You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி - என்ன பிரச்னை?
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விக்ரமிற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், "விக்ரமிற்கு நெஞ்சில் சிறிய அசெளகர்யம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எங்களின் சிறப்பு மருத்துவக் குழு அவரை பரிசோதித்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. அவர் நலமாக உள்ளார். விரைவில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விக்ரமின் நிர்வாகியான சூர்யநாராயணன் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "சீயான் விக்ரமிற்கு நெஞ்சில் சிறிய அளவில் அசௌகர்யம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. சில செய்திகளில் சொல்லப்படுவதைப் போல அவருக்கு மாரடைப்பு ஏதும் ஏற்படவில்லை. இம்மாதிரி வதந்திகளைக் கேட்பது வலி மிகுந்ததாக இருக்கிறது.
இந்தத் தருணத்தில் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தேவைப்படும் தனிமையை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். சீயான் நலமுடன் இருக்கிறார். ஒரு நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்" என்று தெரிவித்திருந்தார்.
விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் கார்த்தி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விக்ரமின் திரைப்பயணம்
1990லிருந்து தமிழ்த் திரையுலகில் நீடித்துவரும் விக்ரம், தமிழ் சினிமாவின் சில முக்கியமான திரைப்படங்களைத் தந்தவர். 1990ல் வெளியான என் காதல் கண்மணி திரைப்படத்தில்தான் விக்ரம் அறிமுகம் என்றாலும், ஸ்ரீதர் இயக்கிய தந்துவிட்டேன் என்னை திரைப்படம்தான் இவரை கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான ஸ்ரீதரின் கடைசித் திரைப்படத்தில் நடித்த பெருமை இவருக்குக் கிடைத்தது.
அதேபோல, பிரசித்திபெற்ற ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் முதன் முதலில் இயக்கிய திரைப்படத்தின் ஹீரோவும் விக்ரம்தான். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா.
இதற்குப் பிறகு விக்ரம் நடித்து வருடத்திற்கு இரண்டு, மூன்று திரைப்படங்கள் வெளியானாலும், 'உல்லாசம்', 'ஹவுஸ்ஃபுல்' போன்ற சில திரைப்படங்களைத் தவிர எதுவும் கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் 1999ல் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த 'சேது' வெளியானது.
முதல் வாரத்தில் திரையரங்குகளுக்கு ஆட்களே வராத நிலையில், இரண்டாவது வாரத்திலிருந்து நிலைமை மாறியது. விமர்சனங்களும் பாசிட்டிவாக வர ஆரம்பிக்க, திரையரங்குகளில் குவிய ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். விக்ரமின் கேரியரிலேயே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது சேது.
இதற்குப் பிறகான அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏறுமுகம்தான். தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி என்று மிகப் பெரிய வசூல் நட்சத்திரமாக உருவெடுத்தார் விக்ரம்.
2003ல் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது விக்ரமிற்கு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், அருள், அன்னியன், பீமா, கந்தசாமி போன்ற கமர்ஷியல் படங்களிலும் தொடர்ந்து நடித்தார் விக்ரம்.
இதற்குப் பிறகு வெளிவந்த ராவணன், தெய்வத் திருமகள், ஐ போன்ற படங்கள் அவரை தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தில் வைத்திருந்தன. ஆனால், 2014-15க்குப் பிறகு, சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் போன்ற படங்கள் முக்கியமான படங்களாக இருந்தாலும் அவரது கிராஃப் கீழே சரியா ஆரம்பித்தது. ஸ்கெட்ச், மகான் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
ஆனால், விக்ரம் நடித்து வெளிவரவிருந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
நடிகர் என்ற பரிணாமம்போக, டப்பிங் கலைஞராகவும் குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றியிருக்கிறார் விக்ரம். அஜீத்குமார் அறிமுகமான அமராவதியில் அவருக்கு குரல் கொடுத்தது விக்ரம்தான். அதற்குப் பிறகு, அப்பாஸ், பிரபுதேவா என தொடர்ந்து டப்பிங் கலைஞராகவும் மிளிர்ந்தார் விக்ரம்.
சுருக்கமாகச் சொல்வதானால், விக்ரமின் திரைப்பயணம் என்பது, தனது கடின உழைப்பால் திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த ஒரு கலைஞனின் கதை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்