சசிகலாவின் ரூ.15 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (02/07/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
சசிகலா, பினாமி பெயரில் நடத்தி வந்ததாகச் சொல்லப்படும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, சசிகலா 2016-ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சொத்துகளை வாங்கிக் குவித்ததாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், சசிகலா, அவரது உறவினர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சை உள்பட 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் சசிகலா முறைகேடாக வாங்கிக் குவித்த சொத்துகளின் ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கியது. இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணையின்படி சசிகலா பினாமி பெயரில் வாங்கிக் குவித்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர் என அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பினாமி சட்டத்தின் கீழ் அவர் தொடர்புடைய சொத்துகளைப் பட்டியலிட்டு முடக்கி வருகின்றனர். முதற்கட்டமாக சென்னை, கோவை, புதுச்சேரி உள்பட 9 இடங்களில் அவர் வாங்கிய ரூ1,600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது கட்டமாக சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் அவருக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.


மூன்றாவது கட்டமாக கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகிய இடங்களில் உள்ள ரூ.300 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முடக்கினர். இந்நிலையில் சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் இயங்கி வந்த ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம் சசிகலாவின் பினாமி நிறுவனம் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தை முடக்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.15 கோடி என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். பினாமி சட்டத்தின் கீழ் இதுவரையில் சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.2,215 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என தினத்தந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி
ஆளில்லாத போர் விமானத்தை இயக்கும் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ)தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப் பயிற்சி தளத்தில் நேற்று முதலாவது ஆளில்லா போர் விமானம் சோதித்துப் பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், DRDO
இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்கொண்டனர். தன்னிச்சையாகப் பறந்து இலக்குகளைச் சரியாகத் தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தரையிலிருந்து வானில் பறந்தது, வழிகாட்டிக்கான நடைமுறைகளைக் கையாண்டது, கீழே இறங்கியது என அனைத்தும் சுமுகமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திட்ட அதிகாரிகளுக்கு டிஆர்டிஓ தலைவரும் பாதுகாப்புத் துறை செயலருமான டாக்டர்.ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.

இலங்கை ஊடகங்களில் வெளியான சில முக்கிய செய்திகள்
காலி போராட்டத்தில் அடிப்படை உரிமை மீறல்
ராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக எதிர்ப்புப் பதாகைகளை நீக்கியமையினால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை நேற்று தாக்கல் செய்ததாக நியூஸ் ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
"இலங்கை-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, காலி கோட்டையில் சாத்வீக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
ராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அந்த அமைச்சகத்தின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் சாத்வீக வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


அதன்போது, அங்குப் பிரவேசித்த ஆயுதம் ஏந்திய ராணுவ அதிகாரிகள், பலவந்தமாகத் தம்மிடம் இருந்த எதிர்ப்புப் பதாகைகளை நீக்கி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகளின் இவ்வாறான நடத்தையினால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமை, சுதந்திரமாக ஒன்று கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
அதோடு, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையினால், 5 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது," என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையினால், 5 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்துக்கு தீ மூட்டியவருக்கு விளக்கமறியல்

பட மூலாதாரம், Getty Images
கடந்த மார்ச் 31ஆம் தேதி, மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, பேருந்து ஒன்றுக்குத் தீ மூட்டிய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 15 ஆம் தேதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "மார்ச் 31-ஆம் தேதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது பேருந்து ஒன்றுக்குத் தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான குறித்த நபர் தெரணியகலை பகுதியைச் சேர்ந்தவராவார்.
அவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் காவல்துறை தெரிவித்திருந்தது," எனக் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













