நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வியூகம் வகுப்பதிலேயே மோதலா? அதிமுக கூட்டத்தில் என்ன நடந்தது?

அதிமுக

பட மூலாதாரம், AIADMK FB

    • எழுதியவர், ஆ.விஜய்ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ` தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முயற்சியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. `தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்' என்பதால் அரசியல் கட்சிகளும் விருப்பமனுக்களை வாங்கும் பணியில் இறங்கியுள்ளன. மேலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க அணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கான இடங்களைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்பட முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கூட்டம் கூடினாலும், ` கட்சியின் வழிகாட்டும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 என இருப்பதை 18 ஆக உயர்த்த வேண்டும், கட்சியை வழிநடத்துவதற்கான அதிகாரத்தை மூத்த நிர்வாகி ஒருவரிடம் கொடுக்க வேண்டும்' என்றெல்லாம் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றிருந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், பா.ஜ.கவில் இணைந்தது தொடர்பாக குறிப்பிட்டு, `இப்படிப்பட்ட நபர்கள் எல்லாம் குழுவில் இருக்கலாமா?' எனவும் சிலர் பேசியதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

முதியோரையும் ஈர்த்த இரட்டை இலை சின்னம்

பட மூலாதாரம், BHASKER SOLANKI

படக்குறிப்பு, முதியோரையும் ஈர்த்த இரட்டை இலை

`வழிகாட்டும் குழுவை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை' எனக் கூறிய முன்னணி நிர்வாகிகள் சிலர், `நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இப்போதே தயாராகுங்கள். உங்கள் மாவட்டத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த பட்டியலைக் கொடுங்கள்' எனக் கூறிவிட்டு தி.மு.கவை எந்தவகையில் எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு சில ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளனர்.

``கூட்டத்தில் என்ன நடந்தது?'' என அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வழிகாட்டும் குழுவை விரிவுபடுத்துவது தொடர்பாக எந்த விவாதங்களும் நடைபெறவில்லை. கூட்டத்தில் நடக்காத விஷயங்களை எல்லாம் சில ஊடகங்கள் வெளியிடுகின்றன. இந்தக் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு சோழவந்தான் மாணிக்கம் செல்வதெல்லாம் அவரது தனிப்பட்ட விஷயம். அவருக்குக் கட்சிதான் பதவி கொடுத்தது. அவர் எந்தக் கட்சிக்குப் போனாலும் எங்களுக்கு எந்தவித இழப்பும் இல்லை. அதற்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை'' என்கிறார்.

``உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக என்ன விவாதிக்கப்பட்டது?'' என்றோம். `` தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான அடிப்படை வியூகங்கள் விவாதிக்கப்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் அந்த வியூகத்தை விரிவுபடுத்த உள்ளனர். தற்போது அதுகுறித்து விரிவாக தெரிவிக்க இயலாது'' என்றார்.

அதேநேரம், கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் ஓ.பி.எஸ் இடம்பெறவில்லை. இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை தனது ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகருடன் சென்று சந்தித்துப் பேசினார். இவ்விரு தனித்தனியான சந்திப்புகளும் அ.தி.மு.க வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :