பேபி ராணி: மாயாவதியுடன் ஒப்பிடப்படும் இந்த தலித் தலைவர் யார்?

- எழுதியவர், வாத்சல்ய ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர், ஆக்ரா
பகுஜன் சமாஜ் கட்சி தலைவrரும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான பேபி ராணி மெளரியா. யார் இவர்? ஏன் இப்படி ஒப்பிடப்படுகிறார்?
தானும் மாயாவதியும் ஒரே சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்றாலும், தான் அவரைப் பின்பற்ற விரும்பவில்லை என்று பேபி ராணி மெளரியா கூறுகிறார்.
குறிப்பாக, "மாயாவதியை எனது போட்டியாளராக நான் கருதவில்லை. அவரது கட்சியின் முகமாகவும் நான் இருக்க விரும்பவில்லை. நான் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர். நான் பேபி ராணி மெளரியா. பேபி ராணி மெளரியாவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்," என்று அவர் பிபிசி உடனான சிறப்பு உரையாடலில் தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ள பேபி ராணி மெளரியா, உத்தராகண்ட் ஆளுநராக இருந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 1990களில் ஆக்ராவின் மேயராகவும் இவர் இருந்துள்ளார்.
'தலித்துகளின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஆக்ரா மாவட்டத்தின் கிராமப்புற (ஒதுக்கீட்டு) தொகுதியில் இருந்து பாஜக அவரை சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
தேர்தலில் பேபி ராணி மெளரியா வெற்றி பெற்று, மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால், அவருக்கு 'பெரிய பொறுப்பு' வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற கட்சியின் பெரிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக இந்தத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் வலுவான வாக்கு வங்கியாகக் கருதப்படும் தலித் சமூகத்தினர் மத்தியில், மாயாவதிக்கு மாற்றாக பேபி ராணியை முன்னிறுத்த பாஜக முயற்சிப்பதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நான்கு முறை முதல்வராக இருந்த மாயாவதி உத்தர பிரதேசத்தில் தலித்துகளின் மிகப்பெரிய தலைவராக கருதப்படுகிறார்.
2014ஆம் ஆண்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்திறன் கணிசமாகக் குறைந்துள்ளது, ஆனால் இன்றும்கூட அக்கட்சியின் வாக்குகள் 20 சதவிகிதத்திற்கு அருகில் உள்ளது.
பேபி ராணி மெளரியாவை முன்னிறுத்தி மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியை உடைக்க பாஜக முயற்சிப்பதாக உத்தர பிரதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்னும் பல கட்சிகளும், தலைவர்களும் கூட இதே முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

'ஜாதவ்களும் இணைகிறார்கள்'
எனினும், மாயாவதியுடன் எந்த வகையிலும் போட்டியிட தான் முயற்சிக்கவில்லை என பேபி ராணி மெளரியா தெரிவித்துள்ளார். மாயாவதியைப் போலவே தானும் 'ஜாதவ்' சமூகத்தில் இருந்து வந்தவர் என்றும், அந்த சமூக மக்களுடன் எப்போதும் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
"மாயாவதி பற்றி நீங்கள் கேட்டீர்கள். நானும் அவரது சமுதாயத்தில் இருந்து வந்தவள்தான். ஆக்ராவில் மேயராக இருந்தபோது நான் அந்த சமூக மக்களுக்காக நிறைய பணிகளை செய்துள்ளேன். ஆளுநராக இருந்தபோதும் நிறைய வேலை செய்துள்ளேன். ஆகவே இந்த சமூகத்தினருக்கு என்னுடன் அல்லது பாஜகவுடன் இணைவதில் எந்தப்பிரச்னையும் இருப்பதுபோலத் தெரியவில்லை,"
மேலும், "எனது சமுதாய மக்களின் ஆதரவு எனக்கு நிறையவே உள்ளது. ஜாதவ் சமூகம் பேபி ராணியுடன் இணைந்திருப்பதை இந்தத் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் பார்க்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

அது மட்டும்தான் காரணமா?
மாயாவதிக்கு மாற்றாக பேபி ராணி மெளரியா உருவாக முயற்சிப்பதாக கூறப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.
சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பெயருடன் 'ஜாதவ்' என்று சேர்த்து அவரது சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்த பாஜக முயன்றது.
இது குறித்தும் பேபி ராணி மெளரியாவிடம் கேட்டோம்.
"இது திடீர் மாற்றம் அல்ல. நாங்கள் வாழும் இந்தப்பகுதியில் ஜாதவ் மக்கள், மௌரியா என்று எழுதுகிறார்கள். பூர்வாஞ்சலில், மௌரியா என்று BC வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) எழுதுகிறார்கள். அதனால் நான் ஜாதவ் சமூகத்தை சேர்ந்தவளா அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவளா என்று ஒரு குழப்பம் இருந்தது. என் சமூகத்துடன் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்த நான் விரும்பினேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
"நான் ஒரு ஜாதவ், BC அல்ல, என்று தெளிவுபடுத்தவே ஜாதவ் என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது."என்கிறார் பேபி ராணி.
பேபி ராணியின் 'அக்னிபரீட்சை'
ஆக்ராவில் பேபி ராணி மெளரியாவை பாஜக நிறுத்தியுள்ள தொகுதியில் 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் ஹேமலதா திவாகர் வெற்றி பெற்றிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவரை கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தவில்லை. இதற்கு உள்ளூர் மக்களின் அதிருப்தியே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், நீண்ட காலமாக தனது தொகுதியில் இருந்து ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் அவரை 'காணவில்லை' என சுவரொட்டிகளையும் மக்கள் ஒட்டியுள்ளனர்.
இதை எதிர்கட்சிகள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகின்றன.
இம்முறை ஆக்ரா தொகுதியின் வாக்காளர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக,மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி துறைப் பொறுப்பாளர் கோரேலால் கூறுகிறார்.
மாயவதியுடன் ஒப்பிடுவதா?
"ஒரு பெரிய கட்சியின் ஆளுநர் வந்திருப்பதால் அவர் வெற்றிபெறுவார் என்று கூறுவது தவறு. எல்லா விஷயங்களும் பொதுமக்களின் கையில் உள்ளது. மக்கள் பிஎஸ்பிக்கு ஆதரவாக உள்ளனர்," என்று பகுஜன் சமாஜ் கட்சி துறைப் பொறுப்பாளர் கோரேலால் கூறுகிறார்.
இந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் தனது வேட்பாளராக கிரண் பிரபா கேசரியை நிறுத்தியுள்ளது.
பேபி ராணி மெளரியாவை மாயாவதியுடன் ஒப்பிடுகிறார்கள் என்ற விஷயம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுக்கும் தெரியும்.
ஆனால், அந்த ஒப்பீட்டை நிராகரித்த கோரேலால், "அப்படி எதுவும் இல்லை. பேபி ராணி ஒருமுறை மேயர் ஆனார். பின்னர் ஆளுநர் ஆனார். ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்படுபவர். மக்கள் அவரை தேர்தெடுப்பதில்லை," என்று கூறினார்.
"இப்போது அவர் பொதுமக்களை எதிர்கொள்ள வேண்டும். தன்னுடைய நிலை என்ன என்பதை பேபி ராணி தானே சொல்வார். பேபி ராணி மெளரியாவுக்கு யார் வாக்களிப்பார்கள் என்பதை முதலில் சொல்லட்டும். பேபி ராணி முதலில் வெற்றி பெறட்டும். பிறகு பார்க்கலாம்," என்றார் அவர்.
மறுபுறம் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி வேட்பாளர் மகேஷ் ஜாதவும், பேபி ராணி மெளரியாவின் சவாலை நிராகரித்துள்ளார்.
"எனது கூட்டணி மிகவும் வலுவானது. மக்களுக்கு பொய்யான நம்பிக்கை வழங்கப்பட்டது. பிரதமர் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. பேபி ராணியும் பாஜகவின் தயவில் ஆளுநர் ஆனார். அடிமட்ட நிலையில் இதனால் எந்த தாக்கமும் இல்லை," என்று அவர் கூறினார்.
உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஆக்ரா தொகுதி பாஜகவுக்கு கடினமாக இருக்கும் கூறுகிறார்கள். ஆனால் ஆக்ராவில் உள்ள ஒன்பது இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று பேபி ராணி கூறுகிறார். 2017ஆம் ஆண்டிலும் பாஜக ஒன்பது இடங்களிலும் வெற்றி பெற்றது.
"எனக்கு இது மிகவும் கடினமான சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் கவலை ஏதும் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுகிறேன். பாரதிய ஜனதா கட்சி இந்த தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறும்," என்று பேபி ராணி தெரிவித்தார்.
"எனக்கு கடினமான சோதனை எதுவும் இல்லை. நான் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தொண்டர். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அதை நான் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றினேன். இதையும் அப்படியே செய்வேன்.
இங்கு நீங்களே பார்க்கிறீர்கள், என் சகோதரிகள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள், சகோதரர்கள் எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள், இளம் நண்பர்கள் நிற்கிறார்கள். அனைவருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க அளவற்ற ஆர்வமும் உற்சாகமும் உள்ளது.
தனிப்பட்ட ஒருவர் மீது மக்களுக்கு கோபம் இருக்கலாம், கட்சி மீது கோபம் இல்லை. இன்றும் அவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பார்கள்," என்கிறார் அவர்.
வெற்றிக்கு பிறகு பெரிய பதவி கிடைக்கக்கூடும் என்று கூறுப்படுவது பற்றி பதிலளித்த அவர், "அது கட்சியின் முடிவாக இருக்கும். அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் சரி . தற்போது நான் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே போட்டியிடுகிறேன்" என்றார்.
கட்சி வேட்பாளர்கள் மீதான மக்களின் கோபம் குறித்த கேள்விக்கு பதில் சொன்ன அவர், '' நமது எம்.எல்.ஏ., கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு செயல்படாமல் இருந்திருக்கலாம். அப்போது அவர் மீது கொஞ்சம் கோபமாக இருக்கக்கூடும்.ஆனால் மக்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

முன்னுரிமைகள் என்ன?
ஆக்ராவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த சட்டப்பேரவைத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. பேபி ராணி மெளரியாவை பிபிசி குழுவினர் சந்தித்த 'குன்வர்கர்' என்ற கிராமத்தில் உள்ள பல பெண்கள் தங்களுக்கு கழிப்பறை கூட இல்லை என்று புகார் தெரிவித்தனர்.
பேபி ராணி மெளரியாவிடம் பெண்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
அந்தப் பகுதிக்கு என்ன முன்னுரிமைகளை அவர் முடிவு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த பேபி ராணி,"நடைபாதைகள் இல்லை, வடிகால்கள் இல்லை. அவற்றை சரிசெய்ய வேண்டும். இங்கே ஒரு பாலம் பாதி முடிந்த நிலையில் உள்ளது. அதை முடிக்க வேண்டும்" என்று கூறுகிறார்.
"இரண்டாவதாக, இங்கு இருக்கும் பெண்கள் மீது கவனம் செலுத்துவேன். பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்ட முயற்சி செய்வேன். அவர்களிடமுள்ள திறமைகளை, கலைகளை வளர்க்க வேண்டும். இங்குள்ள குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்லவேண்டும்.
இளைஞர்களும் ஏதாவது வியாபாரம் செய்ய வேண்டும்.இது விவசாயம் ஆதிக்கம் செலுத்தும் பகுதி என்பதை நீங்கள் காண்கிறீர்கள். எனவே நாங்கள் அதை மேலும் மேம்படுத்துவோம். யாருக்கு வேலை கிடைக்கவில்லையோ அவர்கள் தங்கள் தொழிலை சிறப்பாக செய்யலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இந்த முன்னுரிமைகளை செயல்படுத்துவதற்கு முன் பேபி ராணி மெளரியா போட்டியாளர்களின் சவாலை முறியடிக்க வேண்டும்.

பிற செய்திகள்:
- நரேந்திர மோதியின் தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா? - கள நிலவரம்
- கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா
- மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா?
- குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள்
- பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம்; இந்தியாவில் 2 நாள் தேசிய துக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













