You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்ருதிஹாசன்: "உடல்நிலை சரியில்லை என்றாலும் உள்ளம் சரியாக இருக்கிறது" - ஹார்மோன் பிரச்னைகள் குறித்து பேசியது என்ன?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
தனக்கு பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் எனும் ஹார்மோன் பிரச்னைகள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அதனை உடற்பயிற்சி, முறையான உணவுப்பழக்கத்தின் மூலம் எதிர்கொண்டு வருவதாக தன்னம்பிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் என மோசமான ஹார்மோன் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறேன். சமநிலையின்மை, வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்கள் ஆகியவற்றுடன் போராடுவது கடினம் என பெண்கள் நன்றாக அறிவர். ஆனால், அதனையே நினைத்துக்கொண்டிருக்காமல் அதனை என் உடலில் ஏற்பட்டுள்ள இயற்கையான விளைவு என ஏற்றுக்கொண்டு போராட தொடங்கியிருக்கிறேன். சரியானவற்றை உண்டு, நன்றாக உறங்கி, உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
என் உடல்நிலை வேண்டுமானால் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், என் உள்ளம் அப்படியில்லை. உடலுறுதியுடன் இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியான ஹார்மோன்கள் ஓடட்டும். இது நான் பிரசங்கம் செய்வது போன்று தோன்றும். ஆனால், இந்த சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் இந்த பிரச்னைகள் என்னை வரையறுக்க அனுமதிக்காமல் இருப்பதற்குமான பயணம் இது. உங்களிடம் இதனை பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுடன் தான் உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். அவருடைய பதிவுக்குக் கீழ் பலரும் நம்பிக்கையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ருதிஹாசன் குறிப்பிட்ட பிசிஓஎஸ், எண்டோமெட்ரியாசிஸ் என்பது என்ன என கேள்விகள் எழலாம். அவற்றின் அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
பிசிஓஎஸ்
பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம் என்பதன் சுருக்கமே பிசிஓஎஸ். இது பெண்களின் கருவகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிக்கிறது. இளம் பெண்களிடம் பெரும்பாலும் காணப்படும் ஹார்மோன் பிரச்னையாக இது இருக்கிறது. ஒழுங்கற்ற அளவிலான ஹார்மோன்கள், அதிகமான இன்சுலின் சுரப்பு ஆகியவை பிசிஓஎஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதன் அறிகுறிகளாக, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாயே ஏற்படாமல் இருப்பது, கர்ப்பமடைவதில் சிக்கல்கள், அதிகமான டெஸ்டோஸ்டீரான் சுரப்பு காரணமாக முகம், கை, கால் பகுதிகளில் அதிகமான முடி வளர்வது, உடல் எடை அதிகரிப்பு, எண்ணெய் பசை அதிகமாக இருப்பது, முகப்பருக்கள் ஆகியவை முதன்மையான அறிகுறிகளாக உள்ளன என, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான என்.ஹெச்.எஸ் தெரிவிக்கின்றது.
பிசிஓஎஸ் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய மகப்பேறு மருத்துவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான சாந்தி ரவீந்திரநாத், "பெண்களின் கருவகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளே பிசிஓஎஸ். ஆண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள், பிசிஓஎஸ் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு அதிகமாக சுரக்கும். உடல் பருமன் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் 'லீன் பிசிஓஎஸ்' என்பது ஏற்படுகிறது.
பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் தென்படாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் ஏற்படும். பிசிஓஎஸ்ஸை வாழ்வியல் மாற்றங்களின் மூலம் சரிசெய்ய முடியும். உடல் எடையைக் குறைப்பது பலனளிக்கும். ஆனால், 'லீன் பிசிஓஎஸ்' இருப்பவர்களுக்கு சிகிச்சை அவசியம். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கடைபிடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, போதுமான உறக்கம், மதுப்பழக்கம் - புகைப்பழக்கங்களை தவிர்த்தல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களின் மூலம் பிசிஓஎஸ்ஸை கட்டுப்படுத்தலாம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எண்டோமெட்ரியாசிஸ் - கருப்பை அகப்படலம்
கருப்பையின் உட்சுவரில் பொதுவாக ஏற்படும் தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே எண்டோமெட்ரியாசிஸ் எனப்படுகிறது. இது குடல், சிறுநீர்ப்பையிலும் தோன்றும். இந்த திசுப்படலங்களால் ஏற்படும் ரத்தப்போக்கு மாதவிடாயைப் போன்று வெளியேறுவது இல்லை. இதனால் அப்பகுதியை சுற்றி புண்கள் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு இதனால் வலி உண்டாவதில்லை என்றாலும், பெரும்பாலானோருக்கு உடல் பலவீனமாகும் அளவுக்கு வலி ஏற்படுகின்றது. பெரும்பாலும் மாதவிடாயின்போது வயிற்று வலி ஏற்படும். இதனால் கர்ப்பமாவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இடுப்பு வலி, சோர்வு, மாதவிடாயின்போது அதிகமான உதிரப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
"எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னைகளுக்கு மாத்திரைகள், மருந்துகள் என பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இந்த ஹார்மோன் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வுகளுடன் தகுந்த நேரத்தில் மகப்பேறு மருத்துவரை அணுகினாலேயே இவற்றை சரிசெய்யலாம், பயப்படத் தேவையில்லை" என மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்