நீலகிரியில் ஆளுநர் கூட்டிய மாநாடு - அதிகாரத்தை குறைக்க சென்னையில் சட்ட மசோதா நிறைவேற்றிய திமுக அரசு

தமிழ்நாடு ஆளுநர்

பட மூலாதாரம், RAJ BHAVAN, TAMIL NADU

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் பயணமாக நீலகிரியில் முகாமிட்டுள்ள நிலையில் இன்று உதகமண்டல்ில் உள்ள ராஜ் பவனில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டியிருப்பது அரசியல் ரீதியாக மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா உள்பட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்துகிறார் என்று ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல தளங்களில் ஆளுநருக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை அவர்கல் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், `புதிய உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு' மற்றும் '2047ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும்` என்ற தலைப்பிலும் இரண்டு நாள் கருத்தரங்கு ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதுபோன்ற கூட்டங்களை தன்னிச்சையாக ஆளுநர் நடத்துவதாகவும் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னுடைய அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயல்படுவதாகவும் ஆளும் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஆளுநருக்கான அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சி கூட்டணியினர் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா சட்டமன்றத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி (திங்கட்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளன.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு உயர்கல்வியில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுக்குத்தான் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோதியின் குஜராத்தை போல், தமிழகத்திலும் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளோம்!' என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் 13 அரசு பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை இனி ஆளுநருக்கு பதிலாக மாநில அரசே நியமிக்கும்.

தற்போது பல்கலைக்கழக வேந்தர் ஆக உள்ள ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வரே வேந்தர் ஆக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தெரிவித்துள்ளார். அவரது கருத்தை திமுக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆதரித்துப் பேசியுள்ளனர்.

ஊட்டி மாநாட்டில் ஆளுநர்

இதே வேளை, ஆளுநர் மாளிகை ஒருங்கிணைத்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ` நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்னைகள் நிலவி வந்தன. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியிருக்கிறது," என்று பேசினார்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. நாடு என்பது ஒரே குடும்பம்.

தமிழ்நாடு ஆளுநர்

பட மூலாதாரம், RAJ BHAVAN, TAMIL NADU

நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள்கூட தற்போது நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், யுக்ரேன் - ரஷ்ய போரில் எந்த நாட்டுக்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவை எடுத்தது.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால், தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

2047இல் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஈடுபட வேண்டும்` என்றார் ஆளுநர் ரவி.

உதகமண்டலத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள மாநாட்டில் 40க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் டெல்லியில் பிபிசி தமிழ் கேட்டபோது, "எனது பங்களிப்பாக 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே மாநாட்டில் நான் உரையாற்றினேன். மற்றபடி பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள்தான் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். நான் ஒரு பார்வையாளராகவே அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டேன். இரண்டாம் நாள் மாநாடு தேசிய கல்விக் கொள்கை தொடர்புடையதாக இருக்கும். அதில் மத்திய அரசின் கல்விக்கொள்கை பற்றி விரிவாக விவாதிப்போம்," என்று தெரிவித்தார்.

தன்னிச்சையாக செயல்படுகிறாரா ஆளுநர்?

ப்ரின்ஸ் கஜேந்திரபாபு

பட மூலாதாரம், PRINCE GAJENDRABABU

படக்குறிப்பு, ப்ரின்ஸ் கஜேந்திரபாபு

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, `ஆளுநர் என்பவர் மாநில சட்டப்பேரவையின் ஒரு அங்கம் தான். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

இத்தகைய கருத்தரங்கு நடைபெறுவது தொடர்பான அறிவிப்பை ரகசியமாக வைத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏன் அறிவிக்க வேண்டும். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரை அழைத்து பேச வைப்பதில் என்ன நோக்கம் உள்ளது.

"பல்கலைக்கழகங்களின் இணை வேந்தராக உள்ள உயர்கல்வி துறை அமைச்சரை கலந்தாலோசிக்காமல் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகையே நடத்துவது போட்டி அரசாங்கத்தை நடத்துவதற்கு சமம்," என்றார்.

வேந்தர் பதவியில் ஆளுநர்களா?

தமிழ்நாடு ஆளுநர்

பட மூலாதாரம், RAJ BHAVAN, TAMIL NADU

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன், `பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி என்பது மாநில பட்டியலில் தான் உள்ளது. மாநில அரசுக்கு உயர்கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை வகுப்பதற்கு உயர்கல்வி மன்றம் உள்ளது.

உயர்கல்வி துறை அமைச்சர் அதன் தலைவராக உள்ளார். இந்த மன்றம் மூலமாக தான் உயர்கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் துணை வேந்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இது தான் நடைமுறை.

இதற்கு மாறாக மாநில அரசுக்கு சம்மந்தம் இல்லாததைப் போல ஆளுநர் செயல்படுவது இணக்கமான போக்கு அல்ல. தமிழக அரசின் முடிவு சரியானதே. மாநில பல்கலைக்கழகங்களுக்கு 'ஆளுநர்' தான் 'வேந்தர்' என்றால் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 'குடியரசு தலைவர்' தான் வேந்தராக இருக்க வேண்டும்.

ஆனால் சில பல்கலைக்கழகங்களில் குடியரசு துணைத் தலைவர், பிரதமர் வேந்தர்களாக உள்ளனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் தான் வேந்தராக உள்ளார். எனவே இந்த விஷயத்தில் குறிப்பிட்ட நடைமுறை என்பது கிடையாது.

மேலும் ஆளுநர் சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் இல்லை எனப்படுகிறது. அப்படியென்றால் ஆளுநர் காலம் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்பது தான் பொருள்,` என்றார்.

எதிர்வினையாற்றும் பாஜக

நாராயணன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி

பட மூலாதாரம், BJP TN

படக்குறிப்பு, நாராயணன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன், `இந்த சட்டம், ஆளும் திமுகவின் ஊழலுக்கு துணை போகும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தான் பெரும்பாலான துணை வேந்தர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். ஆளுநர் மூலம் ஊழலின்றி நடைபெற்று வந்த நியமனங்களில் இனி ஊழல் தலைவிரித்தாடும்.

முதல்வர் குஜராத்தை மேற்கோள் காட்டுகிறார். குஜராத்தில் யாரும் ஊழல் முறைகேட்டில் சிக்கவில்லையே. குஜராத்தில் உள்ளதைப் போல நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, தேசிய கல்வி கொள்கை ஆகியவற்ற தமிழகத்தில் ஏற்றுக்கொள்வார்களா. இது தவறான ஒப்பீடாக உள்ளது,` என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி, `ஆளுநர் ஒவ்வொரு விஷயமாக மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாநில அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் ஆளுநர் எப்படி முடிவெடுக்க முடியும்.

மாநில அரசுக்கென கல்வி கொள்கை வகுக்கப்பட்டு வருகிற நிலையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பல்வேறு வழிகளில் திணிக்கும் வேலைகளை ஆளுநர் செய்து வருகிறார். உயர்கல்வியில் மாநில அரசின் உரிமையை தக்க வைக்கும் நோக்கில் தான் மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது.`

இனி மசோதா என்ன ஆகும்?

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தான் இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வரும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், `சட்டப்பேரவை எந்த மசோதாவை நிறைவேற்றினாலும் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் சட்டமாக்க முடியாது. ஆனால் இந்த மசோதா அரசியல் ரீதியாக ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்கும். ஆளுநர் இந்த மசோதாவையும் கிடப்பில் போட்டால் அழுத்தம் உருவாகும். ஆளுநர் மசோதாவை நிராகரித்து அனுப்பினால், தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பலாம்,` என்கிறார் அரி பரந்தாமன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :