மின் தடங்கலுக்கு காரணமாகும் நிலக்கரி நெருக்கடி - இந்திய மாநிலங்கள் இனி என்ன செய்யும்?

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய மாநிலங்கள் அவற்றின் நிலக்கரி கையிருப்பை குறைந்தபட்சம் 24 நாட்களுக்காவது தேக்கி வைத்திருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் மீறி 9 நாட்களுக்கும் குறைவாக கையிருப்பு இருக்கும் நெருக்கடிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன.

மத்திய மின்சார ஆணையம் (CEA), அரசுக்கு சொந்தமான 150 மின் உற்பத்தி நிலையங்களில் 81 நிலக்கரி நிலையங்களில் நிலக்கரி இருப்பு காலியாகும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் 51 தனியார் அனல் மின் நிலையங்களில் 28இன் கையிருப்பு நிலைமை 'மிகவும் மோசமானதாக' உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தத் தரவுகளை மேற்கோள்காட்டி அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷைலேந்திர தூபே இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நாடு எதிர்கொண்டு வரும் மின் தட்டுப்பாடு பிரச்னையின் தீவிரம் குறித்து சில தரவுகளுடன் எச்சரித்தார்.

இது குறித்து மத்திய மின்துறை அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. இந்த நிலைமையை முன்பே தவிர்த்திருக்கலாம், ஆனால் கோடை வெப்பம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே உச்சத்தை தொட்டுள்ளதால் நுகர்வோரின் மின் தேவை அதிவேகமாக அதிகரித்தது, அது தேவை-விநியோக இடைவெளியை அதிகமாக்கியிருக்கிறது" என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் பஞ்சாப், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியாணா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதால் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. ஒப்பீட்டுளவில் அவற்றுடன் தமிழ்நாட்டில் காணப்படும் மின் வெட்டு நிலைமை குறைவுதான்.

மகாராஷ்டிராவின் திடீர் முடிவு

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் தட்டுப்பாட்டை சமாளிக்க நிலக்கரியை இறக்குமதி செய்யவும் மின் உற்பத்திக்காக சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை ஒப்பந்த அடிப்படையில் வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.

இது குறித்து அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், "இந்தியாவில் மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப நிலக்கரி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள 3,500 மெகா வாட் - 4,000 மெகா வாட் பற்றாக்குறையை குறைக்க மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்," என்று தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு அக்டோபரில் கொரோனா பொதுமுடக்கம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பெரும்பாலான நாடுகள் விதித்திருந்தன. அதனால் உலக அளவில் சரக்குகள் தளவாடங்கள் மற்றும் உள் உற்பத்தி சிக்கல்கள் நீடித்ததால் நிலக்கரி இருப்பு குறைந்தது. அந்த காலகட்டத்திலும் இந்தியா, இதேபோன்ற எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டது.

நிலைமை எந்த அளவுக்கு மோசம்?

மத்திய மின்சார ஆணைய அறிக்கையின்படி, "ஏப்ரல் 18ஆம் தேதி நிலவரப்படி 66.72 மில்லியன் டன்களுக்கு இருக்க வேண்டிய நிலக்கரி கையிருப்பு, 22.52 மில்லியன் டன்கள் ஆக உள்ளது. இது பொதுவான கையிருப்பில் 34 சதவீதம் மட்டுமே.

அப்படிப்பார்த்தால் இன்னும் ஒன்பது நாட்கள் வரை மட்டுமே நிலக்கரி நிறுவனங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற நெருக்கடியில் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன.

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

எந்தெந்த மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும்?

இந்தியாவில் பல மாநிலங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியாணா உள்பட 12 மாநிலங்களில் நிலக்கரி குறைவாக இருப்பதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில், உள்நாட்டு மின் தேவை 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. 2021ஆம் ஆண்டு அக்டோபரில் நாட்டில் 1.1 சதவீத அளவுக்கு மின் பற்றாக்குறை இருந்தது. 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்த பற்றாக்குறை 1.4 சதவீதமாக உயர்ந்தது," என்று கூறுகிறார் ஷைலேந்திர தூபே.

என்டிபிசியால் இயக்கப்படும் ஆலை உட்பட கர்நாடகாவில் உள்ள நான்கு ஆலைகளில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது. இவை தவிர, அரசு நடத்தும் மூன்று ஆலைகளிலும் சாதாரண இருப்பு 16.99 லட்சம் டன்களுக்கு மாறாக 11 சதவீதம் அல்லது 1.87 லட்சம் டன்கள் மட்டுமே மிச்சம் உள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற நெருக்கடி அதிகமாவது ஏன்?

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் மின் தேவை அதிகமாக இருப்பதால், பொதுவாகவே கோடை காலத்தில் மிக அதிகபட்ச மின் நுகர்வு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டாலும், இந்த ஆண்டு உலகளாவிய நிலக்கரி விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்துடன் ரஷ்யா-யுக்ரேன் இடையே நடந்து வரும் போர் காரணமாக, அனல் மின் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதியைக் கோர முடியாத நிலையில் உள்ளன. அதுவும் உள்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்பச்சலனம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ள சூழலில் தற்போதைய நிலக்கரி நெருக்கடி மாநிலத்துக்கு மேலும் சுமையாகியிருக்கிறது.

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், AFP

நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு என்ன செய்கிறது?

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருடன் ஏப்ரல் 19 (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச நிலக்கரி இருப்பு உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்ல போதுமான சரக்கு ரயில்களை ஏற்பாடு செய்யும்படி ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பற்றாக்குறையை சமாளிக்க மற்ற நாடுகளில் இருந்து மலிவான நிலக்கரிக்கான சாத்தியத்தை ஆராயவும் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

வேறு என்ன காரணங்கள்?

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் பண்ணைகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும் வீடுகள், தொழில் துறைகளில் குளிர்சாதன வசதிகள் அதிகளவில் இயக்கப்படுவதும் மின் நுகர்வு அதிகரிப்புக்கான முக்கிய காரணம்.

இந்த நிலைமையை முன்பே மதிப்பிட்ட இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் மின் உற்பத்தி நிலையங்கள் அவற்றுக்குத் தேவைப்படும் நிலக்கரியை இருப்பில் வைக்குமாறு கேட்டுக் கொண்டன. ஆனால் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் இருப்புகள் குறைந்து கொண்டே போய் கடைசியில் நிலக்கரி தீரும் நிலையை எட்டியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது, அதே சமயம் விநியோகம் 19,000-20,000 மெகாவாட் அளவாக உள்ளது என்கிறார் ஷைலேந்திர தூபே.

இந்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், "ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல ரயில்வே வேகன்கள் போதுமான அளவில் இல்லாததும் ஒரு காரணம்," என்று குற்றம்சாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலம் கடுமையான நிலக்கரி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என்றாலும், உத்தர பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் மின் உற்பத்தி நிலையங்களில் கடைப்பிடிக்கப்படும் நிலையான விதிமுறைகளுடன் ஒப்பிட்டால், அங்கு 26 சதவீதம் அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது.

அந்த மின் நிறுவனத்தின் நான்கு அலகுகளில் மொத்த நிலக்கரி இருப்பு 10 லட்சத்து 97 ஆயிரம் டன்னாக இருக்க வேண்டிய நிலையில், களத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 700 டன் நிலக்கரி மட்டுமே உள்ளது.

"வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்பதால் மாநிலத்தில் மின் தேவை அதிகரிக்கும். அதனால், மின்வெட்டு மேலும் மோசமாகும்,'' என எச்சரிக்கிறார் தூபே.

குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் பெய்த கனமழையால் நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளதாக இந்திய நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பருவ மழைக்கு முன்னதாக, பெரும்பாலான அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதும் பிரச்னைக்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது.

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

நிலக்கரி பற்றாக்குறை மின்சாரம் மற்றும் செலவினத்தை எவ்வாறு பாதிக்கும்?

ஃபிட்ச்ரோட்டிங்க்ஸ் நிறுவன கூற்றுப்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் தினசரி மின்சாரப் பற்றாக்குறை 0.3% இலிருந்து 1% ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பிகார், ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் 'திட்டமிட்ட மின்தடை' போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் தேவையின் உச்சநிலையை அவை அடைந்துள்ளன.

ஏப்ரல் 1 முதல், ஜார்கண்ட் மாநிலம் சராசரியாக 10-12 சதவீத பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. விகிதாசார அளவில் ஆந்திர பிரதேசம் (10%), உத்தராகண்ட் (8-10%), மத்திய பிரதேசம் (6%), ஹரியாணா (4%) என்ற வகையில் உள்ளன.

நிலக்கரி நெருக்கடியை சமாளிக்க என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக 25% வரை நிலக்கரி இருப்புக்களை மாநிலங்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.

சிஐஎல் மீதான சுமையை குறைக்க உற்பத்தி நிறுவனங்கள், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை 10% வரை கலக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வரும் நிலையில், அதிக நிலக்கரி செலவினமும் மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையாகி வருகிறது.

நிலக்கரியை இறக்குமதி செய்யப்போகும் மாநிலங்கள் எவை?

​​மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய இந்தியாவின் மூன்று தொழில்மயமான மாநிலங்கள், வரும் மாதங்களில் 10.5 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளன.

கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள், மொத்தம் 10 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றில், 6,25,000 டன்களை இறக்குமதி செய்வதாக பஞ்சாப் உறுதியளித்துள்ளது.

இந்திய பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசியும் நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனீசியா போன்ற நாடுகள் இந்தியாவின் நிலக்கரி கொள்முதலால் அதன் மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கும். ரஷ்யாவும் சாத்தியமான விநியோக ஆதாரமாக இந்த நாடுகளுக்கு உள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டம் என்ன?

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் மாநில மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

போதிய நிலக்கரி விநியோகம் இல்லாததால் மத்திய அரசின் மின்சார தொகுப்பில் இருந்து வரக்கூடிய நிலக்கரிக்கு திடீர் தடையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாநிலத்தின் மின் நெருக்கடி குறித்த "தவறான பிரசாரத்திற்காக" முக்கிய எதிர்கட்சியான அதிமுக மீதும் மாநில அமைச்சர் புகார் கூறியிருக்கிறார். ஆனால், அவரது கூற்றை சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில், ஒடிசாவின் தால்சர் சுரங்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலக்கரி அளவு 50 ஆயிரம் டன் என்ற அளவிலேயே உள்ளதாகவும், தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை சமாளிக்க பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்ய இந்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ள போதும், வெளி மாநிலத்தில் இருந்து நிலக்கரியை கொண்டு வர போதுமான ரயில் வேகன்கள் இல்லாததும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே, வழக்கமாக வழங்கப்பட்டு வரும் நிலக்கரியை சுமந்து வரும் வேகன்களை உறுதிப்படுத்தும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள் மும்முரம் காட்டி வருவதாக அதன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

நிலக்கரி சட்டங்களும் சீர்திருத்தமும் பயன் தருகின்றனவா?

2020ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தியில் இந்திய நிலக்கரி நிறுவனம் செலுத்தி வந்த ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டுவர சுரங்க சீர்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி, நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள் - 2015) சட்டம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை-1957) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளுக்கு அரசு அனுமதியளித்தது.

நிலக்கரி துறையில் 50 தொகுதிகள் கொண்ட வணிக சுரங்கத்தை உடனடியாக வழங்க இந்த நடவடிக்கை வாய்ப்பளித்தது. மேலும், நிறுவனங்களுக்கு (அதாவது நிலக்கரியை தங்கள் வணிகங்களை நடத்துவதற்கு பயன்படுத்தும் நிறுவனங்கள்) பதிலாக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க எல்லா தரப்பினரையும் அரசு அனுமதித்தது.

1973ஆம் ஆண்டு முதல் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் வணிக அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவதை சட்டம் அனுமதித்தது. இதற்கான நடைமுறையில் வெளிப்படைத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாக அரசு கூறியது. ஏகபோகத் தொழிலாக இருந்ததை மாற்றி, போட்டித் தன்மையை உருவாக்குவதன் மூலம் நிலக்கரித் துறையில் திறமையை அதிகரிக்க அரசின் சீர்திருத்தம் வாய்ப்பாக அமைந்தது.

நிலக்கரி விற்பனைக்காக தொழில் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் எடுப்பதால் கிடைக்கும் வருவாய் புதிய நடைமுறையின்படி அந்தந்த மாநிலங்களுக்கே கிடைக்கும். இதனால், அந்த மாநிலங்கள் கூடுதலாக வருவாய் பெற வழியேற்படும். அந்த நிதி அந்தந்த மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளின் மேம்பாட்டுக்கும் பழங்குடியினர் உள்பட அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும்.

இந்த சட்டம் மின்னுற்பத்தித் துறையில் ரூ.50,000 கோடி முதலீட்டை உறுதி செய்தது. எவ்வாறாயினும், இந்த சட்டம் மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக ஜார்க்கண்ட், பிகார் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் வாழும் ஒரு பெரிய பழங்குடி மக்கள் சமூகம் மற்றும் காடுகள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது.

நிலக்கரி நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

மின் உற்பத்தி எந்த வழிகளில் சாத்தியமாகிறது?

இந்தியாவில் நிலக்கரி, லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற வழக்கமான மூலங்களிலிருந்தும் ஹைட்ரோ, காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற மரபுசாரா ஆதாரங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி சாத்தியமாகிறது. இவை தவிர, அணுசக்தியும் மின் உற்பத்திக்கான முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

நிலக்கரியின் பங்கு என்ன?

'நிலக்கரி' இந்தியாவில் மிக முக்கியமான மற்றும் ஏராளமான புதைபடிவ எரிபொருள் ஆகும். இந்தியாவில் நிலக்கரி மட்டுமே மின்சார உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த உற்பத்தியின் மைய முகமாக உள்ள இந்திய நிலக்கரி நிறுவனம், உற்பத்திக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தாலும் அதிகரித்து வரும் மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதில் சிரமம் உள்ளது.

வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி இயந்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு தொழில்துறை நிறுவனங்களின் மின் தேவையும் அதிகரிப்பதால் இந்த நெருக்கடி தீவிரமாகியிருக்கிறது.

இதேபோல, இந்தியாவின் கிட்டத்தட்ட 150 பில்லியன் டன் நிலக்கரி இருப்பில் சுமார் 87% 'கோக்கிங் அல்லாத நிலக்கரி' ஆகும். மின் தேவைக்காக இந்தியா நிலக்கரியை தொடர்ந்து நம்பியிருந்தாலும், 2005ஆம் ஆண்டை விட 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்ற தீர்மானம் எட்டியுள்ளது.

கரியமில வாயுவை அதிகம் வெளியிடும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, இருப்பினும் அதன் தனி நபர் வெளியேற்றம் உலக சராசரியில் 40% மட்டுமே.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :