பிளஸ்டூ மாணவர், மாணவி சடலமாக கண்டெடுப்பு: கள்ளக்குறிச்சி அருகே ஒரே பள்ளியில் படித்தவர்கள், உறவினர்கள் போராட்டம்

பட மூலாதாரம், Zoonar RF / getty
கள்ளக்குறிச்சி அருகே ஒரே பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்றுவந்த 16 வயது சிறுவனும் சிறுமியும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு மாணவியைக் காணவில்லை என்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடியில் கோமுகி ஆற்றில் சிறுமி சடலம் மிதப்பதாகவும், அதற்கு அருகாமையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் உடல் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையிலான போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சிறுமி சடலத்தையும், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர். உடல்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டன.
பெற்றோர் உயிருடன் இல்லாத காரணத்தினால் சிறுவன் தாத்தா வீட்டில் வளந்துள்ளார். பேரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை வழி தாத்தா சீனுவாசன்(77) புகார் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, "எனது மகன் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி அஞ்சலிதேவி இருவரும் உயிருடன் இல்லை. அவர்களுக்கு பிறந்த மகனான எனது பேரனை நான் வளர்த்து வந்தேன்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மாலையிலிருந்து எனது பேரனை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 23ஆம் தேதி காலை சோமண்டார்குடி மரத்தில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்தார். அவர் முகத்தில் கொப்புளங்களும், உடலில் காயங்களும் இருந்தன. எனவே எனது பேரனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த காவல்துறையினர், "உயிரிழந்த இருவரும் 16 வயது, ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவருமே காதலித்துள்ளனர், இவர்கள் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு இருந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் தங்கையைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதனிடையே சிறுவன் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக நேற்று காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கவும், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அருகே சிறுமியும் சடலமாக இருப்பது தெரியவந்தது. இருவரின் உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது," என்று கூறினர்.சிறுவனும், சிறுமியும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்
- திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்தி
- விண்கல்லில் மோதி உலகைக் காக்கப் போகும் விண்கலம்
- தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
- 'ஜெய்பீம்' மீது பா.ம.க. காட்டிய அக்கறை, இடஒதுக்கீட்டில் இல்லையா?
- பிரியங்கா சோப்ராவுக்கு விவாகரத்தா? டிரெண்ட் ஆன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








