தமிழ்நாடு: ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறா? - அரசின் ஆய்வு எழுப்பும் சந்தேகங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாக அதிர்ச்சியூட்டக் கூடிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 'அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் சில சந்தேகங்கள் இருந்தாலும் சிறுநீரக நோய்கள் அதிகமாவதற்கு நவீன உணவு முறைகளும் வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன' என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையும் பங்கேற்றது. தமிழ்நாடு முழுவதும் 177 இடங்களில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட 4741 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் கொண்ட 92 ஆய்வுக் குழுக்கள், பல்வேறு நிலைகளில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தியது. சிறுநீரகக் கோளாறுகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லாததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளை தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ' 4741 பேரில் 455 நபர்களுக்கு ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 9.5 சதவீதம் ஆகும். 276 பேருக்கு ஆல்புமின் அளவு அதிகம் இருந்துள்ளது. இவர்களைத் தவிர 367 பேருக்கு சிறுநீரில் ரத்த சிவப்பணுக்கள் இருந்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 7.7 சதவீதம் ஆகும். தொடக்க நிலையிலான இந்தக் கண்டுபிடிப்பின்படி ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் உள்ளன. சிறுநீரகக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 'நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் என தொற்றா நோய்கள் மூலம் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதால் உயிரிழப்பும் அதிகமாகிறது. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அதிகளவில் டயாலிஸ் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க நிலையில் நோயைக் கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை போன்றவற்றின் மூலம் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்' எனத் தெரிவித்துள்ளது. தவிர, தற்போது நோய் கண்டறியப்பட்டவர்களை தொடர் சிகிச்சையில் வைத்துக் கண்காணித்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் சிறுநீரகக் கோளாறு உறுதி செய்யப்பட்டால், அவர்களை நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களாக வகைப்படுத்த உள்ளதாகவும் பொதுசுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
புள்ளிவிவரம் சரியானதா?
''பொதுசுகாதாரத்துறையின் ஆய்வு முடிவை எவ்வாறு எடுத்துக் கொள்வது?'' என சிறுநீரக அறுவையியல் மருத்துவரும் தருமபுரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இரா.செந்திலிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். ''சிறுநீரகக் கோளாறு ஏன் அதிகமாகிறது என்பது தொடர்பாக முன்னரே ஓர் ஆய்வினை நடத்தி அதனை இதனுடன் ஒப்பிட்டிருந்தால் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். முதல்முறையாக பொதுசுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாகக் கூறுவது என்பது அதிகப்படியாக உள்ளதாகவே நினைக்கிறேன்'' என்கிறார்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''சென்னை ஐ.ஐ.டியில் 500 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 100 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்கள் யாரும் அறிகுறி உள்ளவர்களாக இல்லை. அதேபோல், சிறுநீரகக் கோளாறு தொடர்பாக பொதுமக்களிடம் ரேண்டமாக மாதிரிகளை எடுத்திருந்தால் அந்த ஆய்வு சரியானதாக இருந்திருக்கும். மருத்துவமனைக்கு சிறுநீரகக் கோளாறு தொடர்பாக சிகிச்சை வருகிறவர்களின் எண்ணிக்கை என்பது வேறு. எந்தவித அறிகுறியும் இல்லாமல் தெருவில் நடந்து செல்லும் ஐந்து நபர்களில் ஒருவரை சோதித்தால் சிறுநீரகக் கோளாறு தெரியவரும் என்பது அச்சப்பட வேண்டிய ஒன்று. அதேநேரம், முன்னெப்போதும்விட சிறுநீரக நோய்கள் அதிகமாக இருப்பதையும் ஒரு மருத்துவராகப் பார்க்க முடிகிறது'' என்கிறார்.
சிறுநீரக கோளாறு அதிகரிப்பதன் பின்னணி
''என்ன காரணம் என விவரிக்க முடியுமா?'' என்றோம். '' நவீன உணவு முறையும் வாழ்க்கை முறையும் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. உணவு முறையைப் பொறுத்தவரையில் முன்பைவிட அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட் உணவுகளை மனிதர்கள் உட்கொள்கின்றனர். அதிலும், ரிபைன்டு (Refined) எனப்படும் தூய்மைப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டான பிஸ்கெட், ஐஸ்கிரீம், கிரீம் வகைகளை அதிகம் சாப்பிடுகின்றனர். எங்கள் பகுதியான பாப்பாரப்பட்டியில் முன்பு ஒரு பேக்கரிதான் இருந்தது. தற்போது 44 பேக்கரிகள் வந்துவிட்டன. ஒவ்வோர் ஊரிலும் பேக்கரிகள் அதிகப்படியாக முளைத்துவிட்டன. இங்கெல்லாம் தூய்மைப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துகின்றன. இங்கு பயன்படுத்தப்படும் கிரீம் வகைகள் அதிக ஆபத்து விளைவிப்பவையாக உள்ளன'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், '' செயற்கை உணவுகள் மூலமாக கோழிகளை வளர்க்கின்றனர். அதிகப்படியான பூச்சி மருந்துகளால் காய்கறிகளும் உருவாக்கப்படுவதால் மனிதர்கள் ஆபத்தான சூழலில் உள்ளனர். சிறுநீரக நோய்கள் அதிகமாவதற்கு அடிப்படையான காரணம், நவீன உணவு முறைகள்தான்'' என்கிறார்.
பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
சிறுநீரகக் கோளாறு தொடர்பான ஆய்வு குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''இது தொடக்க நிலையிலான ஆய்வு முடிவுகள்தான். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு. அடுத்த 3 மாதங்களுக்கு இவர்களுக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு இந்த எண்ணிக்கை குறைகிறதா எனப் பார்த்துவிட்டு மேலும் பரிசோதனைகள் அதிகரிக்கும். அது முடிந்த பிறகுதான் இறுதி முடிவை வெளியிடுவோம்'' என்கிறார்.
''திடீரென ஆய்வை மேற்கொள்வதற்கான நோக்கம் என்ன?'' என்றோம். '' இது வழக்கமாக நடந்து வரும் ஆய்வுதான். அவ்வப்போது முடிவுகளை வெளியிடுகிறோம். எனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் என தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் இதுபோன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












