வெளிநாடுகளில் லயத்தோடு ஒலிக்கும் மானாமதுரை கடம் - தமிழ்நாட்டின் மண்பாண்ட கிராமத்தின் கதை

காய வைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்கள்
படக்குறிப்பு, காய வைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்கள்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமான கிராமங்கள் என்ற பெயரில் கிராமத்தில் பின்பற்றப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த வழக்க முறைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அதன் வரிசையில் கடம் இசைக் கருவி தயாரிப்புக்காக உலக அளவில் பெயர்பெற்ற ஒரு கிராமத்தை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்ட மானாமதுரை குலாலர் தெருவில் நான்கு தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர்.

வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

மானாமதுரை அருகே உள்ள குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிப்பு என்பது பிரதான தொழிலாக உள்ளது.

நவ நாகரிகத்திற்கு ஏற்றார் போல் சாமி சிலைகள், விளக்குகள், புரவி, பொம்மை, அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், பானை, ஊறுகாய் ஜாடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

உலக புகழ்பெற்ற கடம் வாத்தியம்

கடம்

கர்நாடக இசைக் கலைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் தயாரிக்கப்படுகிறது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் பக்கவாத்தியக் கலைஞர்கள் மானாமதுரை வந்து கடத்தை வாங்கி செல்கின்றனர்.

மானாமதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து வரப்பட்டு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கடம் தயாரிக்கின்றனர்.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக் கலைஞர்களும் கேரள, ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் இக்கிராமத்திற்கு நேரடியாக வந்து கடம் வாங்கி செல்கின்றனர்.

தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமாகவும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலம் மண்பானைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மானாமதுரை வந்து மண் பானைகளை வாங்கி செல்கின்றனர்.

கோடை காலத்தில் மண்பாணைக்கு மவுசு அதிகம்

மண்பாண்ட கலைஞர்கள்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சங்கர், "எங்கள் குடும்பம் மானாமதுரையில் நான்கு தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். சீசனுக்கு ஏற்றவாறு மண்பாண்ட பொருள்கள் செய்கிறோம்.

சாமி சிலைகள், விளக்குகள், புரவி, பொம்மை, அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், பானை, ஊறுகாய் ஜாடி என்று எல்லாப் பொருள்களும் செய்கிறோம்."

"களிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப் பொருள்கள் சேர்த்து தரமான மண்பாண்ட பொருள்களை எங்கள் கிராமத்தில் செய்து வருகிறோம். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் மண்பானை வியாபாரம் அதிகமாக நடைபெறும்.

குட்டிப்பானை, பெரிய பானை, தண்ணீர் ஜாடி, குட்டி மண் கேன் உள்ளிட்ட பொருள்கள் அதிகமாகப் செய்யப்படும், " என்றார்.

வெளிநாடுகளில் ஒலிக்கும் மானாமதுரை கடம்

மண்பாண்ட கலைஞர்கள்

இது குறித்து கடம் செய்யும் மண்பாண்ட தொழிலாளி ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் 15 வயதில் இருந்து கடம் தயாரிக்கிறேன். எனது தாத்தா, அப்பா காலத்தில் இருந்து நாங்கள் கடம் தயாரிக்கிறோம். கர்நாடக இசையில் பங்கு பெறும் பெரும்பாலான கடங்கள் இங்கு தயாரானவைதான்."

பல இசைக்கலைஞர்கள் இங்கிருந்து கடம் வாங்கிச் செல்கின்றனர். நாங்கள் நாளொன்றுக்கு 3 பேர் சேர்ந்து 20 கடங்கள் வரை தயாரிக்கின்றோம். இதில் சுருதி, லயம் சேர்ந்து கச்சேரிகளில் பங்கு பெறும் வண்ணம் 10 முதல் 14 கடங்கள் வரையே தேர்வு செய்யப்படும்," என்றார் ரமேஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :