அமீர் கான் தெருவில் பட்டாசு வெடிக்கவேண்டாம் என்று கூறும் விளம்பரத்துக்கு பாஜக எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
(இன்று 22.10.2021 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
அமீர் கான் நடித்த டயர் நிறுவன விளம்பத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தினத்தந்தி பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
சியட் டயர் உற்பத்தி நிறுவனம், தனது தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஒரு காணொளி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் நடித்துள்ள இந்தி நடிகர் அமீர் கான், பொதுமக்கள் தெருவில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனந்த் வர்தன் கோயங்காவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்
"சமீபத்தில் தங்கள் நிறுவன விளம்பரத்தில், இந்துக்களின் உணர்வுகள் புண்படும்படி காட்சி இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் உங்கள் நிறுவனம், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் என்று நம்புகிறேன். தெருக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என நடிகர் அமீர்கான் அந்த காட்சியில் கூறுகிறார். இது நல்ல செய்தி. உங்களின் இந்த பொது நலன் சார்ந்த விஷயம் பாராட்டுக்குரியது.
மேலும் ஒரு பிரச்சினையை பொதுமக்கள் தெருக்களில் எதிர்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் நமாஸ் என்கிற பெயரில் சாலைகளை மறிப்பதால் பொதுமக்கள் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள். இது இந்திய நகரங்களில் வழக்கமாக நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சிக்கி பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன.
தர்காக்கள் மீது வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் பிரார்த்தனை (அசன்) செய்யப்படுகிறது. இதனால் அதிக ஒலி வெளியாகி நோயாளிகள், ஓய்வு எடுப்பவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இடையூறு ஏற்படுவதுடன் ஒலி மாசு உண்டாகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒலி அதிகமாக வெளிப்படுகிறது. வெள்ளிக்கிழமை நாட்களில் இது அதிக நேரம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தடுக்க நீங்கள் தீவிரமாக கவனம் செலுத்துகிறீர்கள். நீங்களும் இந்து மதத்தை சேர்ந்தவர் தான். ஆண்டாண்டு காலமாக இந்துக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை நீங்கள் அறிவீர்கள். சமீபகாலமாக இந்து அல்லாத நடிகர்கள், எப்போதும் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார்கள்.
அதே நேரத்தில் அவர்கள் சார்ந்த மதத்தினர் செய்யும் தவறுகளை வெளிப்படுத்துவதே இல்லை. எந்த நிலையிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்: ஹா்தீப் சிங்

பட மூலாதாரம், Getty Images
வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என இந்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
காணொளி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய பொது விவகார மன்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவா் "வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலரைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். மேலும், இது 2030-ஆம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்.
நாட்டின் வளா்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பெட்ரோல் பயன்பாடு கொரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் 16 சதவீதமும், டீசல் நுகா்வு 10-12 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதேபோன்று, பங்குச் சந்தையும் 2020 மாா்ச்சிலிருந்து 250 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துள்ளது.
பிபிசிஎல் நிறுவனத்தை தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அனைவரது கருத்துகளும் நல்ல முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன" என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மது குடிப்போரை கூண்டில் அடைக்கும் குஜராத் கிராமங்கள்: அதோடு ரூ.2,500 அபராதம் வேறு

பட மூலாதாரம், Getty Images
மது குடித்துவிட்டு வருபவர்களை இரும்புக் கூண்டுக்குள் சிறை வைப்பதை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோதிபுரா கிராமத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் அந்த சிறையை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் ரூ.2,500 அபராதம் செலுத்த வேண்டும். இதனால் அந்த கிராமத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
குஜராத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஆண்களுக்கு குடிப்பழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு கிராமத்திலும் மதுப்பழக்கத்தால் கணவனை இழந்த பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் மதுப்பழக்கத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் மோதிபுரா கிராமத்தில் யாரும் மது குடிக்கக் கூடாது என சமீபத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதையும் மீறி மது குடித்துவிட்டு ஊருக்குள் வந்தால் அவர்களை இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைக்கும் புதிய திட்டத்தை அக்கிராம பஞ்சாயத்து தலைவர் பாபுநாயக் அறிவித்தார்.
இதையடுத்து அந்த கிராமத்துக்குள் மது குடித்துவிட்டு வந்த இளைஞர்கள் இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர். ரூ.1,200 அபராதத் தொகையை செலுத்திய பிறகே அவர்கள் மறுநாள் காலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த அபராதத் தொகை அந்த கிராமத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மோதிபுரா கிராமத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு அருகில் உள்ள கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அகமதாபாத், சுரேந்திரன்நகர், அம்ரேலி, கட்ச் மாவட்டங்களில் உள்ள 24 கிராமங்களில் மது குடிப்போரை இரும்புக் கூண்டுக்குள் அடைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அபராதத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மோதிபுரா பஞ்சாயத்து தலைவர் பாபு நாயக் "2017-ம் ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். அப்போது அபராதத் தொகையாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டுமென கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் இதை ரூ.2,500-ஆக உயர்த்தினோம் இரவில் கூண்டில் அடைக்கப்படும் நபர்களுக்கு ஒரு குடிநீர் பாட்டில் மட்டுமே தரப்படும். இயற்கை உபாதைகளுக்காக ஒரு பெட்டி மட்டுமே தரப்படும். இந்தத் திட்டத்தால் கிராமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிராமத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளோம்" என கூறியுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தியில் பிரசுரமாகியுள்ளது.
கிராமத்திலுள்ள நேட் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஷ் நாயக் கூறும்போது, "இந்த அபராதத் தொகையை சமூக நலத் திட்டங்கள், மத நிகழ்ச்சிகள், சமூகப் பணிகளுக்காக பயன்படுத்துகிறோம். மேலும் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை, ஏழைப் பெண்களின் திருமணச் செலவுகளுக்கும் வழங்கி வருகிறோம்" என்றார்.
பிற செய்திகள்:
- பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?
- அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்
- "ஒரு படைத்தலைவனை கூட உருவாக்க முடியவில்லையா?" மதிமுக-வில் வாரிசு அரசியல் எதிர்ப்பு புயல்
- 'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் புதிய சமூக ஊடகம் தொடங்கும் டொனால்டு டிரம்ப்
- ஒரு தலை காதல்: பெண்ணின் கணவரை கொன்ற கோவில்பட்டி இளைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












