தமிழ்நாட்டு ஹாக்கி வீரர்கள் இந்திய அணியில்: 20 ஆண்டுகளுக்கு பின் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், S.Karthik
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இருவரும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் பயிற்சி பெற்றவர்கள்.
ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் வரும் 23ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கான 24 வீரர்கள் கொண்ட பட்டியலை ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூபேந்திர பால் சிங் கேப்டனாகவும் துணை கேப்டனாக பீரேந்திர லக்ரா, அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள், புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தீப்பெட்டி தொழிலாளி மகன்
இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், அரியலூரை சேர்ந்த செ. கார்த்திக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இருவரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி சக்திவேல் - சங்கரேஸ்வரி தம்பதியரின் மகன் மாரீஸ்வரன். அரியலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி இரவுக் காவலாளி செல்வம் மகன் கார்த்திக். இருவரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தந்தையின் கனவு

பட மூலாதாரம், Mareeswaran sakthivel
இதில், தந்தை விரும்பிய விளையாட்டில், உயரிய இடத்தை பிடித்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் மாரீஸ்வரன். பெங்களூருவில் உள்ள பயிற்சி முகாமில் இருக்கும் அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "எனது தந்தையும் ஹாக்கி விளையாட்டு வீரர். ஹாக்கியின் மீது ஆர்வம் மிக்கவர். ஆனால், குடும்ப சூழ்நிலையால், தீப்பட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கிறார். அவர்தான் எனக்கு ஹாக்கி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
இதனால், 9ம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் சேர்ந்து படித்து வந்தேன். எங்கள் பகுதியில் நிறைய ஹாக்கி விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். அவர்களைப் போல் வர வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன்.
தமிழ்நாடு அணியில் 5 முறை இடம் பெற்றேன். விளையாட்டு ஒதுக்கீட்டில் இந்திய கணக்கு தணிக்கை துறையில் பணியாற்றி வருகிறேன். இப்போது இந்திய அணியில் இடம் பெற்றதற்கு, தொடர் முயற்சி, கடின உழைப்பு, பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்தான் காரணம். விளையாட்ட்டில் ஆர்வம், திறமை, விடா முயற்சி இருந்தால் அனைவரும் சாதிக்கலாம். இதற்கு நானே உதாரணம்.' என்கிறார் மாரீஸ்வரன்.
காவலாளி மகன் இந்திய ஹாக்கி அணியில்
மற்றொரு இந்திய வீரரான கார்த்திக்கும் பள்ளி மாணவராக இருக்கும் போதே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் சேர்ந்தவர்தான். அரியலூரில் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வசிக்கும் கார்த்திக் குடும்பமும் எளிய பின்னணியைக் கொண்டது.
இவரது தந்தை அரசுக் கல்லூரியில் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். தாய் வீட்டு வேலைகளுக்கு சென்று வருகிறார். குடும்பத்தின் வறுமையால் மகனின் விருப்பம் தடைபடக் கூடாது என்று முடிந்த வரை உதவியுள்ளோம் என்கிறார் கார்த்திக்கின் அம்மா வளர்மதி.
கார்த்திக்கின் அம்மா பிபிசி தமிழிடம் கூறுகையில், 'கார்த்திக் 7ம் வகுப்பு வரை அரியலூர் தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை ஒய்.எம்.சி.ஏயில் 10ம் வகுப்பு வரை படித்தார்.
இதையடுத்து, திருச்சியில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர்ந்தார். இப்போது கோவில்பட்டி (எஸ்.எஸ் துரை சாமி நாடார் கலை, அறிவியல் கல்லூரி) படித்து வருகிறார்.
படிப்பு மற்றும் விளையாட்டிற்காக அரியலூர், சென்னை, திருச்சி, கோயில்பட்டி என்று எங்கு சென்றாலும் பொருளாதாரம் தடையாக இருந்து விடக் கூடாது என்பதற்காக, எங்கள் சக்திக்கு மீறி வேலை செய்துள்ளோம்.
அவனும் குடும்ப சூழல் புரிந்து, பொறுப்பாக இருப்பான். அதனால்தான், இன்றைக்கு இந்தியாவிற்கே விளையாடுகிறார். இதக் கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தியா டீம்ல விளையாடி, பதக்கத்தோடு திரும்புவார். எங்க ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்,' என்கிறார் வளர்மதி மகிழ்ச்சியுடன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பெற்ற பயிற்சி

பட மூலாதாரம், Muthukumar
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்றவர்கள்.
கடந்த 2020ம் ஆண்டு இந்திய ஜூனியர் அணிக்கான பயிற்சி முகாமிற்கு சென்றவர்கள் என்கிறார் தமிழ்நாடு விளையாட்டும் மேம்பாட்டு ஆணைய ஹாக்கி சிறப்பு விளையாட்டு விடுதியின் பயிற்சியாளர் முத்துக்குமார்.
தொடர்ந்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில்,
'கடந்த 2015ம் ஆண்டு கோவில்பட்டியில் 7. 50 கோடி ரூபாயில் சர்வதேச அளவிலான செயற்கைபுல்வெளி மைதானம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி மாணவர் சிறப்பு விளையாட்டு விடுதி கிருஷ்ணாநகரில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி சிறப்பு விளையாட்டு விடுதி தமிழ்நாட்டில் இங்குதான் உள்ளது.
திறமைக்கு தடையில்லை

பட மூலாதாரம், Muthukumar
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 17 - 25 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 30 பேர் இந்த விடுதியில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். மாரீஸ்வரன், கார்த்திக் மட்டுமல்ல இங்கு பயிற்சி பெறும் பலரும் எளிய குடும்பத்தினர்தான்.
விளையாட்டிற்கு திறமை, ஆர்வம் இருந்தால் போதும், குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட வேறு எதுவும் தடையில்லை என்று இவர்கள் நிருபித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, கடந்த 2009, 2011 ஆண்டுகளில் இந்திய ஜூனியர் அணியில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இருவர் தேர்வு
இந்திய சீனியர் ஆண்கள் அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டு வீரர்கள் இருவர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் இருவரும் எங்களது விடுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி, பெருமிதமாக இருக்கிறது. இவர்களைப் போல் இன்னும் பலர் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.'' என்கிறார் முத்துக்குமார்.
மேலும், கடந்த 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக மீண்டும் இந்திய அணி மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டி வீரர்கள் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இது இளம் தலைமுறைக்கு உத்வேகத்தை அளித்துள்ளதாக மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து

பட மூலாதாரம், S Karthik
இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில். 'இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!.' என்று தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியும் ஹாக்கியும்

பட மூலாதாரம், Thoothukudi District Hockey Association
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் வரலாற்றில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தனி இடம் உண்டு. இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் 1952ம் ஆண்டும் கோவில்பட்டிக்கு வந்து, வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் தன்ராஜ்பிள்ளை, முகது ரியாஸ் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். வீரர்களின் ஆர்வம் மற்றும் திறமையினால், கோவில்பட்டி நகரம் ஹாக்கிபட்டி என்றும் விளையாட்டு வீரர்களால் அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ந்தேதி முதல் 25ந்தேதி வரை தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. அதில், 27 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில், தமிழ்நாடு அணியில் கோவில்பட்டியை சேர்ந்த 9 பேர் களமிறங்கி விளையாடினர். கோவில்பட்டியை சேர்ந்த நிஷிதேவ் அருள் அணியின் கேப்டனாக இருந்தார். இவர்களில் நிஷிதேவ்அருள், அரவிந்த், கவியரசன், திலீபன், சதிஷ் ஆகியோர் இந்திய ஜூனியர் பயிற்சி முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கேற்றனர்.
எவ்வளவு தடைகள் இருந்தாலும் திறமையுடன் கடின உழைப்பு, தொடர் முயற்சி மற்றும் பொறுமையோடு காத்திருந்தால் நிச்சயம் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதைத்தான் நாங்களும் செய்தோம் என்கிறார்கள் இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரர்களாக தேர்வாகியுள்ள மாரீஸ்வரனும் கார்த்திக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













