கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயர்: குழப்பம்தான் மிஞ்சுமா?

ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. 'புராதன சின்னங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதால் குழப்பமே மிஞ்சும்' என்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

புதிய பெயர் சூட்டிய ஸ்டாலின்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் 75 ஆவது பவளவிழா ஆண்டு நிகழ்ச்சியானது, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி, மதுரை உள்பட 13 மாவட்டங்களில் 2,124 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 255 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், 'போக்குவரத்து பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் சென்னையில் பிரமாண்டமான அண்ணா மேம்பாலத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்துக் கொடுத்தார். இந்தப் பாலத்தை முன்னோடியாக வைத்து கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன' என்றார்.

மேலும், 'முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2026 ஆம் ஆண்டுக்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக உருவாக்க உள்ளோம்' எனக் குறிப்பிட்டு, சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு 'முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை' என பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவித்தார்.

குழப்பம்தான் மிஞ்சுமா?

இதற்கு பல்வேறு தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 'ஈ.சி.ஆர் என்று குறிப்பிடப்படும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாலை' என்று பெயர் சூட்டப்படுவதாக செய்திகளில் சொல்கிறார்கள். ஏற்கனவே சோழிங்கநல்லூர் சிக்னலிலிருந்து ஈ.சி.ஆருக்கு செல்லும் இணைப்புச்சாலைக்கு இந்தப்பெயர் உள்ளது. இப்படி செய்வதால் வீண்குழப்பம் ஏற்படும் இல்லையா?' என ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார், எழுத்தாளர் விநாயக முருகன்.

இதே பிரச்னையை சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய சமூக ஆர்வலரும் மூத்த பத்திரிகையாளருமான சமரன், ''முன்னரே சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து அக்கரை வரையுள்ள சாலையானது, 'கலைஞர் கருணாநிதி சாலை' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையையும் கலைஞர் கருணாநிதி சாலை என மாற்றியுள்ளனர். ஒரே சாலையில் இருவேறு பெயர்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் ஒரே பெயராக மாற்றம் செய்யலாம். தவிர, தலைவர்கள் பெயர் சூட்டப்படுவதில் வேறு சிக்கல்களும் உள்ளன'' என்கிறார்.

பொதுவான பெயரே போதுமானதா?

''கிழக்கு கடற்கரைச் சாலை என்ற பெயரே அழகானது. வெளிநாட்டவர்கள் அதிகம் வரக்கூடிய சுற்றுலாதளமாகவும் புராதனச் சின்னங்கள் நிரம்பிய பகுதியாகவும் இது உள்ளது. அந்தவகையில், பொதுவான பெயரில் இருப்பதுதான் சரியானதாக இருக்கும். மறைந்த தலைவர்களின் பெயர் சூட்டப்படுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால், கிழக்குக் கடற்கரைச் சாலை என்பது உலகளவில் கவனிக்கக் கூடிய பெயராக உள்ளது. அதற்குத் தலைவர்களின் பெயர் சூட்டும்போது கடற்கரைச் சாலை என்ற பெயரையே மழுங்கடிக்க வைப்பதாக ஆகிவிடும்.'' எனக் குறிப்பிடும் சமரன்,

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

'' ஓ.எம்.ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையானது மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ராஜிவ்காந்தி சாலை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. முன்பு ஐ.டி சாலை என அழைக்கப்பட்டு வந்தது. 'ஓ.எம்.ஆரா.. ஐ.டி சாலையா, ராஜீவ்காந்தி சாலையா?' என்பதில் குழப்பம் உள்ளது. தபால்களிலும் 'ராஜீவ்காந்தி சாலை' எனக் குறிப்பிட்டு மீண்டும் 'ஓ.எம்.ஆர் சாலை' என எழுத வேண்டியுள்ளது. அடுத்ததாக, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் பெயர் மாற்றப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அப்போது மீண்டும் குழப்பம்தான் மிஞ்சும். எனவே, கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற பொதுவான பெயரே போதுமானதுதான்'' என்கிறார்.

ஈ.சி.ஆர் இனி கே.கே.ஆரா?

இதுகுறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் கேட்டபோது, '' இதில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. ஈஸ்ட் கோஸ்ட் சாலையை ஈ.சி.ஆர் என அழைக்கின்றனர். அதை இனி கலைஞர் கருணாநிதி சாலை எனப் பொருள் கொள்ளும் வகையில் கே.கே.ஆர் என அழைக்கலாம். வெளிநாட்டவருக்குப் புரியாத மொழியில் வைக்கவில்லை. அவர் பெயரில் சாலை அமைவதே மிகப் பொருத்தமானது'' என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :