தமிழ்நாட்டில் மின் தடை ஒரு செயற்கைத் தட்டுப்பாடா? செந்தில் பாலாஜி விளக்கமும் 3 கேள்விகளும்

பட மூலாதாரம், Senthil Balaji
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
'தமிழ்நாட்டில் இரு நாட்களாக ஏற்பட்ட மின் தடைக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததுதான் காரணம்' என அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியுள்ளார். 'நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கோடை காலத்தைக் கடப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதியை கடந்துவிட்டால் காற்றாலை மின்சாரம் வந்துவிடும். அதுவரையில் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது' என்கின்றன மின் ஊழியர் சங்கங்கள்.
தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் பராமரிப்பு என்ற பெயரில் சில மணிநேரங்கள் ஏற்படும் மின்வெட்டால் தொழிற்சாலைகளும் பெரிதளவில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த 20 ஆம் தேதி இரவில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டபோதும், 'விரைவில் மின்சாரம் வந்துவிடும்' என பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 20 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்குக் கீழ், "கடந்த திமுக ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததில் மின்வெட்டுக்குப் பங்கு உள்ளது" என்பன போன்ற கருத்துகளையும் சிலர் பதிவிட்டிருந்தனர்.
"மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வராததுதான் காரணம்" என அமைச்சர் கூறிய கருத்துக்கு பாஜக தரப்பிலும் விமர்சனங்கள் கிளம்பின.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்நிலையில், சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் மின்சாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் நமது சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மின் விநியோகம் தடைபட்ட நகரப் பகுதிகளில் நிலைமையை சமாளிக்கும் அளவுக்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன' என்றார். தொடர்ந்து அனல்மின் நிலையங்கள் தொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "2020-21 ஆம் ஆண்டில் அனல் மின்நிலையங்களின் உற்பத்தி என்பது 15,553 மில்லியன் யூனிட்டாக இருந்தது. அதுவே, 2021-22 ஆம் ஆண்டில் 20,331 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், 31 சதவீதம் சொந்த உற்பத்தியை அதிகரிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன" என்றார்.
4 நிறுவனங்கள், ஒரு டன் நிலக்கரி 143 டாலர்
மேலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்ந்தபோதும் ஒரு டன்கூட தமிழ்நாடு அரசு இறக்குமதி செய்யவில்லை எனக் குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, "உள்நாட்டு உற்பத்தியை வைத்து 31 சதவீத உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறனைவிட கூடுதலான அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நிலக்கரி தேவை என்பது நாளொன்றுககு 72,000 டன் என்ற நிலையில் 48,000 முதல் 50,000 டன் மத்திய அரசு வழஙகி வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 18 அன்று 30,317 டன் நிலக்கரியும் ஏப்ரல் 19 ஆம் தேதி 37,285 டன் எனக் குறைவான அளவு நிலக்கரிகளையே வழங்கும் சூழல் உள்ளது. தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு முதலமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, 4 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற அளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி உடன் சேர்த்து 143 டாலர் வருகிறது" என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மின் விநியோகம் தடைபட்டது என்பது 41 பகுதிகளில்தான், அங்கும் போர்க்கால அடிப்படையில் மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை குறித்து அவர் பேசியபோது அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் 68 முறை இதேபோன்ற சூழல் நிலவியதாக குறிப்பிட்டார். மேலும், "குஜராத், மகாராஷ்டிரம், உ.பி ஆகிய மாநிலங்களில் மின்தடை என அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு தடையை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்கள் மூலம் சீரான மின்விநோயகம் நடந்து வருகிறது. நமது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க உறுப்பினர் குறிப்பிட்டார். மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதனால் தொழிற்சாலைகளுக்கு எந்தவகையிலும் மின்தடை ஏற்படாது. கடந்த 2 நாள்களில் ஏற்பட்ட மின்விநியோக தடை என்பது மத்திய தொகுப்பில் இருந்து வராததால்தான்" என்றார்.
மூன்று கேள்விகள்

பட மூலாதாரம், Senthil Balaji
''நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது?'' என மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''மத்திய தொகுப்பு மின்சாரம் என்பது அனல்மின் நிலையத்தை நம்பித்தான் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 65 முதல் 70 சதவீதம் வரையில் நிலக்கரி மூலமாக அனல்மின் நிலையங்களில் தயாராகி வருகின்றன. இதற்கான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் கொடுக்கிறது. ஓர் ஆண்டுக்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து மாதம்தோறும் கொடுத்து வருவது வழக்கம். கப்பல், ரயில் என சரக்குப் போக்குவரத்து மூலம் இவை செல்லும். இதில் மாநிலங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்'' என்கிறார்.
மேலும், ''மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இல்லையென்றால் கிரிட்டில் (Grid) மின்சாரம் இருக்காது. இதனால் அந்தந்த மாநில மின்வாரியங்கள் வேறு நாடுகளில் இருந்து நிலக்கரியை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வாங்கப் பழகிவிட்டால் கோல் இந்தியா கம்பெனியில் இருந்து மாநிலங்களுக்குச் செல்லும் பங்கு என்பது குறைந்துவிடும். கோல் இந்தியா நிறுவனத்துக்கு நெய்வேலி உள்பட 13 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நடக்கும் உற்பத்தியைக் குறைக்கும் முயற்சியில் இறங்க உள்ளனர்'' என்கிறார்.
தனியாருக்கு விற்க முயற்சி

பட மூலாதாரம், TANGEDCO
''இவ்வாறு செய்வதால் மத்திய அரசுக்கு என்ன லாபம்?'' என்றோம்.
''அனல்மின் நிலையங்களை மூடுவதுதான் மத்திய அரசின் ஒரே நோக்கம். இதுதொடர்பாக கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், "25 ஆண்டுகளுக்கு மேற்பட்டு செயல்படும் அனல்மின் நிலையங்களை மூட வேண்டும்" எனத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மேட்டூர், தூத்துக்குடி, வட சென்னை ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவை 25 ஆண்டுகளைக் கடந்தாலும் 95 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தியை செய்கின்றன. ஆனால், 25 வருடம் எனக் குறிப்பிட்டு, தனியாருக்கு அவற்றை விற்கும் வேலைகளை செய்ய உள்ளனர். அங்கு புதிதாக ஓர் அனல்மின் நிலையத்தை நிறுவி, தனியாரிடம் இருந்தே நிலக்கரியை பெறுவதுதான் நோக்கம். மின் தடை ஏற்பட்டால் மாநில அரசுகளுக்கு மக்கள் மீது கெட்ட பெயர் வரும். அதனை அரசியல் ரீதியாக பா.ஜ.க வேறு மாதிரி பயன்படுத்திக் கொள்ளும்'' என்கிறார்.
''அடுத்து வரும் நாள்களில் தமிழ்நாட்டின் மின்தேவையை சமாளிக்க முடியுமா?'' என்றோம்.
''மத்திய அரசு நிலக்கரியை கொடுக்காவிட்டால் மலேசியா உள்பட பிற நாடுகளில் இருந்து வாங்க உள்ளனர். நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் இந்தக் கோடை காலத்தைக் கடக்கும் பணிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறங்கியுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி வரையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை வாங்குவார்கள். அதன்பிறகு காற்றாலை மின்சாரத்தில் இருந்து 2000 மெகாவாட் மின்சாரம் வந்துவிடும். கோடை காலம் முடிந்துவிட்டால் மின்நுகர்வும் குறைந்துவிடும் என அரசு நினைக்கிறது. இது வழக்கமான ஒன்றுதான். எங்களின் கோரிக்கை என்பது அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கக் கூடாது என்பதுதான். தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். குறிப்பாக, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனர். சுயசார்பு உற்பத்தி இருந்தால் இதுபோன்ற சிக்கல்களைக் களையலாம்'' என்கிறார்.
பா.ஜ.க சொல்வது என்ன?
மத்திய அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ''மத்திய அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சில மின்ஊழியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசிடம் நிலக்கரி இருப்பு என்பது போதுமான அளவுக்கு உள்ளது. மார்ச் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறிய தகவலின்படி, '1.8 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இருப்பதால் நிலக்கரியை வாங்க வேண்டியதில்லை' என்றது. யுக்ரேன் போரால் நிலக்கரியை விநியோகம் செய்வதில் தாமதமாகலாம் என்பதால் பல மாநிலங்களும் வெளிநாடுகளில் வாங்கத் தொடங்கினர். இதனால் ஒடிஷாவில் கப்பல்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால்தான் தாமதம் ஏற்பட்டது'' என்கிறார்.

பட மூலாதாரம், S.R.SEKAR/FACEBOOK
தொடர்ந்து பேசிய எஸ்.ஆர்.சேகர், ''கடந்த ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, 'செயற்கை மின்தட்டுப்பாடை ஏற்படுத்தி நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது' எனக் குற்றம் சுமத்தினார். அவர் சொன்னதைப் போலத்தான் செய்து வருகின்றனர். அதேபோல், அனல்மின் நிலையங்களை மூடும் திட்டத்தில் இருப்பதாக சிலர் பேசுகின்றனர். தொழில்நுட்பரீதியாக அதற்கான காலாவதியாகும் காலம் என்பது முக்கியமானது. தற்போதுள்ள நிலையின்படி அதனை சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, காலாவதியான அனல்மின் நிலையங்களில் உற்பத்தித் திறன் குறைந்தால் நிலக்கரியின் தேவை அதிகமாகும். அதைவிட சோலார் ஆற்றல் உள்பட பல்வேறு வகைகளின் மூலம் அதனை சரிசெய்யுங்கள் என்றுதான் மத்திய அரசு கூறி வருகிறது'' என்கிறார்.
மேலும், ''சட்டமன்றத்தில் செந்தில்பாலாஜி பேசும்போது, 'தமிழ்நாட்டில் மின் தடை இல்லை, பராமரிப்புக்காக நிறுத்துகிறோம்' என்கிறார்கள். 3 , 4 மணிநேரங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் மின் தடை வருமா? தி.மு.கவின் தோல்விகளை மறைப்பதற்கும் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மத்திய தொகுப்பில் இருந்து கொடுக்கப்படும் 750 மெகாவாட் என்பது தென்மாநிலங்களுக்கானது. அதில் தமிழ்நாட்டுக்கான பங்கு என்பது 200 மெகாவாட்தான். அப்படியே கிடைத்தாலும் அதன் அளவு என்பது மொத்த உற்பத்தியில் ஓரிரு சதவீதம்தான். அதற்கு மாற்று ஏற்பாடுகூட செய்யாத அரசாக தி.மு.க உள்ளது. புகார் கூறும் சங்கங்கள் எல்லாம் தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவை. அவர்கள் அவ்வாறுதான் பேசுவார்கள்'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












