தங்கத்தில் முதலீடு: ஹால்மார்க் அடையாள எண்ணால் என்ன நேரும்? நகைக்கடை அதிபர்கள் குமுறுவது ஏன்?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ` வருமான வரித்துறையைக் காட்டிலும் கூடுதல் அதிகாரத்தை பி.ஐ.எஸ் எனப்படும் தர நிர்ணய அமைப்புக்குக் கொடுத்துள்ளனர். இதனை எங்களால் ஏற்க முடியாது' என்கின்றனர் தங்க நகை வணிகர்கள். ஹால்மார்க் அடையாள எண்ணை வணிகர்கள் எதிர்ப்பது ஏன்?

ஹால்மார்க் அடையாள எண் ஏன்?

இந்தியாவில் தங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் களையும் வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட HUID (hallmark unique identity code) எனப்படும் `ஹால்மார்க் அடையாள எண் அவசியம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் அடிப்படையில் 14, 18, 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் பி.ஐ.எஸ் தெரிவித்திருந்தது. முதல்கட்டமாக 256 மாவட்டங்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. `இதனால் தங்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும்' என தங்க நகை வணிகர்கள் குமுறுகின்றனர்.

ஜனவரி மாதமே அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா தொற்று காரணமாக கால அவகாசம் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளன. அரசின் புதிய விதியை எதிர்த்து வணிகர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் புதிய விதிகள் தொடர்பாக பேசியுள்ள இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குநர் பிரமோத்குமார் திவாரி, ` இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் 50 நாள்களில் ஒரு கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பதிவு செய்த நகைக் கடைக்காரர்களின் எண்ணிக்கையும் 91 ஆயிரமாக உயர்ந்துள்ளது' என்கிறார்.

இரண்டரை மணி நேர எதிர்ப்பு

ஆனால், புதிய விதிகளை மாற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவில் நகைக்கடை உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 35,000 கடைகள் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் மட்டும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

hallmark gold

``பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளை எதிர்ப்பது ஏன்?" என சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லாலிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்திய தர நிர்ணய ஆணையத்தின் இந்த உத்தரவால், எங்களிடம் இருக்கும் தரவுகள் எளிதாக வெளியில் சென்றுவிடும். தயாரிப்பாளர் ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது HUID (hallmark unique identity code) போட்டுவிட்டால், அந்த நகை நுகர்வோரிடம் சென்று சேரும் வகையில் அந்த எண் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ரகசியம் காக்கப்படுமா?

நகையின் தயாரிப்பாளர் மொத்த விற்பனைக்கு கொடுக்கும்போது என்ன விலைக்கு விற்கிறேன் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதை நுகர்வோருக்கு விற்கும்போதும் என்ன விலை எனக் குறிப்பிட்டு இந்திய தர நிர்ணய (BIS) அமைப்பின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைக்காரர் அந்த நகையை நுகர்வோரிடம் விற்கும்போது பி.ஐ.எஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது ஒரு நகை உற்பத்தியாகி சென்று சேரும் வரையில் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். எங்களின் வியாபாரத்துக்கு முதுகெலும்பாக இருப்பது நுகர்வோர்கள்தான். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஜெயந்தி லால், ` தங்கத்தை வாங்குவோர் குறித்த தரவுகள் எல்லாம் பி.ஐ.எஸ் தளத்தில் இருந்து திருட்டுபோனால் யார் வேண்டுமானாலும் நுகர்வோரை வளைத்துவிடலாம். இதன்மூலம் நுகர்வோர்களும் எங்களைவிட்டு மாறிவிடுவார்கள். ஒரு நெக்லஸுக்கு என்ன விலை என்பது தெரிந்துபோனால் சேதாரத்தை கணக்கில் வைத்து கூடுதல் விலை வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தங்க நகையை உற்பத்தி செய்து ஹால்மார்க் முத்திரைக்காக அனுப்பும்போது எங்களைப் போல பத்து பேர் அங்கே காத்து இருப்பார்கள். நாங்கள் பொருளைக் கொடுத்தாலும் முத்திரை பதிப்பதற்கு 5 முதல் 7 நாள்களை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கேற்ற பாதுகாப்பு வசதிகள் பி.ஐ.எஸ்ஸில் இருப்பதில்லை. எதாவது திருடு போனால்கூட காப்பீடு வசதிகள் செய்து தரப்படவில்லை" என்கிறார்.

பி.ஐ.எஸ்ஸுக்கு இப்படியொரு அதிகாரம் ஏன்?

``மத்திய அரசின் இந்த முடிவை பெரும்பாலான வணிகர்கள் வரவேற்பதாக பி.ஐ.எஸ் தலைமை இயக்குநர் கூறுகிறாரே?" என்றோம். `` அனைவரையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கின்றனர். இந்திய தர நிர்ணய அமைப்பின் வேலை என்பது ஒரு பொருள் தரமானதா இல்லையா என்பதை ஆய்வு செய்வது மட்டும்தான். 22 கேரட் தங்கம் என நாங்கள் குறிப்பிட்டால், அது சரியாக இருக்கிறதா என அவர்கள் ஆய்வு செய்யட்டும். அதைவிடுத்து யார் உற்பத்தியாளர், நுகர்வோர் யார் என்பதையெல்லாம் பார்ப்பது அவர்களின் வேலை கிடையாது.

அடுத்ததாக, இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர் நகைக்கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது சரியானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கட்டாய HUID என்பது சரியல்ல. நாங்கள் விற்பனைக்குண்டான வரியைக் கட்டாமல் போனால் கவனிப்பதற்கு ஜி.எஸ்.டி ஆணையம் இருக்கிறது. அதேபோல், வருமான வரியை செலுத்தவில்லையென்றால் கவனிப்பதற்கு வருமான வரித்துறை உள்ளது. பிறகு எதற்காக பி.ஐ.எஸ்ஸுக்கு இப்படியொரு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்.

ஜி.எஸ்.டியில் 1 லட்சம் கோடி

ஜி.எஸ்.டி

பட மூலாதாரம், Getty Images

இதன் பின்னணி என்ன என்றுதான் தெரியவில்லை. 15 வருடங்களுக்கு முன்பு வரைமுறையில்லாமல் செயல்பட்ட நகைக்கடைகளை ஒரு வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டனர். ஜி.எஸ்.டி வந்த பிறகு அனைத்தும் சரியாகிவிட்டது. நகைக்கடைகள் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வருவாய் வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஜூலை மாதம் 20 சதவிகிதம் இது அதிகரித்துள்ளது. அனைவருக்கும் நேரம் கொடுத்து முறையாக புதிய விதிகளைக் கொண்டு வந்தால் நல்லது.

இதில் வேதனை என்னவென்றால், அடையாள எண் பதிக்காத நகைகளை பறிமுதல் செய்வது, கடைக்கு சீல் வைப்பது அல்லது எந்த நகைக்கு அடையாள இலக்கம் கொடுக்கவில்லையோ அந்த நகைக்கு ஈடாக 5 மடங்கு அபராதம் விதிக்கலாம் என்பன போன்ற பல அதிகாரங்களை பி.ஐ.எஸ்ஸிடம் கொடுத்துள்ளனர். வருமான வரித்துறையால்கூட நகைகயை பறிமுதல் செய்ய முடியாது. அதைவிட கூடுதல் அதிகாரத்தை தர நிர்ணய அமைப்புக்குக் கொடுத்துள்ளனர். எந்த நுகர்வோரும் 22 கேரட் சீல் மற்றும் ஹால்மார்க் முத்திரை ஆகியவற்றைத்தான் கேட்பார்கள். அடையாள எண் போடுங்கள் என யாரும் கேட்டதில்லை" என்கிறார்.

`` உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?" என்றோம். `` இன்றைக்கு அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதன் பாதிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் தெரியவரும். மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளில் பெரும் நகை வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்கிறார்.

``பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகள் நகைக்கடை வணிகர்களிடையே கொதிப்பை உருவாக்கியுள்ளதே?" என தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இ்துதொடர்பாக மத்திய அரசிடம் நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மனுவை அரசு பரிசீலிக்கும் என நம்புகிறேன்" என்கிறார்.

தப்பிக்க முடியாத சூழல் எதற்காக?

``தங்க நகை வணிகர்களின் எதிர்ப்பு சரியானதுதானா?" என பொருளாதார ஆலோசகர் நாகப்பனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளின்படி ரூபாய் 40 லட்சம் வரையில் தங்க நகை வியாபாரம் செய்பவர்களுக்கு விலக்கு கொடுத்துள்ளனர். அதனை ரூபாய் ஒரு கோடியாகவோ, ரூபாய் 2 கோடியாகவோ உயர்த்திக் கேட்பதில் தவறு இல்லை. விருதுநகர் போன்ற ஊர்களில்கூட சிறு வியாபாரிகள் வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்கின்றனர். இந்தத் தொகையை நீட்டிப்பது தொடர்பான கோரிக்கையை அவர்கள் வைக்கலாம்" என்கிறார்.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசியவர், `` இந்தியாவில் உள்ள மொத்த நிலங்களுக்கும் பட்டா உள்பட அனைத்து விவரங்களும் அரசு ஆவணங்களில் தெளிவாக உள்ளன. அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு ஆயிரம் டன் தங்கம் வருகிறது என்றால் அதில் 900 டன் தங்கத்தைப் பணக்காரர்கள்தான் வாங்குகின்றனர். இங்கு தங்கம் என்பது ஏழைகளுக்கு ஆடம்பரமான ஒன்றுதான். இதனை மறைப்பதற்காக இந்த விவகாரத்தில் ஏழை, எளியவர்கள் பக்கம் இவர்கள் கைகளை காண்பிக்கின்றனர். இவ்வாறு பேசுகிறவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர்கள்தான். இதன்மூலம் அரசாங்கத்துக்கு என்ன அஜெண்டா உள்ளது எனத் தெரியவில்லை.

தவிர, பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளால் சிறு தொழில் செய்கிறவர்கள் அதிகம் பாதிக்கப் போவதில்லை. ஒரு கோடி வைத்திருந்தால் என்ன செய்வது எனத் தெரியாத நிலை வரும்போது பணத்தை வெள்ளையாக வாங்கத் தொடங்குவார்கள். கறுப்புப் பணம் செல்லும் இடங்களில் ரியல் எஸ்டேட் மிக முக்கியமான இடமாக உள்ளது. அந்தத் தொழிலுக்கும் அடையாள எண்ணைக் கொண்டு வரும் வேலைகளையும் செய்வார்கள்.

அதேபோல், தங்கத்தையும் கொண்டு வர நினைக்கிறார்கள். இந்தியாவுக்குள் ஆயிரம் டன் தங்கம் வந்தால் வடமாநிலங்களுக்கு 200 டன், தென் மாநிலங்களுக்கு 200 டன் எனச் செல்வதாகப் பார்த்தால் அது எங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை கடைசி வரையில் கண்காணிக்க உள்ளனர். அடையாள எண் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளிலும் கண்காணிக்கிறார்கள். எங்கேயும் தப்பிக்க முடியாத சூழலை உருவாக்குகிறார்கள். இதை கட்டாயம் செய்ய வேண்டும்" என்கிறார்.

மேலும், `` பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளை சிறு, குறு வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். தங்க நகையை லாபம் இல்லாமல் விற்க முடியாது. லாபத்தைக் கேள்வி கேட்பதால் கூலி, சேதாரம் போட்டு விற்கிறார்கள். சிறிது காலத்துக்காவது 40 லட்சம் ரூபாய் என்ற உச்ச வரம்பில் இருந்து சிறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :