நரேந்திர மோதிக்கு ஆப்கானிஸ்தான் இந்து, சீக்கிய மதத்தினர் நன்றி

narendra modi

பட மூலாதாரம், @narendramodi twitter

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்து வசிக்கும் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் ஒரு குழுவினர் சனிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

தாலிபன்கள் சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய போது அங்கு வசித்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பலரை இந்தியா அந்நாட்டில் இருந்து வெளியேற்றியது.

ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக தாலிபன்களால் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு, உதவுவது குறித்து நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு பலமுறை உறுதியளித்துள்ளது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையினர்களான இந்துக்களும், சீக்கியர்களும் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்தனர் என்று இந்தச் சந்திப்பு பற்றி தினமணி நாளிதழின் செய்தி கூறுகிறது.

வாக்காளர்களை மிரட்டியதாக பாஜக தலைவருக்கு தடை

Raja Singh

பட மூலாதாரம், @TigerRajaSingh twitter

உத்தர பிரதேச வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக தெலங்கானா பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங் 72 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தடைக்காலம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

''வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் பயன்படுத்தப்படும்; யோகி ஆதித்யநாத்தை ஆதரிக்காதவர்கள் உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும்,'' என்று ராஜா சிங் கூறியிருந்தார்.

கர்நாடக ஹிஜாப் விவகாரம் - 'குங்குமம் வைக்கத் தடையில்லை'

Basavaraj S Bommai

பட மூலாதாரம், @BSBOMMAI twitter

படக்குறிப்பு, பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து பேசினாலே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஆனால் ஹிஜாப் விவகாரம் வெளியே இருந்து வந்தவர்களால் கர்நாடகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

குங்குமம் வைத்து கொண்டு வந்த மாணவ-மாணவிகளை தடுத்து நிறுத்தியது பற்றி எனது கவனத்திற்கும் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை உரிய முடிவு எடுக்கும். குங்குமம் வைத்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு அரசோ, கல்வி நிறுவனங்களே எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என்று பசவராஜ் பொம்மை தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: