தமிழ்நாடு ஆளுநர் Vs முதல்வர்: ஊட்டி மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

பட மூலாதாரம், MK STALIN
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு 'வேந்தர்' ஆக முதலமைச்சரை நியமிக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `ஆளுநரிடம் பல்கலைக்கழக வேந்தர் என்ற பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்தச் சட்டங்களும் இல்லை. துணைவேந்தர் தேர்வுக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதியை நியமிக்க வேண்டிய அவசியமும் இல்லை' என்கிறார், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கென தனியாகப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் அறிவிக்கப்பட்டது. சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய துறைகளுக்கு தனியாக பல்கலைக்கழகம் தொடங்கும் சட்ட முன்வடிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் இருக்கும்போது, புதிதாக வரவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதலமைச்சர் இருப்பார் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாக்களில் முதலமைச்சரே தலைமை வகிப்பார் எனவும் மாணவர்களுக்கு பட்டங்கள் உள்பட அனைத்தையும் அவரே வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்வி நிறுவனஙகள், ஹோமியோபதி, யுனானி ஆகிய மருத்துவ கல்லூரிகளும் இதன்கீழ் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரையே வேந்தராக நியமிக்கும் வகையிலான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுவே தாமதமானதுதான்

''புதிதாக தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதே?'' என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடம் கேட்டோம்.
''2010ஆம் ஆண்டு பூஞ்சி கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். இதுவே தாமதமானதுதான். அவசர நிலை காலத்தில் கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றனர். அதன்பிறகு 45 வருடங்கள் கடந்து விட்டன. கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் மீண்டும் கொண்டு வந்திருக்க வேண்டும்,'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ''ஆளுநரிடம் வேந்தர் பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை மாநில அரசுகள்தான் இயற்றின. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் கடமையில் அது இல்லை. மாநில அரசுகள் வலியபோய் எதற்காக அவரிடம் இந்தப் பொறுப்பை கொடுக்க வேண்டும்? இனிமேல் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதியை நியமிக்க வேண்டிய அவசியமும் இல்லை. உயர்கல்வி நிறுவனங்களை மாநில அரசின் நிதியில் நடத்தும்போது இவையெல்லாம் அவசியமில்லாத ஒன்று.
துணைவேந்தர்கள் பேசியது சரியா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அண்மையில், 'தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதியை நிறுத்துவோம்' எனப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது. அப்படிச் சொல்வதற்கு அதற்கு அதிகாரம் உள்ளதா? இதை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும்.
'தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது' என தமிழ்நாடு அரசு தெரிவித்துவிட்டது. தமிழ்நாடு அரசின் வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு அதை நம் மேல் திணிக்கப் பார்க்கின்றனர். அதை ஆதரிப்பது என்பது கண்ணைத் திறந்துகொண்டே பாழுங் கிணற்றில் குதிப்பதற்குச் சமம்'' என்கிறார்.
தொடர்ந்து, ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு குறித்துப் பேசிய ரவிக்குமார் எம்.பி, ''துணைவேந்தர்கள் கூட்டத்தில், 'தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்' என ஆளுநர் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு பல்கலைக்கழகங்களுக்கு இணைவேந்தராக இருக்கக் கூடிய உயர்கல்வித்துறை அமைச்சரை ஆளுநர் அழைக்கவில்லை.
மேலும், இந்தக் கூட்டத்தில் பேசிய பல துணைவேந்தர்கள், 'நாங்கள் தேசியக் கல்விக் கொள்கையை இந்த ஆண்டே அமல்படுத்துவோம்' எனப் பேசியுள்ளனர். அவ்வாறு பேசிய துணைவேந்தர்களிடம் மாநில அரசு உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும். ஆளுநரின் கூட்டத்துக்குச் சென்ற துணை வேந்தர்கள் சிலர் அரசியல்வாதிகள் போலப் பேசியுள்ளனர். அதை மாநில அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது,'' என்கிறார்.
ஆளுநர் வெளிப்படையாகக் கூறுவாரா?

பட மூலாதாரம், @rajbhavan_tn
''கடந்த நான்கு ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியுள்ளார். இதனை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த பிறகு மூன்று பேரை துணைவேந்தர்களாக நியமித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்வுக் கமிட்டியினர் அளித்த மூன்று பேர் பட்டியலில் உள்ளவர்கள் பெற்ற மதிப்பெண் என்ன? எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பதை ஆளுநர் வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இதனைத் தமிழ்நாடு அரசு முறைப்பட கேட்க வேண்டும். காரணம், மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களைத் துணைவேந்தராக ஆளுநர் நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது,'' என்கிறார் ரவிக்குமார்.
மேலும், ''ஆளுநர் மாளிகையில் 19 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. மாநிலத்தையே முடக்கும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். இதனை மத்திய அரசாங்கம் திட்டமிட்டு செய்து வருவதும் தெரிகிறது. மாநில அரசில் சம்பளம் பெறும் துணைவேந்தர்களை வைத்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலத்தையே இவர்கள் பாழடிக்கின்றனர்,'' என்கிறார்.
ஆளுநரை எதுவும் செய்ய முடியாது

''முதலமைச்சரே வேந்தராக வருவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என தமிழ்நாடு பா.ஜ.கவின் ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமாரிடம் கேட்டோம்.
''ஆளுநரை எதிர்த்து மாநில அரசு அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மாநில அரசின் செயல்பாட்டில் அவரும் ஓர் அங்கம். ஆளுநரால் செய்ய முடியாத மசோதாவுக்கெல்லாம், 'ஒப்புதல் கொடுங்கள்' எனக் கேட்கின்றனர்.
இதைவிட அதிகமாக 1991-96 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டிக்கு இடையூறு செய்தனர். அதன் முடிவு மோசமாகத்தான் அமைந்தது. காரணம், ஆளுநரை எதுவுமே செய்ய முடியாது'' என்கிறார்.
'' சட்டசபைக்கும் மேல் கண்காணிப்பு அமைப்பு இருக்கத்தான் செய்யும். குடியரசுத் தலைவர், ஆளுநர், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவையும் சட்டத்துக்கு உட்பட்டு இயங்குகின்றன. இவர்கள் ஆளுநரை தனிப்பட்ட எதிரிபோல சித்தரித்து மக்களிடம் பேசுவது என்பது தவறான செயல்.
மாநில அரசில் நிதித்துறையின் செயல்பாடு என்பது பூஜ்ஜியமாக உள்ளது. அந்தத் துறை மெத்தனமாகச் செயல்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை மறைக்கும் வகையில் ஆளுநர் மீது பழிபோடுகின்றனர்'' என்கிறார்.
மத்திய அரசை எதிர்ப்பதில் அச்சமா?
''அப்படியானால், இதனை திசை திருப்பும் நோக்கில் தி.மு.க அரசு செயல்படுகிது என்கிறீர்களா?'' என கேட்டோம்.
''ஆமாம். மாநில அரசிடம் பெரிதாக எந்த செயல்திட்டங்களும் இல்லை. நேரடியாக மத்திய அரசை எதிர்க்கவும் அவர்களுக்கு அச்சம். அதனால் ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். சட்டபூர்வமான மசோதாக்களுக்கு எல்லாம் ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இவர்கள் சொல்வதுபோல அவர் தபால்காரர் கிடையாது. ஐ.பி.எஸ் முடித்துவிட்டு நீண்டகாலம் பணிபுரிந்துவிட்டு அவர் வந்திருக்கிறார். ஒரு மாநிலத்தையும் அவர் நிர்வகித்துள்ளார். தவறுகளை சரிசெய்யும் முயற்சியில் அவர் இருக்கிறார். நிறைய மசோதாக்களை நிறுத்துவதற்குக் காரணம், தவறுகள் எதுவும் நடக்கக் கூடாது என்பதால்தான்,'' என்கிறார்.
''ஊட்டி மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?'' என்றோம்.
'' அப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் காமராஜர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இப்போதும் அதே தோரணையுடன்தான் செயல்படுகிறது. அதன் பெயர்ப் பலகையைக் கூட மாற்ற முடியவில்லை. இங்கு மாணவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கலாம். ஆனால், கல்வித்தரம் என்பது கீழே போய்விட்டது'' என்கிறார் நிர்மல்குமார்,
ஆளுநர் கொடுத்த தைரியம்

பட மூலாதாரம், @rajbhavan_tn
''பல்கலைக்கழகங்களை சுரண்டிப் பிழைப்பதற்கு ஐந்தாயிரம் பேர் உள்ளனர். தி.மு.க பிரமுகர்களின் தலையீட்டால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சீரழிந்து போனதை மீட்டுக் கொண்டு வருவதற்கே பல ஆண்டுகள் தேவைப்பட்டது.
துணைவேந்தர்களை இவர்கள் நியமித்ததால்தான் இவ்வளவு சீர்கேடுகள் ஏற்பட்டன. கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் எல்லாம் எங்கோ சென்றுவிட்டன. தன்னாட்சி அதிகாரத்தில் இருந்ததால் அண்ணா பல்கலைக்கழகம் தப்பித்துவிட்டது.
அதிலும், ''2006 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தை நான்காகப் பிரித்தனர். அதற்கான பணியாளர்கள் நியமனத்திலும் சீர்கேடுகள் நடைபெற்றன. ஒரு வினாத்தாளுக்கு ஒரு ரூபாய் என்றாலும் பல கோடி ரூபாய்கள் புழங்கக் கூடிய இடமாக பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு பல்லைக்கழகங்கள் மோசமாக செயல்பட்டதற்குக் காரணம், பணம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர்களை நியமித்ததுதான்.
இதனை சீரமைக்க கடந்த ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. தற்போதைய ஆளுநர், துணைவேந்தர்களுக்கு நிறைய தைரியம் கொடுத்துள்ளார். புதிய கல்விக்கொள்கை வந்தால் மட்டும்தான் பெரியளவில் மாற்றம் நடக்கும்'' என்கிறார் அவர்.
தி.மு.கவின் பதில் என்ன?
தி.மு.க ஆட்சி மீதான பா.ஜ.கவின் குற்றச்சாட்டுக்கு பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் சூர்யா வெற்றிகொண்டான், ''அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் வகுக்கப்படவில்லை. அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை அரசிதழில் அவர் வெளியிடலாம். ஆளுநரை மதிக்கக் கூடிய அரசாக தி.மு.க உள்ளது.
கடந்தகாலங்களில் ஆளுநரால் எங்களுக்கு எந்தவிதப் பிரச்னைகளும் வந்ததில்லை. தற்போது மாநில அரசைப் பழிவாங்குவதற்காகத்தான் புதிய ஆளுநரை நியமித்தனர். சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றினாலும் அதனைக் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். தற்போது சீர்கேடுகளை சரிசெய்கிறேன் என்றால், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
``அரசுத் துறைகளின் செயல்பாடுகளை மறைப்பதற்காகத்தான் ஆளுநர் விவகாரத்தைக் கையில் எடுத்ததாகக் கூறுகிறார்களே?'' என்றோம்.
''அரசுத் துறைகளில் சீர்கேடு என்றால் பத்து ஆண்டுகளாக ஆண்டது யார்? அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பா.ஜ.கவும் அ.தி.மு.வும்தான். அதனை நாங்கள் சீர்செய்து வருகிறோம். கூட்டுறவு நகைக்கடன் வரையில் அனைத்தையும் மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம். மாநிலத்தின் நலனில் ஆளுநருக்கு அக்கறை இருந்தால் ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி குறித்து பிரதமரிடம் பேசியிருக்க வேண்டும். குறிப்பாக, மாநில அரசின் வரியில் செயல்படும் ஆளுநருக்கு இந்த அக்கறை இருக்க வேண்டும்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












