திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு அளிக்கப்பட்டது ஏன்?

நஞ்சராயன் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு கைமாற்றப்பட்டதா
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பஞ்சாயத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். அந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள நிலம் தனியாருக்கு முறையற்று கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் மற்றும் வலசை வரும் பல அரிய வகை பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இங்கு ஆண்டுதோறும் 181 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 45 வகை வலசை பறவைகளும் அடக்கம். மேலும் இங்கு 76 வகையான தாவரங்களும் 11 வகையான பாலூட்டிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் இந்தப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பாக தமிழக அரசிடமும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நஞ்சராயன் குளத்தை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இங்கு ரூ.7.5 கோடி செலவில் பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நஞ்சராயன் குளத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள நிலம் தனியாருக்கு முறையற்று கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

குற்றச்சாட்டு என்ன?

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், `மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் நஞ்சராயன் குளம் அமைந்துள்ள பகுதியை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. இந்த குளத்தின் கரைக்கு எதிர்புரம் விகாஸ் சேவா டிரஸ்டுக்கு சொந்தமான விகாஸ் வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது.

விகாஸ் சேவா டிரஸ்டுக்கு குளத்தின் கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள 8.9 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை மாவட்ட நிர்வாகம் சந்தை மதிப்பை விட மிக குறைந்த விலைக்கு வழங்கியுள்ளது.

எப்போது தொடங்கியது?

நஞ்சராயன் குளத்தை ஒட்டிய பகுதியில் உள்ள நிலங்களை கடந்த 2000-ம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதன் உரிமையாளர்களிடமிருந்து வாங்கியது. அப்போது விகாஸ் சேவா டிரஸ்ட் நிறுவனர் ஆண்டவர் ராமசாமி உள்ளிட்ட ஐந்து பேர் தங்களுடைய நிலங்களை வழங்கியுள்ளனர்.

ஆனால் அதன் பின்னர் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த முடிவை கைவிட்டது. இந்த நிலம் திருப்பூர் பகுதி வளர்ச்சி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 2006-ம் ஆண்டு பெரியபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டது.

நஞ்சராயன் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு கைமாற்றப்பட்டதா

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு விகாஸ் சேவா டிரஸ்ட் வழங்கிய நிலம் உட்பட மற்ற நால்வரின் நிலத்தையும் சேர்த்து 8.9 ஏக்கர் நிலம் விகாஸ் சேவா டிரஸ்டிற்கு ஒரு கோடியே 43 லட்சத்திற்கு வழங்கப்பட்டது. கல்வி பயன்பாட்டிற்கு இந்த நிலம் வழங்கப்படுவதாக அப்போது பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஊத்துக்குளிக்கு உட்பட்ட அக்ரஹார பெரியபாளையம், சர்கார் பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் 13.77 ஏக்கர் நிலம் விகாஸ் சேவா டிரஸ்ட் சார்பாக திருப்பூர் மாநகராட்சி தானமாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலத்தை விகாஸ் சேவா டிரஸ்ட் வழங்கவில்லை. இதை காரணம் காட்டி தான் சிறப்பு சலுகை வழங்கி கல்வி பயன்பாட்டிற்கு எனக் கூறி நஞ்சராயன் குளம் அருகே பல கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.1.43 கோடிக்கு வழங்கியுள்ளனர்.

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. விகாஸ் சேவா டிரஸ்ட் பெற்றுள்ள நிலம் நஞ்சராயன் குளத்திற்கு நீர் வரக்கூடிய மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது.

இந்த முறைகேடுகளை எல்லாம் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து கடந்த ஆண்டு ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியுள்ளோம். மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு அழைத்துள்ளார்," என்றார்.

மனித சங்கிலி போராட்டம்

சரியான ஆவணங்கள் உள்ளன - விகாஸ் சேவா டிரஸ்ட்

இது தொடர்பாக விகாஸ் சேவா டிரஸ்ட் நிறுவனர் ஆண்டவர் ராமசாமி பிபிசி தமிழிடம் பேசுகையில், `நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. 2004-ம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது.

எங்கள் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான பெரியபாளையத்தில் 13.77 ஏக்கர் நிலத்தை எங்கள் டிரஸ்ட் சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்கு தான கிரயம் செய்து கொடுத்தோம். அதற்கு கைமாறாகதான் எங்கள் பள்ளிக்கு எதிரில் பயன்படாமல் புறம்போக்காக உள்ள நிலத்தை எங்கள் டிரஸ்டுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம்.

எங்களிடம் ஆவணங்கள் சரியாக உள்ளன. பெரியபாளையம் நிலத்தை தானமாகதான் வழங்கியுள்ளோம். அதே சமயம் தற்போது பெறப்பட்டுள்ள 8.9 ஏக்கர் நிலத்திற்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ரூ.1.43 கோடி செலுத்திவிட்டுதான் எங்கள் டிரஸ்ட் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

நஞ்சராயன் பறவைகள் சரணாலய நிலம் தனியாருக்கு கைமாற்றப்பட்டதா

மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சிக்கு பெரியபாளையத்தில் நிலத்தை எங்கள் டிரஸ்ட் உறுப்பினர்கள் நடராஜ் மற்றும் சின்னசாமி ஆகியோர்தான் வழங்கினார்கள். அதைதான் முறைகேடு நடந்துவிட்டது என்கிறார்கள்.

மேலும் மாவட்ட நிர்வாகம் முறையாக சரிபார்த்துதான் நிலப் பரிவத்தனைக்கு அனுமதித்துள்ளது. எங்கள் பள்ளிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்த மாவட்ட ஆட்சியரும் எங்கள் மீது எந்தக் குற்றச்சாடும் இல்லை என தெரிவித்திருந்தார். நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவை தீர்த்து வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது," என்றார்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் பிபிசி தமிழிடம் பேசுகையில், `நஞ்சராயன் குளத்தை ஒட்டிய ஓடையில் உள்ள ஒரு பகுதி நிலத்தை கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு இருப்பதாக நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் புகார் மனு அளித்திருந்தனர். இந்த மனு தொடர்பாக விசாரிக்க நேற்று 22.08.2022 புகார் அளித்தவர்களை நேரில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். விசாரணைக்கு வந்தவர்கள் உரிய ஆவணங்களை திரட்டி வருகிறோம். ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்கள். அதனால் ஒரு மாதம் கழித்து புகார் அளித்தவர்கள் உரிய ஆவணங்கள் அளித்த பின் மனு மீது விசாரித்து முடிவெடுக்கப்படும்," என்றார்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் செய்யும் பணியை 30 ஆண்டுகளாக செய்துவரும் ஜெய்ப்பூர் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: