'வலிமை' கார்த்திகேயா: "அஜித், என் நடிப்பு குறித்து எதுவும் சொல்லவில்லை"

கார்த்திகேயா

பட மூலாதாரம், Twitter @ActorKartikeya

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் 'வலிமை' திரைப்படம் இந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா அறிமுகமாக இருக்கிறார்.

மிரட்டல் வில்லனாக, படத்தின் முன்னோட்ட காட்சிகளில் இவர் பேசிய வசனங்கள் எல்லாம் ரசிகர்களிடையே கவனம் குவிக்க, பிபிசி தமிழுக்காக அவருடன் பேசினோம்.

அவரின் நேர்காணலில் இருந்து,

கே: கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு 'வலிமை' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியோடு வெளியாக இருக்கிறது. உங்கள் மனநிலை என்ன?

"'வலிமை' படம் வெளியாகிறது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ரசிகர்களும் 'வலிமை' அப்டேட் கேட்டு படம் குறித்தான ஆர்வத்தை தக்க வைத்து கொண்டிருந்தனர். அதனால் படம் வெளியாகிற அந்த மகிழ்ச்சியான நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்".

கே: தெலுங்கில் நீங்கள் கதாநாயகனாக நடித்த 'ஆர்.எக்ஸ். 100' படம் பார்த்துதான் 'வலிமை' படத்தில் வில்லனாக நடிக்க தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் வினோத் தன் பேட்டிகளில் சொல்லி இருந்தார். தெலுங்கில் நீங்கள் கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் அஜீத்துக்கு வில்லன் என்றதும் ஒப்பு கொண்டீர்களாமா? ஏன் அஜித் படம் உங்களுக்கு ஸ்பெஷல்?

"அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதுவும் படமும் வேறு வேறு. நடிகர் அஜித்துடைய படம் என்பதையும் தாண்டி, நான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாவேன் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.

கார்த்திகேயா

பட மூலாதாரம், Twitter @ActorKartikeya

தெலுங்கில் நான் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா களமும் அதன் ரசிகர்களும் எனக்கு புதிது. அந்த களத்துக்கு 'வலிமை' நிச்சயம் எனக்கு பெரிய அறிமுகம்தான்.

மற்றபடி என்னுடைய கதாப்பாத்திரம் கதாநாயகனுக்கு இணையான எதிர் கதாப்பாத்திரம்தான்".

கே: இயக்குநர் வினோத் முன்பு பிபிசி உடனான பேட்டியில் உங்கள் நடிப்பில் போக போக அவர் எதிர்ப்பார்த்த அந்த எதிர்மறை தன்மை கிடைத்ததாக சொன்னார். எப்படி தயாரானீர்கள்?

"தனிப்பட்ட பயிற்சி என எதுவும் எடுக்கவில்லை. ஆனால், இயக்குநர் வினோத்திடம் தான் இந்த கதாப்பாத்திரம் குறித்தான தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டே இருந்தேன். இந்த கதாப்பாத்திரம் இந்த சூழ்நிலையில் எப்படி இருக்கும், எது போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் என்பதை எல்லாம் கேட்பேன். ஏனென்றால் ஒரு காட்சியில் குறைவாகவும் இன்னொரு காட்சியில் அதிகமாகவும் நடிக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

மேலும் இந்த கதாப்பாத்திரத்திற்காக உடலை மாற்றி அமைத்து, லென்ஸ், உடல் முழுக்க டாட்டூ என தோற்றத்தையும் மாற்றினேன்".

கே: நடிகர் அஜித்தின் வில்லத்தனமா நடிப்புக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. அவர் உங்களுடைய வில்லன் கதாப்பாத்திரத்துக்கு என்ன மாதிரியான டிப்ஸ் கொடுத்தார்?

"நடிப்புக்கு என்று தனியாக அவர் எந்த ஒரு டிப்ஸ்ஸூம் கொடுக்கவில்லை. ஆனால், 'நீ நன்றாக நடித்து கொண்டிருக்கிறாய், இதே போல தொடர்ந்து நடி!' என ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தார். மிகப்பெரிய நட்சத்திரம் என்ற எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் என்னை இயல்பாகவே நடத்தினார்.

அவர் என் மீது வைத்துள்ள அந்த நம்பிக்கையே எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது".

கே: இயக்குநர் வினோத்துடைய வொர்க்கிங் ஸ்டைல் பற்றி சொல்லுங்கள்?

"இயக்குநர் வினோத்துடன் வேலை பார்க்க மிகவும் ஆர்வமாக வந்தேன். ஏனெனில், தெலுங்கில் வெளியான 'தீரம் அதிகாரம் ஒன்று' படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதனால் வினோத் எனக்கு இன்னும் நன்றாக நடிப்பு சொல்லி தருவார் நாமும் கற்று கொள்ளலாம் என்ற திட்டத்துடன் வந்தேன்.

ஆரம்ப நாட்களில் அவர் என்னுடைய நடிப்பு குறித்து பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

பிறகு கொஞ்ச நாட்கள் போன பிறகு, அவரிடமும் அஜித்திடமும் 'சார், நீங்கள் எனக்கு நடிப்பில் நிறைய சொல்லி தருவீர்கள் என்று நினைத்து வந்தேன். ஆனால், நீங்கள் பெரிதாக எதுவும் சொல்லவில்லையே! என் நடிப்பு பரவாயில்லையா? சரியாகதான் போய் கொண்டிருக்கிறேனா?' என்று கேட்டேன்.

கார்த்திகேயா

பட மூலாதாரம், Twitter @ActorKartikeya

அதற்கு இயக்குநர் வினோத் என்னிடம், 'எனக்கு பெரிதாக நடிக்க வராது. அதனால் தான் உங்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நான் ஒரு மீட்டர் வைத்து கொண்டு மானிட்டரில் உங்கள் நடிப்பை பார்ப்பேன். அதற்குள் உங்கள் நடிப்பு இருந்தால் எனக்கு போதும். மற்றபடி பெரிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொள்ள கூடிய நபர் நான் இல்லை' என்றார்".

கே:படத்தில் பைக் ரேசிங் தொடர்பான காட்சிகள் தான் முக்கிய கரு எனும் போது அதில் உங்களுக்கு என்ன சவால் இருந்தது? அஜித் தொழில் முறையிலான பைக் ரேசர் எனும் போது உங்களுடன் அவர் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

"உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அஜித் அவரின் பைக் வேகத்தை என்னால் குறைக்க வேண்டி இருந்தது. அவர் வழக்கமாக 200-க்கு மேல்தான் போவார். நான் 150 வரை தாக்கு பிடித்து ஓட்டினேன். அஜித் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். தான் ஒரு தொழில் முறையிலான பைக் ஓட்டுபவர் என்பதை அவர் படத்தில் காட்டியே ஆக வேண்டும் என்றெல்லாம் இருக்காமல் உடன் நடிப்பவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார்.

நானும் பாதுகாப்பாக இருக்கிறேனா, ரிஸ்க்கான காட்சிகள் இருந்தால் என்னை செய்ய விடாமல் இருப்பது என நன்றாக பார்த்து கொண்டார். அதனால், பைக் காட்சிகள் எல்லாமே அஜித் என்ன சொல்கிறாரோ அதைதான் பின்பற்றினேன்".

கே: தனிப்பட்ட முறையில உங்களுக்கு சவாலான காட்சி எது?

"ரஷ்யாவில் ஒரு பைக் காட்சி இருந்தது. அது வழக்கமான பைக் போல இல்லை என்பதால் அதை ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டி இருந்தது. அந்த பைக்கை ஸ்டார்ட் செய்யும் போதே வேகம் சட்டென அதிகரிக்கும்.

அந்த பைக்கில் ஒரு மலையில் ஓட்டுவது போன்ற காட்சியில் தடுமாறி விட்டேன். இதுதான். மற்றபடி எனக்கு அதிக ரிஸ்க்கான காட்சிகள் எதுவும் இல்லை".

கே: படத்தின் முன்னோட்ட காணொளியில் நிறைய வசனங்கள் பேசி இருந்தீர்கள். இது போல உங்களுக்கு படத்தில் பிடித்த வசனம் அல்லது காட்சி எது?

"அஜித்துடன் தொலைபேசியில் நானும் அவரும் மட்டுமே பேசும்படியான ஒரு காட்சி இருக்கும். நான் ஒரு வசனம், அவர் ஒரு வசனம் பேசுவார். அந்த காட்சி எனக்கு பிடிக்கும்.

அதுபோல, 'வலிமை இருப்பவன் தனக்கு வேண்டியதை எடுத்து கொள்வான்' என்ற வசனம் நான் விரும்பி பேசினேன். மேலும் 'வலிமை' படத்தில் வந்துதான் தமிழ் கற்று கொண்டேன். ஏனெனில் மொழி தெரியாமல் நடிப்பது எனக்கு முழு திருப்தி தராது. அதனால் படங்கள், நண்பர்கள் எல்லாரிடமும் பேசி தமிழ் இந்த அளவு கற்று கொண்டேன்".

கே: 'வலிமை' அப்டேட் வேண்டும் என கேட்டு ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்த போது உங்கள் மனநிலை என்ன?

"உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரசிகர்கள் அப்படி 'வலிமை' அப்டேட் கேட்டு உலக அளவில் ட்ரெண்ட் செய்தது படத்தை இன்னும் பலரது கவனத்திற்கு கொண்டு சேர்க்க உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், தமிழ் சினிமாவில் முதல் படம் எனும் போது அதுவே கொரோனா காலத்தில் முடங்கி இருக்கிறது. அடுத்தடுத்த வாய்ப்புகள் என்ன ஆகும் என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது. அதுபோன்ற ஒரு சமயத்தில்தான் எங்கு பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் வேண்டும் என கேட்டு கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் நம் வேலையையும் பார்க்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

மேலும் அந்த படத்திற்கான உடலமைப்பையும் மூன்று வருடங்களாக நான் பராமரிக்க வேண்டி இருந்தது".

கே: தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த வில்லன் யார்?

"அஜித் தான். படங்களில் அஜித் அவருடைய வில்லத்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும். 'மங்காத்தா', 'வரலாறு', 'வாலி' போன்ற படங்களை தெலுங்கில் பார்த்துள்ளேன். அது எல்லாம் மிகவும் பிடிக்கும்.

'வலிமை' படம் வெளியான பிறகு இங்கு மக்கள் என்னை எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அடுத்தடுத்த படங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தால் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்".

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: