பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம் - காரணம் என்ன?

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம், இதற்கு யார் பொறுப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தியாவின் சில்லறை சந்தையில் கோதுமை மாவின் சராசரி விலை குவின்டால் ஒன்றுக்கு 2880 ரூபாயாக இருந்தது. தற்தோது குவிண்டலுக்கு 3291 ரூபாயாக உள்ளது.

அதாவது, சில்லறை சந்தையில் கோதுமை மாவின் விலை கடந்த ஓராண்டில் குவிண்டலுக்கு சுமார் 400 ருபாய் அதிகரித்துள்ளது.

2010ஆம் ஆண்டுக்குப்பின்னர் இம்முறை கோதுமை மாவு விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு காணப்படுகின்றது.

இது எதனால்? இந்தக்கேள்விக்கான பதிலைக் கண்டறிய முயற்சி செய்வோம்.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத வெப்பம்

இந்தியாவின் வடபகுதிகளில் கோதுமை சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. மத்திய இந்தியாவிலும் அதிக உற்பத்தி உள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோதுமை அறுவடை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வட இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. இதனால் கோதுமை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோதுமைக்கு மார்ச் வரை 25-30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆனால் மார்ச் மாதத்தில் வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப நிலை இதை விட அதிகமாக இருந்தது.

கோதுமை விளைச்சல் சுமார் 5 சதவிகிதம் குறைவாக இருப்பதாக, அரசு ஆவணங்களில், கூறப்படுகிறது.

ஆனால், Ruralvoice.in உடன் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் ஹர்வீர் சிங், "மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் மத்தியப் பிரதேசத்தைச்சேர்ந்த விவசாயிகளிடம் பேசினேன். இந்த முறை மகசூல் 15-25 சதவிகிதம் குறைந்துள்ளது என்று அவர்கள் கூறினார்கள்," என்கிறார்.

கோதுமையின் விளைச்சல் குறைந்து அது விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவே கோதுமை மாவின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம், இதற்கு யார் பொறுப்பு

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா- யுக்ரேன் போர்

கோதுமை விலை உயர்வுக்கு உலகளாவிய நிலைமைகளும் பங்களித்தன. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது.

உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவிகிதம் ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து வருகிறது.

ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. யுக்ரேனில் இருந்து கோதுமை வாங்குபவர்கள் எகிப்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் துனிசியா.

இப்போது உலகின் இரண்டு பெரிய கோதுமை ஏற்றுமதி நாடுகள் போரில் சிக்கியுள்ளன, எனவே அவற்றின் வாடிக்கை நாடுகளில் கோதுமை விநியோகம் தடைபடுவது இயற்கையானதே.

போர் தொடங்கி சில வாரங்களுக்குப் பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கோதுமை ஏற்றுமதியாளர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

"இந்தியாவின் கோதுமை மீது உலகின் பார்வை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நமது கோதுமை ஏற்றுமதியாளர்கள் இதை கவனிக்கிறார்களா? இந்திய நிதி நிறுவனங்களின் கவனம் இதன் பக்கம் உள்ளதா?" என்று அவர் கேட்டார்.

கோதுமை ஏற்றுமதியாளரான யுக்ரேன் மற்றும் ரஷ்யாவும் நெருக்கடியில் உள்ள நிலையில், இதுவரை அந்த நாடுகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்து வரும் நாடுகளுக்கு நமது கோதுமையை ஏற்றுமதி செய்வது பற்றி இந்திய ஏற்றுமதியாளர்கள் யோசிக்க வேண்டும் என்பதே அவர் கூறியதன் பொருள்.

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம், இதற்கு யார் பொறுப்பு

பட மூலாதாரம், Getty Images

கோதுமை ஏற்றுமதியில் சாதனை அதிகரிப்பு

கோதுமை ஏற்றுமதியும் இம்முறை சாதனை அளவில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கோதுமை ஏற்றுமதியில் வரலாறு காணாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடியின் விளைவை, அரசின் கோதுமை கொள்முதலிலும் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு தனியார் வணிகர்கள், குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் அதிக விலை கொடுத்து கோதுமையை வாங்கியதால் அரசு கொள்முதல் குறைந்துள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

சந்தை போக்கு - விலைகள் குறையாது

ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக உள்நாட்டுச்சந்தையில் கொள்முதலுக்கு கோதுமை குறைவாகவே கிடைத்தது. மேலும் விலை உயரும் வாய்ப்பை கருத்தில் கொண்டு சில வியாபாரிகள் மொத்த இருப்பையும் வெளியே எடுக்கவில்லை.

உள்நாட்டு சந்தையில் கூட, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) அதிகமான விலையில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதால் பல்வேறு நகரங்களில் கோதுமை விலை அதிகரித்தது.

சந்தையில் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கோதுமை விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம், இதற்கு யார் பொறுப்பு

பட மூலாதாரம், Getty Images

இதனால் கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில், ரொட்டி மற்றும் பேக்கரி பொருட்களின் விலை 8-10% அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கோதுமை மாவின் விலையும் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சாதனை ஏற்றுமதிக்கு அரசு கொள்கைகள் நிறைய பங்களித்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உதாரணமாக, மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றிருந்த மத்திய உணவுத் துறை செயலர் சுதான்ஷு பாண்டே, "ஏற்றுமதி ஆர்டர்களைக் காட்டினால், ரயில்வே அமைச்சகம் மூலம் உடனடியாக சரக்கு ரயில் பெட்டிகள் வழங்கப்படும்," என்று அறிவித்திருந்தார்.

இதனுடன், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), பல நாடுகளில் வணிகக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்தன. இது சந்தை கண்டுபிடிப்புக்கு உதவியது. தரமான கோதுமை ஏற்றுமதிக்கு ஏதுவாக, பெரிய அளவில் சோதனை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம், இதற்கு யார் பொறுப்பு

பட மூலாதாரம், Getty Images

தாக்கம்

சாதாரணமாக அரசின் கையிருப்பில் இருக்கும் கோதுமை அளவை விட இம்முறை சிறிது குறைவாகவே உள்ளது. உற்பத்தி பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணம். இதன் காரணமாக அரசு கொள்முதலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது காரணம், பிரதான் மந்திரி கரிப் அன்ன கல்யாண் யோஜனா திட்டத்தை 2022 செப்டம்பர் வரை நீட்டித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய அரசிடம் 190 லட்சம் டன் கோதுமை இருப்பு இருந்தது.

இந்த ஆண்டு 195-200 லட்சம் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய கொள்முதல் மூலம் மிச்சம் இருக்கும் கோதுமையின் அளவுக்கு ஒப்பாக மட்டுமே இந்த ஆண்டு கோதுமை வாங்கும் நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.

"கோதுமை இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் முழுத் தரவுகளைப் பார்த்த பிறகும், இந்தச் சூழலை சமாளிக்க அரசிடம் சிறந்த உத்தி இருப்பதாகத் தெரியவில்லை.பொது விநியோக முறை PDS மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவில் கோதுமை விநியோகத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது அரசுக்கு ஆண்டிற்கு 480 லட்சம் டன் கோதுமை தேவைப்படும். ஆனால், கடந்த ஆண்டு கோதுமை இருப்பு மற்றும் இந்த ஆண்டு இருப்பையும் பார்க்கும்போது மொத்தம் 380 லட்சம் டன் கோதுமை மட்டுமே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது, 100 லட்சம் டன் பற்றாக்குறை உள்ளது," என்று ஹர்வீர் சிங் குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம், இதற்கு யார் பொறுப்பு

பட மூலாதாரம், P SRUJAN/ICRISAT

இருப்பினும் கோதுமை மாவு விலை உயர்வுக்கு வானிலையே முக்கிய காரணம் என்று ஹர்வீர் சிங் கருதுகிறார். ஆனால், ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சரியான நேரம் இது என்றும் சந்தையில் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக பதுக்கலுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆலோக் சின்ஹா 2006 முதல் 2008 வரை இந்திய உணவுக் கழகத்தின் (FCI) தலைவராக இருந்துள்ளார்.

"இந்த முறை விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) விட அதிக விலைக்கு விற்றுள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில், இது விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு நல்ல செய்தி,"என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

"அரசின் கொள்முதல் மதிப்பீடுகள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் உணவுப் பாதுகாப்பிற்குத் தேவையான கோதுமை இருப்பில் பற்றாக்குறை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கோதுமைமாவு வாங்க கடைகளுக்குச் செல்வதில்லை. பொது விநியோக முறை மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா மூலம் கோதுமையை பெற்று, அதை அரைத்து அந்த மாவை பயன்படுத்துகிறார்கள். அதாவது கோதுமை மாவு வாங்கி சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே விலை அதிகரித்துள்ளது. மொத்தமாகச் சொன்னால், கோதுமை ஏற்றுமதியால், மத்திய அரசும் விவசாயிகளும் பயனடைகின்றனர்," என்கிறார் ஆலோக் சின்ஹா.

காணொளிக் குறிப்பு, இலங்கையில் பதற்றம் - சஜித் பிரேமதாச மீது தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: