நிலக்கரி பற்றாக்குறை சிக்கலில் மின் உற்பத்தி: மீள்வதற்கு என்ன செய்யப்போகிறது இந்தியா?

இந்திய மின் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மின் தொகுப்பு எதிர்கொள்ளும் தீவிர சிக்கல்.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் உள்ள சுமார் 135 அனல் மின் நிலையங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா?

இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதுபோன்ற சிக்கலான நிலையே நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அடிப்படை பிரச்சனை என்ன?

பொதுவாக அனல் மின் நிலையங்களில் அடுத்த 14 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் வைக்கப்படும். ஆனால் தற்போது இந்தியா முழுவதும் பெரும்பாலான அனல் மின் நிலையங்களில் அடுத்த 4 -5 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது. கடந்த (அக்டோபர்) 4ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 16 அனல் மின் நிலையங்களில் அடுத்த நாள் தேவைக்கே நிலக்கரி இல்லாத நிலை இருந்தது. மேலும் 45 மின் நிலையங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் இருந்தது.

நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் அமைக்கப்படாத 98 அனல் மின்நிலையங்களில் நிலைமை மிகச் சிக்கலானதாக இருந்தது. அதாவது, 8 நாட்களுக்கும் குறைவான அளவிலேயே நிலக்கரி கையிருப்பில் இருந்தது.

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி 388 கிகா வாட். இதில் 54 சதவீதம் 208.8 கிகா வாட் மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால் கடந்த சில வாரங்களில் இந்தியாவின் மின்சாரத் தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிட்டால், இந்தியாவின் மின்சாரத் தேவை தற்போது 10 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு இதே மாதம் மின் தேவை 169 கிகா வாட்டாக இருந்த நிலையில், தற்போதைய தேவை 174 கிகா வாட்டாக உயர்ந்துள்ளது.

நிலக்கரி

பட மூலாதாரம், Reuters

இப்போது ஏற்பட்டிருக்கும் நிலக்கரி பற்றாக்குறைக்கு காரணம் என்ன? முதல் காரணம், ஏப்ரல் முதல் பெய்த மழையின் காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி இல்லாத நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றாலும் கடந்த சில வாரங்களில் நிலக்கரியின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உலகம் முழுவதுமே நிலக்கரியின் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளதுதான்.

நிலக்கரியை ஏன் இறக்குமதி செய்ய முடியவில்லை?

உலகில் அதிகம் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு இந்தியாவைக் கடுமையாக பாதித்திருக்கிறது. இறக்குமதி நிலக்கரியை நம்பியிருந்த அனல் மின் நிலையங்கள் தற்போது உள்நாட்டு உற்பத்தியை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உள்நாட்டில் அந்த அளவுக்கு தற்போது உற்பத்தி இல்லை.

உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் சூழல் இல்லையென நிபுணர்கள் கூறுகின்றனர்.

புகைப் போக்கி

பட மூலாதாரம், PA Media

"கடந்த காலங்களிலும் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறை நிலக்கரியின் விலை நிஜமாகவே மிக அதிகமாக இருப்பதுதான் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது" என்கிறார் பொருளாதார நிபுணரும் நோமுரா நிறுவனத்தின் துணைத் தலைவருமான டாக்டர் ஆரோதீப் நந்தி. "விலை உயர்ந்த நிலக்கரியை இறக்குமதி செய்தால், மின்சாரத்தின் விலை அதிகரிக்கும். அந்த விலை உயர்வு நுகர்வோரைச் சென்றடையும்" என்கிறார் அவர்.

ஆகவே, இந்த சிக்கல் நீடிக்கும் பட்சத்தில் இந்தியா முழுவதும் மின்சாரத்தின் விலை உயர்வது என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். தற்போது வட இந்திய மாநிலங்களில் மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடியாக மாற ஆரம்பித்துள்ளது. ஜார்க்கண்ட், பிஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி 15 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் மின்தடையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன.

நிலைமை இப்படியே நீடித்தால் பொருளாதார மீட்சியை நோக்கிய இந்தியாவின் பயணம் மிகச் சிக்கலானதாக இருக்கும் என்கிறார் கோல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜோரா சாட்டர்ஜி. இந்த நிறுவனம்தான் இந்தியாவுக்குத் தேவையான நிலக்கரியின் 80 சதவீதத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

மின்சாரத்தின் மூலம்தான் எல்லாமே இயங்குகின்றன. சிமெண்ட் உற்பத்தி, எஃகு உற்பத்தி, கட்டுமானத் தொழில்துறை போன்ற எல்லாமே நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்கிறார் ஜோரா சாட்டர்ஜி. நிலக்கரியை அதிகமாகச் சார்ந்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார் அவர். இந்தியா அதிக அளவில் புதுப்பிக்கத்த எரிசக்தித் துறையில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்கிறார்.

இது மிகப் பெரிய பிரச்சனை என்பதால் குறுகிய காலத் தீர்வு ஏதும் இதற்கு இல்லை என்கிறார் டாக்டர் நந்தி. "நமக்கான மின்சாரத்தில் பெரும்பகுதி நிலக்கரியில் இருந்துதான் கிடைக்கிறது. அனல் மின்சாரத்திற்கு சரியான மாற்றை நாம் இன்னும் கண்டடையவில்லை. ஆகவே, இது விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் என்பது உண்மைதான். ஆனால், நம் மின்சாரத் தேவையின் பெரும்பகுதி இன்னும் பல காலத்திற்கு நிலக்கரியை மையப்படுத்தியதாகவே இருக்கும்" என்கிறார் அவர்.

அனல் மின்சாரத்தையும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தையும் கலந்து பயன்படுத்துவது நீண்ட காலத் தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மின் உற்பத்தி

பட மூலாதாரம், Central Eletricity Authority

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவரான எஸ். காந்தி. "கொரோனா காலகட்டத்தில் மின்தேவை குறைந்து பல அனல் மின் ஆலைகள் உற்பத்தியை குறைத்தன. சூரிய மின்சக்தியின் விலை அனல் மின் நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விலையைவிட குறைவாக இருந்ததால், பலரும் அதனையே நாட ஆரம்பித்தார்கள். ஆனால், இப்போது கோவிட்டிலிருந்து மீண்டு வருவதால், உலகம் முழுவதுமே மின் தேவை அதிகரித்துள்ளது. பல அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை போதுமான அளவுக்கு இருப்பும் வைக்கவில்லை. உலகம் முழுவதும் விலை அதிகரித்திருப்பதால் இறக்குமதியும் சாத்தியமில்லாமல் இருக்கிறது" என்கிறார் எஸ். காந்தி.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிலும் நிலைமை சிக்கலானதாகவே இருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி நிலவரப்படி, மேட்டூர் இரண்டாவது அனல் மின் நிலையத்தைத் தவிர பிற மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு எட்டு நாட்களுக்குக் குறைவாகவே இருக்கிறது.

மேட்டூர் முதலாவது நிலையத்தில் ஒரு நாளுக்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நான்கு நாட்களுக்குமே நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது. பாரதீப் துறைமுகத்தில் உள்ள நிலக்கரியைக் கொண்டுவராததால், கையிருப்பு குறைந்திருப்பதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவிக்கிறது.

இந்த நிலை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்?

நிலக்கரி

பட மூலாதாரம், AFP

இந்தப் பற்றாக்குறை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதில் தெளிவில்லை என்கிறார் டாக்டர் நந்தி. "மழைக்காலம் முடிந்து குளிர் காலம் துவங்குவதால், பொதுவாக மின் தேவை குறையும். அதனால், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி குறையுமென நம்புவோம்" என்கிறார் அவர்.

ஆனால், பிரச்சனை வெறும் இந்திய நிலையை மட்டும் பொறுத்ததல்ல. உலகம் முழுவதும் எரிவாயுவின் விலை குறைந்தால், அதன் மூலம் இயங்கும் மின் நிலையங்கள் செயல்படத் துவங்கும். அப்போதும் நிலைமை சற்று மேம்படும்.

இந்திய அரசைப் பொறுத்தவரை, அரசுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இவையெல்லாம் எத்தனை நாட்களில் நடக்கும் என்பதுதான் கேள்விக் குறி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :