நகர்ப்புற உள்ளாட்சி: பா.ஜ.க. முன்னேறியுள்ளதா? அவர்கள் கொண்டாட காரணம் உள்ளதா?

BJP
    • எழுதியவர், ஆ.விஜய் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு முழுவதும் 308 நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. ` தனித்துப் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அடுத்த தேர்தலில் தனியாகப் போட்டியிடும் அளவுக்கான உற்சாகம் கிடைத்துள்ளது' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணி வென்றுள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சியில் பின்னடைவை சந்தித்த அ.தி.மு.க, நகர்ப்புற உள்ளாட்சியிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, அ.தி.மு.கவின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட மேற்கு மண்டலத்தில் கிடைத்த தோல்வி, அ.தி.மு.க நிர்வாகிகளை சோர்வடைய வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மூன்றாவது இடத்தில் பா.ஜ.க.,?

அதேநேரம், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த பா.ஜ.க, மாநகராட்சி வார்டுகள் 22 வார்டுகள் உள்பட நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 308 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் எங்களின் சொந்த சொல்வாக்கை, நிரூபித்துவிட்டோம் என அக்கட்சியினர் பேசி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசும்போது குறிப்பிட்ட, `தமிழ்நாட்டை பா.ஜ.க ஆள முடியாது' என்ற வாசகத்தையே வைத்தே பா.ஜ.க ஐ.டி விங் அணியினர் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு சொந்த செல்வாக்கு உள்ளதாகப் பார்க்கப்படும் நாகர்கோவிலில் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது பாஜக. கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், விருதுநகர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளிலும் பா.ஜ.க கால் பதித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குள் பா.ஜ.க நுழைய இருப்பதாக அக்கட்சியினர் உற்சாகப்படுகின்றனர்.

இதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `உள்ளாட்சித் தேர்தலில் 13 கட்சி கூட்டணியை எதிர்த்து தவறாகப் பயன்படுத்தப்பட்ட அரசு இயந்திரத்தை எதிர்த்து, தமிழக மக்களை மட்டுமே நம்பி போட்டியிட்டு தன்னுடைய தனித்துவத்தை பா.ஜ.க நிரூபித்துவிட்டது. தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்து நபருக்கும் திட்டங்களைக் கொண்டு சேர்த்த பிரதமரின் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த மனப்பூர்வமான அங்கீகாரம் இது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆளும்கட்சியின் அத்துமீறல், பணபலம், படைபலம், கள்ள ஓட்டு என அனைத்து அராஜகங்களையும் தாண்டி பா.ஜ.கவுக்கு கிடைத்த வாக்கு சதவீதமும் தொண்டர்களை நம்பி தனித்துப் போட்டியிடலாம் என பா.ஜ.க தலைவர்கள் எடுத்த முடிவுக்கு மக்கள் அளித்த பரிசு' எனத் தெரிவித்துள்ளார்.

11 மாநகராட்சிகளில் வெற்றிக் கணக்கு

சென்னை, நாகர்கோவில், தஞ்சை, கடலூர், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர், ஒசூர் என 11 மாநகராட்சிகளில் பா.ஜ.க தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கிவிட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிலும், ` ஹாட்பாக்ஸ், கொலுசு கொடுத்தும் இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்தும் வெற்றி பெறுவதுதான் திராவிட மாடலா? இருபது வருடங்கள் கழித்து நான்கு எம்.எல்.ஏக்களை பெற்றோம். நகர்ப்புற உள்ளாட்சியில் கணிசமான வாக்குகளைப் பெற்றோம். நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை எம்.பிக்களை பா.ஜ.க பெறப் போகிறது என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்களோ இல்லையோ தி.மு.க முடிவு செய்யும்' என்றார்.

அதேநேரம், பா.ஜ.க பெரிதும் எதிர்பார்த்த கோவை, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் வார்டுகளில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக கோவை மாநகராட்சி நிலவரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கு வேதனையை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.கவினர் கையாண்ட அணுகுமுறையே அவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

வேட்பாளர் தேர்வில் தனிக்கவனம்

திமுகவுக்கு மாற்று பாஜகவா? - அண்ணாமலை கருத்தால் கொதிக்கும் அதிமுக

பட மூலாதாரம், Tn bjp

ஒவ்வோர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் வார்டுகளிலும் உள்ளூர் செல்வாக்கு, மக்கள் பணி, பணபலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே வேட்பாளர் தேர்வை பா.ஜ.க நடத்தியது. இதற்காக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க ஆர்வம் காட்டத் தொடங்கியது. அதற்கேற்ப மண்டல வாரியாக கூட்டங்களை நடத்தி ஒவ்வோர் வார்டுக்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் ஒருவரை பா.ஜ.க தலைமை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின.

இதுதவிர, மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களில் செல்வாக்கு நிரம்பியவர்களை அப்பகுதிகளில் போட்டியிட வைப்பதும் நடந்துள்ளது. முன்னதாகவே, `அ.தி.மு.க இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் நிலவரம் எப்படி இருக்கும்?' எனவும் அக்கட்சியில் மாவட்ட நிர்வாகிகளிடம் தலைமையில் உள்ளவர்கள் கேட்டுள்ளனர். கூட்டணி முறிவுக்கு முன்னரே அனைத்து வார்டுகளுக்குமான வேட்பாளர்களின் முழு பட்டியலையும் மாநிலத் தலைமை தயாரித்துவிட்டதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த ஃபார்முலா ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்ததாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அங்கு சில வார்டுகளை பா.ஜ.க பெற்றிருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் 30 சதவீத வாக்குகள்

`` நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம். மொத்தமாக 8.5 சதவீதம் பெற்றுள்ளோம். சென்னையில் மட்டும் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். பல மாநகராட்சிகளின் வார்டுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். தனியாக நிற்பது என ஒரேநாளில் முடிவெடுத்துப் போட்டியிட்டோம். அடித்தட்டு வரையிலும் சின்னத்தைக் கொண்டு போய் சேர்த்தோம். பல இடங்களில் அ.தி.மு.க நிர்வாகிகள்கூட விலை போனார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் பலர் விலை பேசப்பட்டார்கள். தி.மு.கவின் பணபலம், அதிகார பலத்தை வைத்து எங்கள் வேட்பாளர்களில் ஒருவரைக்கூட அவர்களால் வாங்க முடியவில்லை. அந்தளவுக்கு இறுதி வரையில் உறுதியாக நின்றனர்'' என்கிறார், தமிழ்நாடு பா.ஜ.கவின் ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் சி.டி.நிர்மல்குமார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` வாக்கு எணணிக்கை முடியும் வரையில் எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் போராடியதை பெரிய விஷயமாக பார்க்கிறோம். இந்தத் தேர்தலில் ஒவ்வோர் சட்டமன்றத் தொகுதிக்கும் 50 கோடி ரூபாய் வரையில் ஆளும்கட்சி செலவிட்டது. குறைந்தபட்சம் வாக்குக்கு 2 ஆயிரம் வரையிலும் அதிகபட்சம் 4 ஆயிரம் வரையிலும் கொடுத்தனர். அதையும் மீறி மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளோம். இது எங்கள் கட்சித் தொண்டர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அடுத்து வரக்கூடிய 2024 தேர்தலுக்கும் 2026 தேர்தலுக்கும் நல்ல அடித்தளத்தைக் கொடுத்துள்ளதாகப் பார்க்கிறோம்'' என்கிறார்.

தனித்து போட்டி தொடருமா?

அடுத்ததாக வேட்பாளர் தேர்வு குறித்துப் பேசிய சி.டி.நிர்மல்குமார், `` வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகுகூட சில மாற்றங்களைச் செய்தோம். ஒவ்வோர் வார்டிலும் வேட்பாளர் தேர்தவில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டோம். அதனால்தான் எங்களை யாராலும் விலைபேச முடியவில்லை. தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் கோவை மற்றும் சென்னையில் இரண்டாவது கட்சியாக உள்ளோம். இந்தத் தேர்தலில் எந்தளவுக்குப் பணம் விளையாடியது என அனைவருக்கும் தெரியும். இதையும் மீறி எங்கள் செல்வாக்கில் எந்த சிக்கலும் வரவில்லை'' என்கிறார்.

நிர்மல்குமார் - பாஜக

பட மூலாதாரம், Nirmalkumar

படக்குறிப்பு, நிர்மல்குமார் - பாஜக

``கோவை மாநகராட்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே?'' என்றபோது, `` அந்த மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பல நூறு கோடிகளோடு தி.மு.க அமைச்சர் ஒருவர் முகாமிட்டிருந்தார். அவர் கடைசி 15 நாளில் மேற்கொண்ட விஷயங்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம், எங்கள் சின்னத்தைக் கொண்டு போய் சேர்ப்பதிலும் சிரமம் வரவில்லை. கோவை மாவட்ட பா.ஜ.க தொண்டர்களும் சோர்வு அடையவில்லை. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். காங்கிரஸ் எவ்வளவு வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க கூட்டணியில் நின்று போட்டியிட்டனர். தனித்துப் போட்டியிட்டு மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளோம்'' என்றோம்.

``தனித்துப் போட்டியிடுவது நீடிக்குமா?'' என்றபோது, `` அது எப்படிப் போகும் எனக் கூற முடியாது. எங்களை நிரூபித்துவிட்டோம். சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சிகள் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளன. சென்னையில் ஒரு லட்சம் வாக்குகள் வரும் என எதிர்பார்த்தோம். அதற்கு மேல் பெற்றுள்ளோம். மாநிலத்தைப் பொறுத்தவரையில் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தைக் காட்டுவதற்கு எந்த தேசியக் கட்சியும் இல்லை என்பதை முறியடித்து தமிழ்நாட்டில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்'' என்றார்.

இதுதான் வெற்றியா?

``மூன்றாவது பெரிய கட்சி என பா.ஜ.க கூறுவது சரியானதா?'' என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, `` 2011 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 4 மாநகராட்சி வார்டுகள், 37 நகராட்சி வார்டுகள், பேரூராட்சிகளில் 181 இடங்கள் என 222 இடங்களில் வென்றனர். இந்தமுறை 308 இடங்களில் வென்றுள்ளனர். இதற்கும் தற்போது பெற்றுள்ள வெற்றிக்கு என்ன வித்தியாசம் உள்ளது?'' எனக் கேள்வியெழுப்பினார்.

`` நகர்ப்புற உள்ளாட்சியில் பிரதமர் மோதி படத்தைப் போட்டுத்தான் பா.ஜ.கவினர் பிரசாரம் செய்தனர். இது மோதிக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்க முடியும். அதிலும், தென்காசி, கன்னியாகுமரி என அவர்களுக்கு செல்வாக்கு உள்ள பேரூராட்சிகளில் வென்றுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு என தேசிய பிரச்னைகளைத்தான் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்கள். எனவே, அதற்கு நகர்ப்புற வாக்காளர்கள் கொடுத்த வெற்றியாகவும் பார்க்கலாம்'' எனக் குறிப்பிடும் ஷ்யாம்,

`` பா.ஜ.கவின் வெற்றி என்பது 222 என்பதிலிருந்து 308 என்பதாகத்தான் பார்க்க முடியும். சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி என அவர்களுக்கு வாக்கு உள்ளதாகச் சொல்லப்படும் இடங்களில் வெல்ல முடியவில்லை. மாம்பலத்தில் வெற்றி பெற்றுள்ளனர். தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் இந்து வாக்குவங்கி உள்ள பகுதிகளில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் வெற்றி என பா.ஜ.க சொல்கிறது என்றால், அவர்களுக்கு வெற்றி என்றால் என்ன எனத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்'' என்கிறார்.

நோட்டா இல்லாததால் துணிச்சல் - தி.மு.க விளக்கம்

சூரிய வெற்றிகொண்டான் - திமுக

பட மூலாதாரம், Surya Vetrikondan

படக்குறிப்பு, சூரிய வெற்றிகொண்டான் - திமுக

தி.மு.க மீது பா.ஜ.க சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பிபிசி தமிழிடம் விளக்கம் கொடுத்த தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்கறிஞருமான சூர்யா வெற்றிகொண்டான், ``இந்தத் தேர்தலில் தனித்து விடப்பட்டதால் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க பணம் கொடுத்து வென்றதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அப்படியானால் பா.ஜ.கவினரும் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார்களா என்ற வாதத்துக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. இந்தத் தேர்தலில் நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என நம்பித்தான் நின்றோம். வாக்குப் பதிவு என்பது 60 சதவீதம்தான். இதில் பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` அ.தி.மு.கவை பிடிக்காததால் அக்கட்சியினர் வாக்களிக்க வரவில்லை. தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்களில் பலர், பா.ஜ.க சார்பாக நின்றனர். அ.தி.மு.கவில் இருந்தவர்களும் பா.ஜ.கவில் சீட் கேட்டு நின்றனர். பா.ஜ.க சார்பாக வெற்றி பெற்ற நபர்களில் எத்தனை பேர் அந்தக் கட்சியில் நீண்டகாலமாக உழைத்தவர்கள் என்ற பட்டியலை எடுத்துப் பார்த்தால் அது உண்மையிலேயே அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றியா? என்பதை உறுதிப்படுத்த முடியும். பல கட்சிகளில் இருந்து வந்தவர்களை வேட்பாளராக்கி, தங்களது சொந்த சாதனையாக பேசி வருகின்றனர். இந்தத் தேர்தலில் நோட்டா இல்லாததால் இவர்களுக்கு துணிச்சல் வந்துவிட்டதாகத்தான் பார்க்கிறேன்'' என்கிறார்.

மேலும், `` ஒரு கட்சியில் நீண்டகாலம் உழைத்தவர்களுக்கு சீட் கொடுத்தனர். பா.ஜ.கவில் மட்டும்தான் கட்சி மாறியவர்களுக்கு சீட் கொடுத்தனர். இது சட்டமன்றத் தேர்தலிலேயே நடந்தது. இது பா.ஜ.கவுக்கு கிடைத்த வரவேற்பு அல்ல'' என்றார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: