மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பது ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி அடுக்கும் காரணங்கள்

இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்சார சட்டத்திருத்த மசோதாவை இன்று (ஆக. 08) நாடாளுமன்ற மக்களவையில் இந்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். அப்போது, திமுக, காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மாநில அரசுக்கான அதிகாரங்கள் பறிப்பு என, இம்மசோதா மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மக்களவையில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, இம்மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளின் நிலை என்னவாகும் என்பதை இந்திய அரசு விளக்க வேண்டும் என கூறினார்.
மசோதாவுக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அறிமுக நிலையிலேயே அது நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பலாம் என்று அமைச்சர் ஆர்.கே. சிங் பரிந்துரை செய்தார். இதையடுத்து மசோதாவை நிலைக்குழுவுக்கு சபாநாயகர் அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் திமுக தலைமை அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது விரிவாகவே விளக்கம் அளித்தார். அதன் விவரம்:
"மாநில அரசின் அதிகாரம் பறிப்பு"
"ஏழை மக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கு மின்சாச சட்ட திருத்த மசோதாவால் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
அந்தந்த மாநிலங்களில் மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையங்களை ஒன்றியத்திலுள்ள ஒழுங்குமுறை ஆணையம் இதன்மூலம் முழுவதும் பறித்துக்கொள்கிறது.
மாநில அரசின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லாமல் ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அந்த அதிகாரங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் என்ன சொல்கிறதோ அதனை மாநில அரசின் ஒழுங்குமுறை ஆணையங்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்பது இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றுவது இயற்கையானது. அப்படியிருக்கும்போது ஒன்றிய அரசின் ஆணையம் சொல்வதை கடைபிடிக்க வேண்டும் என இதில் உள்ளது.
"அபராதம் உயர்வு"
ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என்றால், மாநில அரசு செலுத்தும் அபராதத்தொகை 100 மடங்கு உயர்த்தப்படுவதாக மசோதாவில் உள்ளது. அதாவது முன்பு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்றால், இனி 1 கோடி ரூபாய் அபராதமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
மரபுசாரா எரிசக்தியை பொறுத்தவரை ஒரு மாநில அரசின் மொத்த தேவையில் குறிப்பிட்ட அளவு ஒன்றிய அரசு நிர்ணயம் செய்கிறது. அதில் முழுவதுமாக கடைபிடிக்கப்படவில்லையென்றால் அபராதம் செலுத்தும் நடைமுறை உள்ளே வருகிறது. ஒட்டுமொத்தமாக நம்முடைய நுகர்வில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிர்ணயம் செய்து அந்த அளவுக்கு மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் அபராதம் என்பது மோசமான, கடினமான சூழல்" என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
"தனியார்மயமாக்கும் செயல்"
மேலும் பேசிய அமைச்சர், "இந்த மசோதா முழுக்க முக்க மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் செயல். மின்சாரத்துறையில் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டமைப்பும் நம்முடையது. ஆனால், எவ்வித கட்டணமும் செலுத்த மாட்டார்கள். அந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி மின்விநியோகம் செய்வதற்கான உரிமங்களை பெறுவோம் என்கின்றனர்.
அந்த உரிமத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இல்லையென்றால் தானாக அனுமதி பெறப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய அரசு கூறுகிறது.
அதிக வருமானம் வரக்கூடிய தொழிற்சாலை இருக்கக்கூடிய இடங்கள், அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய நுகர்வோர் இருக்கக்கூடிய இடங்களில் தனியார் துறை மின்விநியோகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கொடுக்கக்கூடிய இடங்களை விட்டுவிடுவார்கள்.
100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மின்சராத்தைக் கொடுக்க மாட்டார்கள். விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்விநியோகம் செய்ய மாட்டார்கள். இலவச மின்சாரத்தை முழுவதும் செயல்படுத்த முடியாத சூழலுக்கு இந்த மசோதா இட்டுச் செல்கிறது" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அப்போது, "எல்லா மாநிலங்களிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால் இது கொண்டு வரப்படுவதாக சொல்லப்படுகிறதே?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், "நஷ்டத்தில் இயங்குகிறது என்பதற்காக ஏழை மக்களை பாதிக்கப்படக்கூடிய மசோதா கொண்டு வரப்படலாமா? என்றார்.
மேலும், கல்வி மற்றும் மருத்துவத்துறையை லாப நோக்குடன் பார்க்க முடியுமா? 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறும் 1 கோடி மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தனியார் முதலாளிகள் மின்விநியோகத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் 1 கோடி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி விடும்.
மின்விநியோகத்தைப் பகிர்ந்தளிக்கும் உரிமையும், உரிமங்கள் கொடுக்கக்கூடிய உரிமையும் மாநிலங்களுக்கு இதனால் இல்லாமல் போய்விடும். ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசுதான் கட்டுப்படுத்தும், அதைதான் மாநில அரசு கடைபிடிக்க வேண்டும். தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை இந்திய அரசு எடுத்திருக்கிறது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கொடுப்போம் என்கிற ஷரத்து மசோதாவில் எங்கு இருக்கிறது? மாநில அரசிடம் ஏற்கெனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என்கிற ஷரத்து எங்கு இருக்கிறது?" என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
திமுக போராட்டம் அறிவிக்குமா?
"கடந்த முறை இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதும் நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. இப்போது நிறைய மாற்றங்களுடன் இதனை கொண்டு வருகின்றனர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நாங்கள் உரிமம் கொடுப்போம் என்றால், ஒழுங்குமுறை ஆணையத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உங்கள் சொந்த காரில் நான் டீசல் போட்டு ஓட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா? ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல் கட்சிகளும் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகள், அதிகாரங்களை இந்திய அரசு பறிக்க நினைக்கும்போது அதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும், உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதில் எவ்வித அரசியலும் இல்லை.
நாளையே தனியார் வந்து ஒரு யூனிட்டுக்கு என்ன கட்டணம் நிர்ணயம் செய்கிறதோ அதையே நுகர்வோர் செலுத்த வேண்டும். ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் என்ன சொல்கிறதோ அதை தனியார் நிறுவனம் நிர்ணயம் செய்யும். மின்சார வாரியத்தின் கட்டமைப்பை எவ்வித கட்டணமும் இல்லாமல் தனியார் நிறுவனம் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிவகை இதில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏழை மக்களுக்கான இலவச மின்சாரத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்த மசோதா உள்ளது.
இந்த மசோதாவுக்கு திமுக சார்பாக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமே திமுகதான்" என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக, 08.12.2021 அன்றே இந்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாகவும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களும் இந்த மசோதாவை எதிர்ப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
"இந்திய அரசுடன் இணக்கமாக உள்ள அதிமுகவுக்கு இதில் என்ன நிலைப்பாடு? இன்னும் அவர்கள் எதிர்ப்புக் குரலை பதிவுசெய்யவில்லை" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியபோது, "முந்தைய அதிமுக ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்களே" என செய்தியாளர்கள் கூறினர்.
அதற்கு அவர், "இன்றைக்கு அவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுங்கள்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் திமுக போராட்டத்தை அறிவிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருக்கக்கூடிய திமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கான முழு எதிர்ப்பை பதிவு செய்வார்கள்" எ்று செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












