இந்தியாவில் மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
ஒரு மாதத்திற்கும் மேலாக, இந்திய தலைநகர் டெல்லிக்கு அடுத்துள்ள ஃபரிதாபாத்தில் இருக்கும் சந்தீப் மாலின் பொறியியல் உற்பத்தி தொழிற்சாலை, சிலநேரங்களில் ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வரை மின்வெட்டை எதிர்கொள்கிறது.
ஃபாரிதாபாத்தில் உள்ள ஒரு பெரிய உற்பத்தி மையத்தில் இருக்கும் தொழிற்சாலையிலுள்ள 50 இயந்திரங்கள் ஏரோநாடிக்ஸ், ஆட்டோமொபைல், சுரங்கம் மற்றும் கட்டுமானத் தொழில்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
"ஒவ்வொரு முறை மின்வெட்டு நிகழும்போதும், இயந்திரங்கள் நின்றுவிடும். அப்போது பாதி மட்டுமே முடிக்கப்பட்ட தயாரிப்புகள் நிராகரிக்கப்படுகின்றன. அவற்றை நிராகரித்துவிட்டு, பிறகு நாங்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்," என்று சந்தீப் மால் கூறுகிறார்.
மின்வெட்டு நிகழும்போது, தொழிற்சாலை இயங்குவதற்காக அவர் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகிறார். அப்படிச் செய்யும்போது, மின்சாரம் தடைபடுவதால் பாதி தயாரிக்கப்பட்ட பொருட்களை நிராகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதோடு, டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவது உள்ளூர் மின்சார ஆணையத்திற்குச் செலுத்துவதைவிட 3 மடங்கு அதிகமாகச் செலவாகிறது என்கிறார் சந்தீப் மால்.
"கடந்த பத்து ஆண்டுகளில் நான் எதிர்கொள்ளும் மோசமான மின்வெட்டுப் பிரச்னை இது. இது, போட்டிகளுக்கு ஈடாகச் செயல்படக்கூடிய எனது தன்மையைக் குறைக்கிறது. எனது லாபத்தைக் குறைக்கிறது. இதனால் முற்றிலும் குழப்பம் மற்றும் வெறுப்பு ஏற்படுகிறது," என்றும் அவர் கூறுகிறார்.
9 மாநிலங்களில் நீண்ட நேர மின்வெட்டு
ஏப்ரல் மாதம் தொடங்கி, இந்தியா முழுவதும் மின்வெட்டு மற்றும் மின்தடைகளால் அலைமோதுகிறது. இது தொழிற்சாலைகளின் செயல்பாட்டு வேகத்தைக் குறைப்பது, பள்ளிகளை மூடுவது ஆகியவற்றோடு ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியுள்ளது. 322 மாவட்டங்களில் உள்ள 21,000-க்கும் மேற்பட்ட மக்களிடையே, லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வின்படி, அவர்களில் மூன்றில் இரண்டு வீடுகள் மின்வெட்டை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளனர். அந்த அறிக்கையின்படி, மூன்றில் ஒரு குடும்பம், ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்கு மின்வெட்டை எதிர்கொள்கின்றனர்.
சந்தீப் மாலின் தொழிற்சாலை அமைந்துள்ள ஹரியாணா உட்பட குறைந்தது 9 மாநிலங்கள் நீண்டநேர மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் பற்றாக்குறையாக இருப்பதற்கு நிலக்கரி பற்றாக்குறையே முக்கியக் காரணம்.
நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் இந்தியா தான் இரண்டாவது பெரிய நாடு. புதைபடிவ எரிபொருள் நாட்டின் விளக்குகளை எரிய வைக்கிறது. நாட்டின் முக்கால்வாசி மின்சார உற்பத்திக்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா உலகளவில் அதிக நிலக்கரி இருப்பில் 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், தனிநபர் நுகர்வு இன்னும் மிதமாகவே உள்ளது.
இந்தியா அதன் நுகர்வில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகவே இறக்குமதி செய்கிறது. அதில் பெரும்பகுதி எஃகு தயாரிப்பதற்காக வெடி உலைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரியாகும். ஆகவே, அதற்கான நிரந்தர பற்றாக்குறை நிலவுகிறது.
கடந்த அக்டோபரில், நாட்டின் 135 நிலக்கரி ஆலைகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகளின் பங்குகள் மிகவும் குறைவாகவோ அல்லது சாதாரண அளவை விட 25 சதவீதத்திற்கும் குறைவாகவோ இருந்தபோது, இந்தியா மின்சார விநியோக நெருக்கடியின் விளிம்பில் தவித்தது.
இப்போது நிலக்கரி இருப்பு அதன் 173 மின் உற்பத்தி நிலையங்களில் 108-இல் மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. யுக்ரேன் போர் காரணமாக, நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் உலகளாவிய விலையேற்றம் ஏற்பட்டு, இறக்குமதி கட்டுப்படியாகாத அளவுக்கு நிலைமை கடினமாகியுள்ளது.
இந்த நெருக்கடி, கடந்த ஆண்டைவிட மோசமானது. ஏனெனில், தேவை உண்மையில் அதிகமாகியுள்ளது. இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அதற்குப் பல காரணங்கள் உள்ளன," என்கிறார், டெல்லியில் அமைந்திருக்கும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த உறுப்பினரான ராகுல் டோங்கியா.
கையிருப்பில் சிக்கல்
எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே கடுமையான வெப்பம், வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் நிலவுகிறது. ஏப்ரல் மாதத்தின் சராசரி வெப்பநிலை கடந்த 120 ஆண்டுகளில் மிகவும் அதிகமானது. இது எதிர்பாராத வகையில் மின்சாரத் தேவையை உச்சத்த்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இரண்டு வருட பெருந்தொற்று ஊரடங்குக்குப் பிறகு பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து மின்சாரத் தேவை மேன்மேலும் அதிகரித்தது.
மேலும் இந்தியாவின் ரயில்வே துறையில் தொற்றுப் பேரிடர் காலத்திற்குப் பிறகு பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால், ரயில் பாதைகளை சரக்கு ரயில்களோடு அவையும் பகிர்ந்து கொள்கின்றன. இதனால், நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்படும் ஆலைகளுக்கு நிலக்கரியைச் சரியான நேரத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் பாதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
"இந்தியாவில் நிலக்கரி முற்றிலும் இல்லாமல் போகிறது என்றில்லை. நாம் அடிப்படையில் கையிருப்பு சிக்கலை எதிர்கொள்கிறோம். இது புதிதல்ல. பற்றாக்குறை மற்றும் அதைப் பூர்த்தி செய்வதற்கான இணைப்புகளை நிர்வகிப்பதற்கான அமைப்பு நம்மிடம் உள்ளது. இது சரியான இடர் மேலாண்மைக்கு உரியதாக வடிவமைக்கப்படவில்லை," என்கிறார் டோங்கியா.
மின்சாரத்திற்கான தேவை பருவகாலங்களைப் பொறுத்தது. மேலும், கையிருப்பை உருவாக்குவதற்கு அதிக பணம் செலவாகும் மற்றும் அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்ளும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா பாரம்பர்யமாக நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் விநியோகத்தை வலுப்படுத்துகிறது. "அதீத விநியோகம் நடக்கும்போது கையிருப்பு ஏற்படுத்துவதில் இருக்கும் சிக்கலைச் சரிசெய்ய முடியாது," என்கிறார் டோங்கியா.
விநியோகத்தை உறுதி செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அரசு கூறுகிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா, உற்பத்தியை 12% அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 49.7 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் அனுப்பப்பட்ட நிலக்கரி அளவைவிட 15% அதிகம். எரிபொருள் பற்றாக்குறை உள்ள ஆலைகளுக்கு அதிக நிலக்கரியைக் கொண்டு செல்வதற்காக ரயில்வே துறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளது.
நிலக்கரி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் நிலக்கரிக்கும் மின்சாரத்திற்கும் இடயிலான உறவின் தன்மை, இந்த விஷயங்களுக்கு உதவாது என்று சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் வல்லுநர் தல்ஜித் சிங் கூறுகிறார். இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரியை "பல வழிகளில், பல்வேறு விலை நிர்ணய முறைகளின் மூலம் வாங்குகின்றன," என்று அவர் கூறுகிறார்.
"எங்களுக்குக் கிடைப்பது இதுதானா?"
ஆலை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்குச் சொந்தமானதா என்பதைப் பொறுத்து நிலக்கரிக்கு ஓர் ஆலை செலுத்தக்கூடிய விலை மாறுபடும். இதற்கு அதிக எண்ணிக்கையிலான மின்சார விநியோக நிறுவனங்களுடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் உள்ளன. அவற்றில் பல நிறுவனங்கள் கடனில் தவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
"அரசுகளுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆதரவாக இந்த அணுகுமுறை உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவின் மிகப்பெரியளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனமான ரயில்வே துறை, பயணிகளின் கட்டணத்தைக் குறைக்க, நிலக்கரியை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய சரக்கு ரயில்களுக்கு அதிக கட்டணம் விதிக்கிறது. நிலக்கரி துறையில் வெற்றி மற்றும் தோல்வியை நிர்ணயிக்கும் ஏராளமான காரணிகளுக்கு இது ஓர் உதாரணம் என்றும் இது அடிப்படைகளில் மாற்றத்தை மிகவும் கடினமாக்குகிறது என்றும் கூறுகிறார் டோங்கியா.
நிலக்கரியை நம்பியிருப்பதில் இருந்து விடுபட 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 450 ஜிகாவாட்டாக உயர்த்த இந்தியா உறுதியளித்துள்ளது. "ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களின் சப்ளை நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தப் போதுமானதாக இல்லை. இந்தியாவின் முன்னுரிமை நிலக்கரி பயன்பாட்டை விரும்புவதற்குப் பதிலாக அதை நிறுத்துவதில் இருக்க வேண்டும் என்று டோங்கியா கூறுகிறார். இருப்பினும் இந்தியாவின் நிலக்கரியில், சுமார் 35 சதவீதத்திற்கும் மேலானவற்றில் சாம்பல் அதிகமாக உள்ளது. இது சூழலை மிகவும் மாசுபடுத்துகிறது. கிரீன்பீஸ் நிறுவனத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிலக்கரி உமிழ்வுகளால் உயிரிழக்கிறார்கள்.
ஃபரிதாபாத்தில், 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறிய தொழிற்சாலை செயல்படத் தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட தடையில்லா மின்சாரத்தைத் தான் பார்த்ததில்லை என்று சந்தீப் மால் கூறுகிறார். அதோடு, தொடரும் மின்வெட்டு அவரை சோர்வடையச் செய்துள்ளது.
"இது வியாபாரம் செய்வதற்கான வழி இல்லை. வேலைவாய்ப்புகளையும் வரிகளையும் நாங்கள் கொடுப்பதற்கு, எங்களுக்குக் கிடைப்பது இதுதானா?" என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













