நரேந்திர கிரி: உத்தர பிரதேச இந்து சாமியார் மரணம் - நரேந்திர மோதி, யோகி ஆதித்யநாத் இரங்கல்

பட மூலாதாரம், Samiratmaj Mishra/BBC
- எழுதியவர், சமீராத்மஜ் மிஷ்ரா
- பதவி, பி பி சி ஹிந்திக்காக
அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் மற்றும் பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள பாகம்பரி மடத்தின் துறவி நரேந்திர கிரி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அல்லாபூரில் அமைந்துள்ள பாகம்பரி மடத்தின் ஓர் அறையில் கண்டெடுக்கப்பட்டது.
செய்தி கிடைத்தவுடன் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாக பிரயாக்ராஜ் பகுதியின் காவல் துறைக் கண்காணிப்பாளர் கேபி சிங் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
"தற்போது இது ஒரு தற்கொலை வழக்கு போல் தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலிருந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது," என்று அவர் கூறினார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நரேந்திர கிரி தனது அறிக்கைகளால் அடிக்கடி பேசுபொருளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரயாக்ராஜின் பாகம்பரி மடத்தின் துறவியான அவர், சங்கம் கரையில் உள்ள புகழ்பெற்ற பெரிய அனுமன் கோயிலின் தலைமை பூசாரியாகவும் இருந்தார்.
தற்கொலைக் குறிப்பு
நரேந்திர கிரியின் உடலுக்கு அருகில் நான்கு-ஐந்து பக்கங்களைக் கொண்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பிரயாக்ராஜ் ஐஜி கேபி சிங் ஊடகங்களுடனான உரையாடலில், இது முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாகத் தெரிவதாகக் கூறினார்.
"நரேந்திர கிரியிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பு மிகவும் மனதைத் தொடுவதாக இருக்கிறது. ஆசிரமத்தின் சில சகாக்களால்தான் மிகவும் வருத்தப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்."
நரேந்திர கிரி, தான் அந்த ஆசிரமத்திற்கு வந்த நாளிலிருந்து, அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எப்போதும் உழைத்ததாக எழுதியுள்ளார்.
அவர் ஆஸ்ரமத்தின் நிதியை மிகவும் முறையாகக் கையாண்டு வந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.
'நான் கௌரவத்திற்காகவே வாழ்ந்தேன், கௌரவத்திற்காக மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று அந்தக் குறிப்பில் எழுதியுள்ளார்.
சீடருடனான மோதல்
சமீபத்தில், அவரது சீடரும் யோகா குருவுமான ஆனந்த கிரியுடனான அவரது மோதல், தலைப்புச் செய்தியானது.
அவர் அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரியை வெளியேற்றினார். அந்த நேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.
தற்கொலைக் குறிப்பில் ஆனந்த் கிரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கே.பி சிங் கூறுகிறார். இருப்பினும், இந்தக் குறிப்பு (உண்மைத் தன்மை பற்றி) இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும், அதனால் அது குறித்து அதிக தகவல்கள் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Samiratmaj Mishra/BBC
குற்றச்சாட்டும் மன்னிப்பும்
ஆனந்த் கிரி, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அகாடாவில் உள்ள சர்ச்சை குறித்துக் கடிதங்களை அனுப்பியதோடு, மடத்தின் நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மடத்தின் சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரியிருந்தார். எனினும், இந்த விஷயத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துறவிகளும் மஹந்த் நரேந்திர கிரியை ஆதரித்தனர்.
பின்னர், ஆனந்த் கிரியும் மன்னிப்பு கேட்டார், ஆனால் அவர் மடத்துக்குள் மீண்டும் அழைக்கப்படவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு, அகில பாரத அகாடா பரிஷத் என்ற போலி ட்விட்டர் கணக்கிலிருந்து பல சர்ச்சைக்குரிய ட்வீட்கள் செய்யப்பட்டன. அது குறித்து, நரேந்திர கிரி தரகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்.
பாகம்பரி மடத்தின் துறவி என்பதால், உள்ளூர் மக்கள் தவிர, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவரைச் சந்திக்க வந்து போய்க்கொண்டிருந்தனர்.
பிரயாக்ராஜுக்கு வரும் அனைத்துப் பெரிய தலைவர்களும் புகழ்பெற்ற நபர்களும் சங்கம் அனுமனை வணங்கியபிறகு, இவரைச் சென்று சந்திப்பது வழக்கமாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று கூட, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கோயிலுக்குச் சென்று இவரிடம் ஆசி பெற்றார்.

பட மூலாதாரம், ANI
சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மஹந்த் நரேந்திர கிரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர், "அகில இந்திய அகாடா பரிஷத் தலைவர் பூஜ்ய நரேந்திர கிரியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தப் புண்ணிய ஆத்மாவை இறைவன் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டு, அவரைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைத் தரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். என மனப்பூர்வமான அஞ்சலி" என்று ட்வீட் செய்துள்ளார்.
துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேஷவ் மவுரியா, தனது ட்வீட்டில், "புஜ்ய மஹந்த் நரேந்திர கிரி மகாராஜ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியில் பேச்சிழந்துள்ளேன். குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும், அவர் தைரியத்தின் உருவகம். நேற்று காலை (செப்டம்பர் 19) அவரிடம் ஆசி பெற்றேன். அப்ப்போது மிகவும் சாதாரணமாக இருந்த அவரது திடீர் மறைவு தாங்க முடியாத துக்கம் தரக்கூடியது" என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகள்
மார்ச் 2015 இல், இவர் அகில பாரத அகாடா பரிஷத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு, 2019 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் பிரயாக்ராஜில் வசித்த அவர், சச்சின் தத்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு 2015 ஆம் ஆண்டில் மகாமண்டலேஸ்வர் என்ற பட்டத்தை வழங்கியபோது சர்ச்சைக்குள்ளானார். பிரயாக்ராஜின் பாகம்பரி மடத்திற்கு அருகிலுள்ள பிரயாக்ராஜ் நகரத்தைத் தவிர, நொய்டாவில் பல ஏக்கர் நிலமும் உள்ளது, அதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இது தவிர, மடம் மற்றும் சங்கம் பெரிய அனுமன் கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நரேந்திர கிரிக்கும் அவரது சீடர் ஆனந்த் கிரிக்கும் மோதல் உருவானது.
நரேந்திர கிரி பல பெரிய நிலங்களை விற்று பணத்தை தனது உறவினர்களுக்கு கொடுத்ததாக ஆனந்த் கிரி குற்றம் சாட்டினார்.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
(தற்கொலை என்பது ஒரு தீவிர உளவியல் மற்றும் சமூகப் பிரச்சனை. நீங்களும் மன அழுத்தத்தில் இருந்தால், இந்திய அரசின் ஜீவன்சாதி ஹெல்ப்லைன் 18002333330 உதவி பெறலாம். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும்.)

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












