பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: “லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பை தடை செய்யலாம்...” - உயர்நீதிமன்றம் கருத்து

பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய இந்திய நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உரிமை (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) பாலியல் குற்றங்கள் மற்றும் விபச்சாரங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் ஒருவரின் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான மனு மீதான விசாரணையின் போது மத்திய பிரதேச உயர்நீதிமன்ற இந்தூர் கிளை நீதிபதி சுபோத் அபியங்கர் கூறியதாக வந்துள்ள அந்த செய்தியில், ''அண்மைக் காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகளால் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ளும்போது, ​​​​லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் தடை செய்யலாம் என்பதை இந்த நீதிமன்றம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த உறவு முறை இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவிக்கிறது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இந்த உறவு முறை பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்கிறது. என நீதிபதி தெரிவித்துள்ளார்'' என்று அந்த செய்தியில் உள்ளது.

தமிழ்நாட்டில் XE திரிபு இல்லை. ஆனால்...

கொரோனா பரவல்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் XE திரிபு கொரோனா இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கை அவசியம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

மொத்தம் 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை உறுதிப்படுத்தவும்.

முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களைக் கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி, மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்த வேண்டும்.

தேவையான நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல், மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

உருமாறும் ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் நோய்ப் பரவல் குறைந்துள்ள நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அரசின் வழிகாட்டுதலில் உள்ள முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கை கழுவுதல் உள்ளிட்ட பழக்கங்களை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் 93% ஒமிக்ரான் BA2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை" என்று மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தேசத்திற்கு தீங்கு - மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல்

பட மூலாதாரம், Piyush Goyal/Twitter

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுவதை மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ப்யூஷ் கோயல் மறுத்துள்ளார். மாறாக, அது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேசியதாக வெளிவந்துள்ள அந்த செய்தியில், "ஏற்றுமதியை கணிசமாக அதிகரித்து, அந்நிய செலாவணி வரத்தை அதிகரிக்க, முதலீடுகளை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால்தான் ஏற்றுமதி சந்தையில் திறமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், நமது ரூபாய் மதிப்பு விழ்ச்சி, பலவீனமடைந்தால் தேச நலனுக்கு தீங்குதான் ஏற்படும்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியானது ஏற்றுமதி செலவை அதிகரிக்கிறது. நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. வட்டி விகிதத்தை உயர்த்தி, மூலப் பொருள்களுக்கு பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ள இந்திய பொருள்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடும்.

வளமான ஏற்றுமதி, முதலீடு ஆகியன அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க வழிகோலுகின்றன. மதிப்பு மிகுந்த அந்நிய செலாவணியை ஈட்டவும் ரூபாய் மதிப்பை நிலையாக வைத்திருக்கவும் ஏற்றுமதி உதவுகிறது.

ஏப்ரல் 1 - 14ம் தேதி வரை நாட்டின் ஏற்றுமதி 18.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மருந்து பொருள்கள் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன'' என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, இரு குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கைப் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: