தமிழ்நாட்டில் அதிகரித்த காற்றாலை மின் உற்பத்தி, குறையும் அனல் மின் உற்பத்தி: பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டாலும் அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகின்றனர். 'அனல்மின் நிலையங்களின் திறனுக்கேற்ப 90 சதவீதம் அளவுக்கு இயக்கினால் யூனிட் மின்சாரத்துக்கு 6 முதல் 7 ரூபாய் வரையில் செலவாகும். பொதுமக்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இந்தத் தொகை என்பது தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலையைவிடவும் குறைவு' என்கின்றன, மின் ஊழியர் சங்கங்கள்.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் நீடிப்பதால் பகல் நேரத்தைவிடவும் இரவு நேரங்களில் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. இதனால் ஓரிரு மணிநேரங்கள் மக்கள் துயரப்படும் நிலை நீடிக்கிறது. மேலும், மின் பராமரிப்பு என்ற பெயரிலும் மின்வெட்டு அரங்கேறுகிறது. இதனால் சிறு, குறு தொழிற்சாலைகளை நடத்துகிறவர்கள், பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது.
நிலக்கரிக்குத் தட்டுப்பாடா?
இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இதன்பிறகு அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "தமிழ்நாட்டின் நிலக்கரி தேவை என்பது நாளொன்றுக்கு 72,000 டன் என்ற நிலையில் 48,000 முதல் 50,000 டன் மத்திய அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 18 அன்று 30,317 டன் நிலக்கரியும் ஏப்ரல் 19 ஆம் தேதி 37,285 டன் எனக் குறைவான அளவு நிலக்கரிகளையே வழங்கும் சூழல் உள்ளது. தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு முதலமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, 4 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற அளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அமைச்சரின் இந்தக் கருத்தை பா.ஜ.க நிர்வாகிகளும் விமர்சனம் செய்தனர். கடந்த மே 8 ஆம் தேதி நிலக்கரி விநியோகம் தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், "நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் கேட்பதைவிடவும் கூடுதலாக நிலக்கரியை கொடுப்பதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்" என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

5 கேள்விகள்
ஆனாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக அங்குள்ள நான்கு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், நாளொன்றுக்கு 9 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் நான்கு அலகுகளைத் தவிர்த்து மூன்றாவது யூனிட்டில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
''உண்மையில் என்ன நடக்கிறது?'' என, மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநிலத் தலைவர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''தூத்துக்குடியில் ஒட்டுமொத்த மின்உற்பத்தி என்பது 1050 மெகாவாட்டாக உள்ளது. அங்குள்ள ஐந்து அலகுகளில் ஒன்றில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு 80,000 டன் நிலக்கரி சேமிப்பில் உள்ளது. நாளொன்றுக்கு 20,000 டன் என்ற அளவில் நிலக்கரியைப் பயன்படுத்தினால் நான்கு நாள்களுக்கு போதுமான அளவுக்கு நிலக்கரி உள்ளது.
மேலும், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் இயங்கி வருகின்றன. அங்கு 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அங்கு ஸ்டேஜ் ஒன்றில் 840 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால், 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடக்கிறது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உள்ள ஸ்டேஜ் 2-ல் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால், 450 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி நடக்கிறது. அங்கு நான்கு நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பில் உள்ளது. எண்ணூரிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது'' என்கிறார்.
தூத்துக்குடியில் உற்பத்தி தடைபட என்ன காரணம்?
மேலும், ''நிலக்கரியைப் பொறுத்தவரையில் ஒரு கப்பலில் 60 ஆயிரம் டன் அளவுக்கு வருகிறது. நான்கு நாள்களுக்குப் பிறகு சுழற்சி முறையில் நிலக்கரி வந்து கொண்டே இருக்கும். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஓர் அலகு மட்டுமே இயக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். காரணம், காற்றாலை மின்சார உற்பத்தி தொடங்கிவிட்டதுதான். காற்றாலையைப் பொறுத்தவரையில் ஒரு மணிநேரத்துக்கு 750 மெகாவாட் முதல் ஆயிரம் மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தியாகும். அதனால் ஓர் அலகை மட்டும் இயக்கினால் போதும் எனத் தெரிவித்துள்ளனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், UGC
''ஆனாலும், மின்வெட்டு என்பது பரவலாக நடந்து வருகிறதே?'' என்றோம். ''அதனை மின்வெட்டாகப் பார்க்க முடியாது. கோடைகாலம் இன்னும் முடியவில்லை. மின்வெட்டு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வாய்ப்பில்லை. கடந்த சனிக்கிழமையன்று சென்னை, உஸ்மான் சாலையில் உள்ள சப்ஸ்டேஷன் ஒன்று வெடித்துவிட்டது. அதனால் அங்கு மின்சாரத்தை அணைத்துவிட்டனர். இதனால் சுமார் 18 பகுதிகளுக்கு மின்சாரம் செல்வது தடைபட்டுவிட்டது. இதை மின்தடை என்றுதான் குறிப்பிட முடியும். மின் வாரியத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் வெறுமனே அணைத்துவிட்டு பராமரிப்பு வேலை எனக் குறிப்பிடுவார்கள். அப்படியொரு நிலைமை சென்னையில் இல்லை'' என்கிறார்.
''மின் தேவைக்கு ஏற்ப போதிய உற்பத்தி நடக்கிறதா?'' என்றோம். ''தனியாரிடம் இருந்து 2,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தனர். தற்போது ஆயிரம் மெகாவாட்டாக அது குறைந்துவிட்டது. காரணம் காற்றாலை மின்சாரம்தான். மே 31 வரையில் கோடைக்காலம் நீடிப்பதால் அதனை சமாளிக்கும் வகையில் தினசரி 43 கோடி, 35 கோடி என தேவைக்கேற்ப மின்சாரத்தை விலை கொடுத்து அரசு வாங்குகிறது. தமிழ்நாட்டுக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால்தான் வெளிச்சந்தையில் யூனிட் மின்சாரத்தை 18 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்கின்றனர்'' என்கிறார்.
இலவச மின்சாரம்; மானியக் கணக்கீட்டில் தவறா?
''மின் பற்றாக்குறையை சமாளிக்க என்னதான் தீர்வு?'' என்றோம். ''பசுமை ஆற்றலின் ஓர் அங்கமாக, கடலுக்கு அடியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பணிகளைத் தொடங்கினால் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும். அதற்கான கொள்கை முடிவுகள் வெளியில் வரவில்லை. ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மின்சாரம் மற்றும் நிலக்கரியை வைத்து அரசியல் செய்யாமல் மக்களின் நலன் கருதி சுயமாக மின்சாரத்தை தயாரிப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்; மின் வாரியத்தையும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ''தற்போது 1,70,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் மின்வாரியம் இயங்குகிறது. மாநில அரசு வழங்க வேண்டிய இலவச மின்சாரத்துக்கான மானியத்தை முழுமையாக கணக்கீடு செய்து தருவதில்லை. குறிப்பாக, 1988 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுத்தனர். அப்போது நீரை எடுப்பதற்கு 3 ஹெச்.பி, 4 ஹெச்.பி திறன் மோட்டார்களை பயன்படுத்தினர். அன்றைக்கு 3 ஹெச்.பி மோட்டாருக்கு மின்வாரியத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டன. தற்போது காவிரி டெல்டா பகுதியிலேயே நிலத்தடி நீர் என்பது 500 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. அதற்கு 12 ஹெச்.பி மோட்டார் திறன் தேவைப்படுகிறது. ஆனால், அரசின் அனுமதி என்பது 3 ஹெச்.பி மோட்டாருக்கு மட்டுமே. கூடுதலாக பயன்படுத்தும் 9 ஹெச்.பி மோட்டார் திறனுக்கான மானியம் மின்வாரியத்துக்குக் கிடைப்பதில்லை. இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
''நிலக்கரி போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளதா?'' என்றோம். ''நான்கு நாள்களுக்கு ஒருமுறை 60,000 டன் என்ற அளவில் வருகிறது. நிலக்கரி வந்தாலும் மெரிட் ஆர்டர் டெஸ்பேட்ச் (MOD) என்ற முறையில் குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தால் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. காற்றாலை மின்சாரத்தை யூனிட் ஒன்றை 5 ரூபாய் என்ற விலையில் வாங்குகின்றனர். அதேநேரம், அனல்மின் நிலையங்களின் நிறுவுத் திறனில் 90 சதவீதத்தை இயக்கினால் யூனிட் மின்சாரத்தின் விலை என்பது 6 முதல் 7 ரூபாய் வரையில் வரும். இது வெளியில் வாங்குவதைவிட குறைவான தொகையாக இருக்கும். பொதுமக்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்'' என்கிறார்.
குறைகள் சரிசெய்யப்படுகிறதா?
இதுதொடர்பாக, தி.மு.கவின் தொழிற்சங்க அமைப்பான தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச பொதுச் செயலாளர் மணிமாறனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ''காற்றாலை மின்சாரத்துக்கு மட்டுமல்லாமல் சூரிய மின்சக்தி மின்சாரத்துக்கும் ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த 15 நாள்களுக்குள் இயல்பு நிலை திரும்பிவிடும். தற்போது வரக்கூடிய மின்வெட்டு என்பது கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியிலும் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதனை எதிர்க்கட்சியினர்தான் பெரிதாக்குகின்றனர். காற்றில் வயர் அறுந்து விழுவதாலோ, ட்ரான்ஸ்பார்மரில் அழுத்தம் அதிகமாவதாலோ பாதிப்பு ஏற்படும். ஆனால், அதையெல்லாம் அரை மணிநேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து விடுகின்றனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், UGC
மேலும், ''மின்சாரம் தடைபடுவதில் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே ஒரு மணிநேரம் தாமதமாகிறது. மின்வாரியத்தில் மாற்று ஏற்பாடுகள் இருப்பதால் நிலைமை உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது. தவிர, மின்னகம் என்ற ஒன்றை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மக்களிடம் இருந்து வரும் குறைகளும் உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது'' என்கிறார்.
''மின்சாரத்தை தேவைக்கு அதிகமாகவே வைத்துள்ளோம். அ.தி.மு.க ஆட்சியில் 7 மற்றும் 8 ரூபாய் என்ற அளவில் மின்சாரத்தை வாங்கினர். ஆனால், மின்துறைக்கு அமைச்சராக செந்தில் பாலாஜி வந்த பிறகு ரூ.2.60க்கு மின்சாரத்தை வாங்கியுள்ளார். வட்டியை குறைத்து மின்வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தவிர, விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தைப் பொறுத்தவரையில் கிணற்றின் ஆழம் என்பது அனைத்து இடங்களிலும் ஒன்றுபோல இல்லை. ஊர்களைப் பொறுத்து மாறுபடும். மானியத்துடன் தொடர்புபடுத்தி இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை,'' என்கிறார், மணிமாறன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












