நடிகர் விஜய், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு ஏன்? - தமிழ் சினிமா, தமிழ்நாடு அரசியல்

சில இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
நடிகர் விஜயை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று திடீரென சந்தித்தார் என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.
சென்னை, பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தமிழ் ஊடகங்களிலும் இந்தச் செய்தி இடம்பிடித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.
தேர்தலின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார் என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் நடக்கவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தமிழ் ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தாலும் விஜய் அல்லது ரங்கசாமி தரப்பில் இதுவரை அத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை.
குடியரசு தின ஊர்தி - உத்தர பிரதேசம் முதலிடம்

பட மூலாதாரம், Pib india
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்திகளில் உத்தர பிரதேச மாநில ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தி காசி விஸ்வநாதர் கோயில் மாதிரியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சென்ற ஆண்டும் உத்தர பிரதேச மாநிலத்தின் குடியரசு தின அலங்கார ஊர்திதான் முதல் பரிசு வென்றது. அதற்கு முந்தைய ஆண்டு இரண்டாம் பரிசு வென்றது.
2022 குடியரசு அணிவகுப்பில் மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. அவற்றில் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த 13 அலங்கார ஊர்திகளும், 12 மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன.
கர்நாடக மாநிலத்தின் ஊர்தி இரண்டாவது இடத்தையும், மேகாலயா மாநிலத்தின் ஊர்தி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மாகாராஷ்டிராவின் ஊர்தி 'மக்களுக்கு பிடித்த ஊர்தி' என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தங்க நகைக்கடன் தள்ளுபடி - இறுதிப் பட்டியல் தயார் செய்யக் குழு

பட மூலாதாரம், Getty Images
நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதி பட்டியலை தயார் செய்ய குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
ஒரு குடும்பத்திற்கு ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன், சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தகுதி பெற்றவர்களின் விவரங்களில் சந்தேகம் எழுந்தால் அவர்களை தகுதியற்றவர்களின் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும். தகுதி பெற்றோர் மற்றும் தகுதி பெறாதோரின் பட்டியலை அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












