைத்துச் சென்றது சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் கண்டறியப்பட்டது. விசாரணையில் அந்த நபர் ரஷித் என்ற முகமது ஷஃபி என்று தெரிய வந்தது. இந்த நபர், பத்தினம்திட்டாவின் திருவல்லாவில் வசித்து வரும் பரம்பரை மருத்துவரான பகவல் சிங், அவரது மனைவி லைலாவுக்காக அந்த பெண்ணை கடத்தி அழைத்து வந்ததாக அறிந்தோம். உள்ளூர்வாசியான இந்த தம்பதிக்கு பண கஷ்டம் இருந்துள்ளது. அந்த கஷ்டம் நீங்க நரபலி கொடுக்குமாறு முகமது ஷஃபி அறிவுரை வழங்கி சம்மதிக்கச் செய்துள்ளார். அதன் பேரில் தம்பதியின் வீட்டுக்கு நரபலி கொடுக்க பத்மா அழைத்து வரப்பட்டுள்ளார்," என்று போலீஸார் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கு தொடர்பாக கேரள காவல்துறையின் தென் மண்டல தலைவர் (ஐ.ஜி) பிரகாஷ் கூறும்போது, "எர்ணாகுளத்தில் இருந்து இரண்டு பெண்களை வெவ்வேறு காலகட்டங்களில் தம்பதியின் வீட்டுக்கு கொண்டு வர ரஷித் என்கிற முகமது ஷஃபி உதவியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் ஒரு பெண்ணை அழைத்து நரபலி கொடுக்கும் விஷயத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக சந்தேகம் இருந்தது. ஆனால், விசாரணையின் போக்கில்தான் பத்மா மட்டுமின்றி மேலும் ஒரு பெண்ணும் நரபலி கொடுத்ததாகவும் இந்த விவகாரத்துக்கே மூளையாக இருந்ததே முகமது ஷஃபிதான் என்றும் தெரிய வந்தது," என்று தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

அதிர்ச்சிகரமான இந்த தகவல் குறித்த போலீஸாரின் புலனாய்வு குறித்து கொச்சி நகர காவல் ஆணையர் நாகராஜு சக்கிலம் பேசினார்.
"காணாமல் போனதாக கூறப்பட்ட பத்மா தொடர்பாக விசாரித்தபோது, அவரது செல்பேசியின் கடைசி தொலைத்தொடர்பு கோபுர இருப்பிட (டவர் லொகேஷன்) விவரத்தை வைத்து அவருடன் ஷஃபி தொடர்பில் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தடுத்து வைத்து விசாரித்ததில் திருவல்லாவில் உள்ள தம்பதியின் வீட்டில் மத சடங்கு என்ற பெயரில் இரு பெண்களை நரபலி கொடுத்ததாக ஷஃபி கூறினார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட தம்பதியை விசாரித்தோம். அப்போது பத்மா போலவே சில மாதங்களுக்கு முன்பு ரோசிலின் என்ற பெண்ணை கடத்தி வந்து நரபலி கொடுத்த தகவலை கைதான தம்பதி ஒப்புக் கொண்டனர்," என்று காவல் ஆணையர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த வழக்கில் அறிய வேண்டிய மேலும் சில தகவல்கள் இருப்பதாகவும் அவை சரிபார்க்கப்பட்ட பிறகே இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதற்கான முழுமையான பின்னணி புரிய வரும் என்றும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
கேரளாவுக்கு பத்மா சென்றது ஏன்?

நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பத்மாவின் கணவர் ரங்கனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைப்பு நடத்தலாம் என்பதற்காக என் மனைவியை கேரளாவுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இப்படி ஒரு நிலைமை அவளுக்கு வரும் என்று தெரிந்திருந்தால் நான் அவளை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்திருக்கவே மாட்டேன் என்கிறார்.
"வயதாகி விட்டதால் என்னால் உழைக்க முடியவில்லை என்பதால் என் சார்பாக அவள் அங்கு சென்றாள். ஆனால் இப்படி ஒரு மரணம் அவர்களுக்கு வந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை வேறு. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது," என்கிறார் ரங்கன்.
ஆரம்பநிலை விசாரணையில், இரு பெண்களின் கொலைக்கும் முகாந்திரம் நரபலி என்பது தெரிய வந்துள்ளது. திருவல்லாவில் உள்ள எலந்தூர் அருகே தம்பதியின் வீட்டு முற்றத்தில் இரண்டு பெண்களின் உடல் உறுப்புகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அங்கு தோண்டும் பணிக்கான சட்ட நடைமுறைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் ரோசிலினின் மகள் மஞ்சு கடந்த ஆகஸ்ட் மாதம் தமது தாயைத் தேடி உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ளார். அப்போது தாயை காணாததால் அவரை கண்டுபிடித்துத் தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், தனது தாயார் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மூலமாகவே தமக்கு தெரிய வந்ததாகவும் போலீஸார் இன்னும் அந்த தகவலை தம்மிடம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் மஞ்சு கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













