உத்தர பிரதேச தேர்தல் 2022: 2017-க்குப் பிறகு வன்முறை ஏதும் நடக்கவில்லை என்ற முதல்வர் யோகியின் கூற்று உண்மையா?

யோகி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷ்ருதி மேனன்
    • பதவி, பிபிசி உண்மை பரிசோதனை குழு

கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அவரது கூற்று உண்மையா?

தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான அவரது கூற்றுகளின் உண்மைத் தன்மையை நாங்கள் ஆராய்ந்தோம்.

கூற்று: கடந்த 5 ஆண்டுகளில் கலவரம் இல்லை

உண்மை: இது தவறான கருத்து.

சமீபத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத், செய்தியாளர்கள் சந்திப்பில், அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட போது இதைக் குறிப்பிட்டிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்கள் கடந்த காலங்களில் இதே போன்ற கூற்றுக்களைக் கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திலிருந்து (NCRB) பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தரவு மொத்த கலவரங்களுடன் வகுப்புவாதக் கலவரங்களின் விவரங்களையும் தருகிறது.

இந்தப் புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் 2018 முதல் வகுப்புவாத வன்முறை எதுவும் நடக்கவில்லை, ஆனால் 2017 ஆம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 195 வகுப்புவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புள்ளிவிவரம் வேறாகவுள்ளது

ஆனால் உத்தரபிரதேசத்தில் நடந்த மொத்த கலவரங்களின் புள்ளிவிவரங்கள் வேறாக உள்ளன.

ஒட்டுமொத்தமாக, 2017 முதல் கலவர வழக்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது ஆனால் 2019-20 க்கு இடையில் 7.2% அதிகரித்துள்ளது.

உ.பி., மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கலவரங்கள் அதிகம் நடந்த ஐந்து மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளன.

மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டில், மாநிலத்தில் 8,016 கலவரங்கள் பதிவாகியுள்ளன.

அதன்பின்னர் 2017ல் இந்த எண்ணிக்கை 8,900 ஆகவும் 2018 ஆம் ஆண்டில் 8,908 ஆகவும், 2019ஆம் ஆண்டில் 5,714ஆகவும் 2020 ஆம் ஆண்டில் 6,126 ஆகவும் இருந்தது.

கூற்று: யோகி அரசின் ஆட்சிக் காலத்தில் குற்ற விகிதம் சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது.

உண்மை: இது தவறானது. [குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மை தான். ஆனால் கூறப்பட்டிருக்கும் அளவுக்குக் குறையவில்லை. இதைப் பாதி உண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.]

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு உ.பி-யின் சஹாரன்பூரில் ஆற்றிய உரை ஒன்றில் இதனை தெரிவித்தார்.

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

என்சிஆர்பி அறிக்கையின்படி, குற்றங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)-ன் கீழ் வரும். மற்றொன்று, சிறப்புச் சட்டம் அல்லது உள்ளூர்ச் சட்டத்தின் (எஸ்எல்எல்) கீழ் வரும்.

போதைப்பொருள் போன்ற குறிப்பிட்ட குற்றங்களுக்கான சிறப்பு சட்டங்கள் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் உள்ளூர்ச் சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்காக உருவாக்கப்படுகின்றன.

என்சிஆர்பி அறிக்கையின்படி, உ.பியில் 2017க்குப் பிறகு ஐபிசியின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

துல்லியமான ஒப்பீட்டிற்காக 2013 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட தரவுகளைப் பார்த்தோம். அவை, அகிலேஷ் யாதவ் அரசின் கடைசி நான்கு ஆண்டுகள் மற்றும் தற்போதைய யோகி அரசின் முதல் நான்கு ஆண்டுகள்.

2013 மற்றும் 2016 க்கு இடையில் ஐபிசி-யின் கீழ் மொத்தம் 9 லட்சத்து 91 ஆயிரத்து 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்த வகை குற்றங்களின் எண்ணிக்கை 13,60,680 ஆக அதிகரித்து, 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

குற்றங்களின் எண்ணிக்கை, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் 35,14,373 ஆகவும், பாஜக ஆட்சியில் 22,71,742 ஆகவும் குறைந்துள்ளது. அதாவது, பாஜக ஆட்சியில் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இது நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும் அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. 2020 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் உபி மூன்றாவது இடத்தில் உள்ளது.

கூற்று: நான் யோகி மற்றும் அகிலேஷின் ஐந்தாண்டு ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தேன். கொள்ளை70% குறைந்துள்ளது... கொலைகள் 30%, வரதட்சணை காரணமாக நடக்கும் கொலைகள் 22.5% குறைந்துள்ளது.

உண்மை: ஓரளவு சரி

இதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒரு பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் கொள்ளை வழக்குகள் குறைந்துள்ளன என்பது உண்மைதான் ஆனால் என்சிஆர்பியின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி 70% இல்லை 61% குறைந்துள்ளது.

2012-16 சமாஜ்வாதி கட்சியின் முழு ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜகவின் நான்கு ஆண்டுகளில் (2017-20) இந்த எண்ணிக்கை 57 சதவீதம் குறைந்துள்ளது.

கொலை வழக்குகளும் அந்தக் காலக்கட்டத்தில் குறைந்துள்ளன. 2013-16 ஆம் ஆண்டை விட 2017-2020 இல் கொலைகள் 20% குறைந்துள்ளன.

ஆனால் வரதட்சணை மரணங்கள் குறைவதற்குப் பதிலாக, சுமார் 0.4% அதிகரித்துள்ளது.

கூற்று: ஒரு காலத்தில் கலவரம் மட்டுமல்லாமல், இங்கு பாதுகாப்பு இல்லாததால், எங்கள் பெண்குழந்தைகளைப் படிக்க வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று மேற்கு உத்தரபிரதேசத்தின் எந்தப் பெண்ணும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் படிக்க வெளியே செல்ல வேண்டியதில்லை. இன்று யாரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளத் துணிய மாட்டார்கள்.

உண்மை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தெரிவித்தார்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்சிஆர்பி அறிக்கையில் பல்வேறு பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன. இதில் வரதட்சணை மரணம், பாலியல் வல்லுறவுக்கு பின் கொலை, கணவனால் கொடுமை, கடத்தல், தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றங்கள் அடங்கும்.

2013 மற்றும் 2016 க்கு இடையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 1,56,634 ஆக இருந்தது.

ஆனால் 2017 - 2020 காலத்தில் அது 2, 24,694ஆக அதிகரித்துள்ளது. யோகி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 43 சதவித அளவில் அதிகரித்துள்ளது.

2019 மற்றும் 2020 க்கு இடையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17% குறைந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கையில் இந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்குப் பிறகு மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களின் எண்ணிக்கை வருகிறது.

2021 ஆம் ஆண்டில் மொத்தம் 31,000 புகார்களைப் பெற்றுள்ளதாக சமீபத்திய தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உ.பி.யில் பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: