பார்வதி நாகராஜன்: அழிந்து வரும் மூலிகைகளை காத்து பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி

பார்வதி
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழ்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பார்வதி நாகராஜன், மூலிகை தாவரங்கள் பாதுகாப்பது குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அதன் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நுணுக்கங்களையும் கற்பித்து ஏழை கிராமப்புற பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி நாகராஜன் பாரம்பரிய இயற்கை மூலிகை வைத்தியம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.

குறிப்பாக இயற்கை மூலிகையிலிருந்து மருந்துகள் தயாரிப்பது, உணவுப் பொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது, மூலிகை தோட்டம் உருவாக்குவது, அதன் மூலமாக வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவது உள்ளிட்ட பயிற்சிகளை கிராமத்துப் பெண்களுக்கு அளித்து வருகிறார்.

வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை

"எங்கள் கிராமத்தில் பெண் பிள்ளைகளை பாரமாக பார்த்த நேரத்தில், எங்கள் வீட்டில் நான்கு பெண் பிள்ளைகள் இருந்தோம். எங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் பெண் பிள்ளைகள் அதிகமாக இருந்ததால் விரக்தியாகவே உணர்ந்தனர். அதனாலேயே என்னுடைய சிறிய வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன்," என்கிறார் பார்வதி நாகராஜன்.

பார்வதி

5-ஆம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளிக் கூடத்தில் படித்து வந்தேன். மேற்கொண்டு 6-ஆம் வகுப்பு செல்ல வேண்டுமென்றால் எங்கள் கிராமத்தில் இருந்து 6 கி.மீ., பயணம் செய்ய வேண்டும். பெண் பிள்ளைகள் அவ்வளவு தூரம் சென்று படிப்பது நல்ல விஷயம் இல்லை என்று கூறி என்னை பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் பெண் பிள்ளைகள் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமென்று இருந்தனர்.

வீட்டில் மேற்கொண்டு படிக்க அனுமதிக்கவில்லை. 11 வயதிருக்கும்போது, எப்படியாவது பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் பகுதியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் ஒரு பையனை பின் தொடர்ந்து சென்று அந்த பள்ளியை கண்டறிந்தேன்.

பிறகு யார் துணையும் இல்லாமால் தனியாகவே அப்பள்ளியில் சேர்ந்தேன். அந்த தருணம்தான் எனது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைத்தது.

" அந்த சிறிய வயதிலேயே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். நாம் நல்லபடியாக படித்து வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான நிலைக்கு வருவதன் மூலமாக இந்த கிராம மக்களுக்கும், என் உறவினர்களுக்கும் பெண் பிள்ளைகளால் எதுவும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்க முடியும் என்ற வைராக்கியத்தோடு படித்தேன்," என்றார் அவர்.

பார்வதி

தனது குடும்ப வறுமை சூழலால் பள்ளி வார விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்கு சென்று பிற செலவினங்களையும் கவனித்துள்ளார் பார்வதி நாகராஜன்.

சிறு வயதில் தொடங்கிய ஆர்வம்

"எங்கள் குடும்பம், வைத்தியர் குடும்பம் என்பதால் எனது பாட்டி சிறிய வயதில் சின்ன சின்ன உடல்நலப் பிரச்னைகள் மற்றும் தோல் வியாதிக்கு வைத்தியம் பார்த்து வந்தார். அந்த நேரத்தில் பாட்டி வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளை நான் பறித்து வந்து கொடுப்பேன். அதன் மூலமாக எனக்கு மூலிகை பற்றி நன்கு தெரிய ஆரம்பித்தது. இதனால் மூலிகை மருந்துகள் தயாரிக்கும் செய்முறைகளை மற்றொருபுறம் நன்கு கற்றுக் கொண்டேன்."

" இப்படியே மேல்நிலை வகுப்பு வரை பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே படித்து முடித்தேன். ஆனால் மேற்கொண்டு குடும்பம் மற்றும் உறவினர்கள் நெருக்கடி காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போனது."

" இதையடுத்து எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும். அப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எங்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்று படிக்க வேண்டும் அல்லது ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினேன்."

பார்வதி

" அந்த தருணத்தில் தான், புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த பிச்சாண்டிக்குளம் மூலிகை பாதுகாப்பு நிறுவனத்தில் என்னை வேலைக்காக அழைத்தனர். நானும் எதைப் பற்றியும் யோசிக்காமல் வெளியே சென்றால் போதுமென எண்ணி அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். அந்த மூலிகை நிறுவனத்தில் பயிற்சியாளராக என்னை நியமித்தனர்," என்கிறார் பார்வதி.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி

"மூலிகை பற்றிய பயிற்சி கொடுக்கவும், விழுப்புணர்வு ஏற்படுத்துவதும் எனது பணியாக இருந்தது. குறிப்பாக சிறிய வயதில் எனது பாட்டிக்காக பிடித்தும் பிடிக்காமலும் செய்த ஒரு வேலை பிற்காலத்தில் அதுவே எனது வாழ்வை எனக்கு பிடித்த வகையில் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை.

நான் பணிபுரியும் நிறுவனத்தில் நிறுவனர் ஒரு வெளிநாட்டவர். நீண்ட நாட்களாக இங்கேயே தங்கி பாரம்பரிய விஷயங்களை திரும்ப கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்து வந்தார். அவரை பார்க்கும்போது எனக்கு மேலும் உத்வேகமாக இருந்தது," என்று கூறுகிறார் அவர்.

அதன்பின் இதே மண்ணில் பிறந்து இங்கேயே வளர்ந்த நான் ஏன் இதை செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியதாக தெரிவிக்கிறார் பார்வதி.

"அதிலிருந்து எனது வேலையை அதிகமாக நேசிக்க தொடங்கினேன். அனைத்து மூலிகை மற்றும் தாவரங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் நுணுக்கமாக தெரிந்து கொண்டேன். இதை எளிமையாக மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பதில் கவனம் செலுத்தினேன். ஒரு பயிற்சியாளராக என்னை மேலும் மேம்படுத்திக் கொண்டேன்," என்கிறார் பார்வதி.

பார்வதி

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த பயிற்சியை அளித்துள்ளார் பார்வதி. குறிப்பாக இயற்கை வளங்களை வைத்து உணவு, மருந்து, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை எப்படி தயாரிப்பது மற்றும் எவ்வாறு மூலிகை தோட்டம் உருவாக்குவது என்பது குறித்து ஊக்கப்படுத்துகிறார். இவை அனைத்துமே இயற்கை வளங்களை மையப்படுத்தியும், அவர்களை சுற்றி இருக்கக்கூடிய வளங்களை வைத்தே வழங்குகிறார்.

பெண்கள் சுயசார்பாக இருக்கக்கூடிய அனைத்து தொழில் உத்திகளையும் பயிற்சியாக வழங்குகிறார் பார்வதி.

தொடர்ந்து கிராமப்புற பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்கள் உருவாக்கும் பொருட்கள் மற்றும் மருந்துகளை சந்தை படுத்துவதற்கான தொடர்பை ஏற்படுத்துகிறார். அவர்களுக்கு நேர்மறையான விஷயங்களை கொடுத்து முன்னேற்றத்திற்கான பாதையை எப்படி உருவாக்க முடியும் என்ற நோக்கில் வழிநடத்தி வருகிறார் இயற்கை மூலிகை வைத்தியர் பார்வதி நாகராஜன்.

இவரின் இந்த முயற்சியைப் பாராட்டும் விதமாக இயற்கை வளங்களை நீடித்த வகையில் பயன்படுத்தி, வாழ்வாதாரம் மேம்படும்படி செய்வதற்காக இவருக்கு இந்திய அரசு 2018ம் ஆண்டு 'இந்திய பல்லுயிர் விருது' வழங்கியது. மேலும் பெங்களூரில் உள்ள பூமி கல்லூரி இயற்கை மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்காக 'சீனியர் ஃபெலொஷிப்' விருது வழங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :