அர்ச்சனா ஸ்டாலின்: குடும்ப மருத்துவர் போல, குடும்ப விவசாயி - இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒரு புதிய முயற்சி

அர்ச்சனா ஸ்டாலின்
படக்குறிப்பு, அர்ச்சனா ஸ்டாலின்
    • எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
    • பதவி, பிபிசி தமிழ்

குடும்ப டாக்டர் போல, குடும்ப விவசாயி என்ற ஒரு கருத்தை உருவாக்கி கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி தொழில் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின்.

அது என்ன 'குடும்ப விவசாயி' என்ற கேள்வியை அவரிடம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர், 2015க்கு முன் நானும் என் கணவரும் மாடி தோட்டம் போட்டோம். அதில் இருந்து தொடங்கியது எங்கள் பயணம். பிறகு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனையை வழங்கத் தொடங்கினோம். ஆனால், விவசாயம் தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வியை மீண்டும் எங்கள் முன் வைத்தார்கள் விவசாயிகள்.பிறகு, இரண்டு ஏக்கர் நிலத்தில் தொடங்கியது எங்கள் இயற்கை விவசாயப் பணி. அப்போதுதான் விவசாயம் மற்றும் விவசாயிகளுடைய கஷ்டம் என்ன என்பது தெரிந்தது. குறிப்பாக, விவசாயம் செய்த பிறகு விளைவித்த பொருளை சந்தைப்படுத்துவது மிகவும் கடினம் என்பது புரிந்தது.

அதனால் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதற்கான வேலையை தொடங்கினோம். பிறகு 2018இல் 'மை ஹார்வெஸ்ட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். ஆரம்பத்தில், 18 குடும்பங்களுக்கு நாங்கள் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை விவசாய விளை பொருட்களை நேரடியாக விநியோகித்தோம்.

நாளடைவில், வாடிக்கையாளர்கள், முக்கிய தேவையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான காய்கறிகள் தேவை என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்த இயற்கை விவசாயத்தில் எல்லாவிதமான காய்கறிகளையும் பயிர் செய்வதற்கான சூழல் இல்லை. அதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளை சந்தித்துப் பேசினோம்.

குறிப்பாக, இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் இயற்கை விவசாயம் செய்ய முன் வருபவர்களை சந்தித்துப் பேசினோம். தற்போது 160 விவசாயிகளைக் கொண்டு 200 இயற்கை விவசாய பொருட்களை நேரடியாக சென்னைக்கு கொண்டு வருகிறோம். தற்போது எங்களிடம் 3000 வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றார்.

மேலும், குறிப்பாக இன்று இயற்கை விவசாயத்திற்கென சந்தையில் பல்வேறு பெரிய நிறுவனங்கள் கூட உள்ளன. ஆனால், அவர்களிடம் இருந்து நாங்கள் வேறுபடுவதற்கான மிக முக்கியமான காரணமாக நான் பார்ப்பது நம்பகத்தன்மைதான். நாங்கள் வாடிக்கையாளர்களிடம் முன்பே அவர்களுக்கு என்ன பொருட்கள் தேவைப்படுகிறதோ அதைகேட்டு பட்டியலை தயாரிக்கிறோம்.

விவசாயி

அதன்மூலம் விவசாயிகளிடமிருந்து இயற்கை விவசாய பொருட்கள் பெறப்படும். குறிப்பாக சென்னை அருகே உள்ள திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்து தினம் காலையில் அறுவடை செய்த கீரை வகைகள், அறுவடைக்கு பிறகு நேரடியாக எங்களிடம் வரும். இயற்கை விவசாயம் சம்பந்தமான புரிதலை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம், அதன் பயனும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய விவசாய முறையும் எப்படிப்பட்டது என்று வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்வதற்கு மிக முக்கியமாக மனித உழைப்பு அதிக அளவில் தேவைப்படுகிறது. விளைச்சல் குறைவாக இருந்தாலும் மனித உழைப்பால் உருவாக்கப்படும் இயற்கை விவசாய பொருட்களின் பலன் அதிகம். இதற்கான பலனை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் பெறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சமீபத்தில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரு விவசாயி, இயற்கை விவசாயத்திற்கு போன பிறகு தற்போது தன் கையில் ஏற்படக்கூடிய அரிப்பு குறைந்துள்ளது என்று கூறினார். அதற்கு முன்னதாக அவர் ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருந்தார்.

ரசாயன விவசாயத்தில் பெறப்பட்ட விளைச்சலுடன் ஒப்பிடுகையில், இயற்கை விவசாயத்தில் தற்போது அவர் குறைந்த அளவே விளைச்சல் செய்தாலும், அதனுடைய பயன் என்பதை முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.

அதேபோல, தற்போது நாங்கள் பெறும் விவசாய பொருள்களுக்கான விலை என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. இதன் மூலம் விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான நியாயமான விலையை எப்போதும் பெறுவதற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளோம்.கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையில், எங்களுக்கான வேலை இன்னும் அதிகமானது. ஊரடங்கு உள்ளிட்டவையால் மக்கள் வெளியே வர தயங்கியபோது, பலர் வெளிநாடுகளில் இருந்து தங்கள் குடும்பத்தினருக்கு நேரடியாக பொருட்களை வழங்குவதற்கான அழைப்புகள் வந்தது.

அதேபோல் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்கள் எதுவும் வீணாகாத வகையில் நேரடியாக நாங்களே சென்று அதை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்தோம்.

சமீபத்தில் சென்னையில் 'கடைசி விவசாயி' என்ற படத்தை திரையிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை அழைத்து ஒரு நிகழ்வை நடத்தினோம். நிகழ்வுக்கு விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளர் குடும்பங்களும் வந்திருந்தனர்.

ஒருவருக்கொருவர் தங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி வகைகள் எந்த விவசாயிகளிடம் இருந்து வருகின்றன என்பதை அறிந்து அவர்களோடு நேரடியாக உரையாடினர்.

இயற்கை விவசாயம்:

இந்த நிகழ்வு, விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதான மதிப்பைக் கூட்டும். அதே போல எங்கள் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கக் கூடிய வாடிக்கையாளர்கள், அவர்களால் பயன்படுத்தப்படும் பொருட்கள் எந்த விவசாயியிடம் இருந்து வந்ததோ அவரிடம் நேரடியாக பேசவும் நேரடியாக அந்த விவசாய நிலத்திற்கு செல்வதற்கான தொடர்பையும் ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஏழுமலை என்ற திருவள்ளூர் மாவட்ட விவசாயி ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், "இயற்கை விவசாயம் என்பது எனக்கு ஆரம்பத்தில் புதிதாக இருந்தது . ஆனால் தற்போது என் குடும்பமே இணைந்து இந்த வேலையை செய்து வருகிறோம். மாத வருமானம் என்பது குறைந்தபட்சம் இவ்வளவு என்ற தொகையும் எங்களுக்கு கிடைக்கிறது.

விவசாயம்

அதேபோல நாங்கள் விளைவிக்கக் கூடிய பொருட்களை நேரடியாக எங்களிடம் இருந்து அவர்கள் பெறுவதன் மூலம் சந்தைப்படுத்துவதற்கான வேலை எங்களுக்கு குறைகிறது. தற்போது நாங்கள் செய்து வரக்கூடிய இயற்கை விவசாயத்துக்கு முழுவதுமாக, அதிக அளவில் எங்கள் நேரம் மட்டுமே மூலதனமாக இருக்கிறது. இயற்கையால் அடையக் கூடிய பல்வேறு பொருட்களை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளும் தரமான இயற்கை விவசாய பொருட்களை எங்களால் கொடுக்க முடிகிறது", என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: