தோராப்ஜி டாடா: இந்திய வீரர்களை தம் சொந்த செலவில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிய வணிகர் - 101 ஆண்டு வரலாறு

தோராப்ஜி டாடா

பட மூலாதாரம், TATA CENTRAL ARCHIVES

    • எழுதியவர், சூர்யான்ஷி பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

விடுதலைக்கு முன்பே ஆங்கிலேய ஆட்சியிலேயே இந்தியர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வித்திட்டவர் தோராப்ஜி டாடா.

சர் தோராப்ஜி டாடாவின் முயற்சியால் 1920 ஒலிம்பிக் போட்டியில் ஆறு இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதலில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஆசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

விதை தூவப்பட்டது

இந்தியாவின் முன்னணி எஃகு மற்றும் இரும்பு தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகனான சர் தோராப்ஜி டாடா, சர் ரத்தஜ்னி டாடாவிற்கு 12 வயது மூத்த சகோதரர். எஃகு மற்றும் இரும்பு வியாபாரத்தில் 'டாடா' நிறுவனத்திற்கு வலுவான இடத்தைப் பெற அவர் விரும்பினார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் தொழில்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு 1910ஆம் ஆண்டு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. இத்துடன் திருப்தி அடையாத தோராப்ஜி டாடா, இந்தியாவை விளையாட்டுத் துறையிலும் முன்னிறுத்த விரும்பினார்.

மூத்த விளையாட்டுச் செய்தியாளரான போரியா மஜும்தாரும் பத்திரிகையாளர் நளின் மேத்தாவும் எழுதிய 'ட்ரீம் ஆஃப் எ பில்லியன்' என்ற நூல், ஒலிம்பிக்கில் இவரது பங்களிப்பை விவரமாகக் கூறுகிறது.

தனது ஆரம்பக் கல்வியைத் தம் சொந்த ஊரான மும்பையில் முடித்த தோராப்ஜி டாடா, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கான்வில் அட் கீஸ் கல்லூரியில் சேர்ந்தார்.

இங்கிலாந்துக் கல்லூரிகளில் விளையாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் அவரைக் கவர்ந்தது. நாடு திரும்பிய அவர், 1882ஆம் ஆண்டு வரை மும்பையின் புனித சேவியர் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க விரும்பிய அவர், பள்ளிகள், கல்லூரிகளில் தடகளக் கழகங்களையும் போட்டிகளையும் ஏற்பாடு செய்ய ஊக்குவித்ததோடு அவற்றுக்குச் சிறப்பான பங்களிப்பையும் வழங்கினார்.

14 வயது சச்சின் டெண்டுல்கரும் தோராப்ஜி டாடாவும்

14 வயது சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1988 ஆம் ஆண்டில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்றில், 14 வயதான சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்லியுடன் ஜோடி சேர்ந்து 664 ரன்கள் எடுத்தார்.

1988 ஆம் ஆண்டில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்றில், 14 வயதான சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்லியுடன் ஜோடி சேர்ந்து 664 ரன்கள் எடுத்தார்.

சச்சின் மற்றும் வினோத் காம்ப்லியின் இந்த நம்ப முடியாத செயல்திறன் உலகம் முழுவதும் பேசப்பட்டது.

சச்சினுக்கு இந்த பெரிய அங்கீகாரத்தை வழங்கிய அந்தப் போட்டியின் பெயர் ஹாரிஸ் ஷீல்ட். இதையும் 1886ஆம் ஆண்டில் சர் தோராப்ஜி டாடாதான் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1920 ஒலிம்பிக்: சொந்தச் செலவில் வீரர்களை அனுப்பினார்

தோராப்ஜி டாடா

பட மூலாதாரம், TATA CENTRAL ARCHIVES

புனேவில் டெக்கான் ஜிம்கானாவின் முதல் தலைவராக தோராப்ஜி டாடா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் முதல் தடகளப் போட்டியை 1919-ல் இவர்தான் நடத்தினார்.

பங்கேற்ற வீரர்கள், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஓட மட்டுமே தெரிந்திருந்ததே தவிர, போட்டியின் விதிகள் நெளிவு சுளிவுகள் எதுவும் இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை போட்டியின்போது டாடா உணர்ந்தார்.

ஆனால், அந்தக் காலத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசத்திற்குள் ஓடும் திறனைச் சிலர் பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டியில் முதன்மை விருந்தினராக வந்த பம்பாய் மாகாண ஆளுநர் டேவிட் லாயிட் ஜார்ஜிடம் டாடா, 1920 ஆண்ட்வெர்ப் (பெல்ஜியத்தில் உள்ள நகரம்) ஒலிம்பிக்கிற்கு இந்தியாவை அனுப்புமாறு கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் இந்தியாவின் பங்கேற்பதற்கான அனுமதியை பிரிட்டிஷ் ஒலிம்பிக் சங்கத்திடம் கோரிப்பெற்றார். ஆளுநரின் உதவியுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர், இந்தியாவிற்கு அனுமதி கிடைத்தது. இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைப்பதற்கான அடித்தளம் அப்போது போடப்பட்டது.

ஐ.ஓ.சி (சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) அனுமதியுடன், தேர்வுக்காக ஒரு தடகளப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயலாற்றிய ஆறு வீரர்களை 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கிற்குத் தேர்ந்தெடுத்தார் தோராப்ஜி.

இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டுகளின் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாது.

'ட்ரீம் ஆஃப் எ பில்லியன்' புத்தகத்தில் ஓர் உரையாடல் உள்ளது, அதில் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தகுதி பெறுவதற்கான நேர அளவு என்ன என்று ஒரு முக்கிய ஜிம்கானா உறுப்பினரிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் 'ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள்' என்று கூறுகிறார். ஒலிம்பிக்கில் வினாடிகள் மற்றும் மில்லி விநாடிகளில் தான் பேச்சே என்று கூறப்பட்ட போது அந்த நபர் ஆச்சரியப்பட்டார் என்று அப்புத்தகம் குறிப்பிடுகிறது.

பெரும்பாலும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இந்த வீரர்களுக்கு நிதியுதவி என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. சுமார் 35 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது, அன்று.

பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளை கோரி, ஜிம்கானா சார்பாக 'தி ஸ்டேட்ஸ்மேன்' செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. தன் சார்பாக அரசு ரூ. 6,000 கொடுத்திருந்தது.

ஆனால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை பெரிதும் உதவவில்லை. பின்னர் சர் தோராப்ஜி டாடா தனது தனிப்பட்ட செலவில் மூன்று வீரர்களை அனுப்பினார். மீதமுள்ள வீரர்கள் நன்கொடை பணத்தைக் கொண்டு அனுப்பப்பட்டனர்.

போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை ஈட்டவில்லை என்றாலும், இது ஒரு தொடக்கமாக இருந்து ஊக்கமளித்தது.

1924 பாரிஸ் ஒலிம்பிக்கில் நிலை மாறியது

தோராப்ஜி டாடா

பட மூலாதாரம், TATA CENTRAL ARCHIVES

படிப்படியாக, ஒலிம்பிக் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. 1920ஆம் ஆண்டில், பெரும்பாலான செலவு டாடா, அரசர்கள் மற்றும் அரசாங்கத்தால் தான் செய்யப்பட்டது. ஆனால், இந்த முறை நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் உதவி கிடைத்தது. ராணுவம் கூட உதவியது.

மாநில அளவில் நடைபெறும் 'ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள்' தலைப்புச் செய்தியாக இருந்தன. 1920 ஒலிம்பிக்கிற்கு, தோராப்ஜி டாடா தமது அனுபவத்தின் அடிப்படையில் வீரர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த முறை பல கட்ட போட்டிகளுக்குப் பிறகு, 'டெல்லி ஒலிம்பிக்' மூலம் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தேர்வுமுறை காரணமாக, அகில இந்திய ஒலிம்பிக் சங்கம் உருவாக்கப்பட்டது. 1924 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க எட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த முறையும் வீரர்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றாலும், முந்தைய முறையை விட மேம்பட்டிருந்தது. அகில இந்திய ஒலிம்பிக் சங்கம் மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1927ஆம் ஆண்டில், இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) உருவாக்கப்பட்டது, இது இன்றுவரை இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பொறுப்பேற்று வருகிறது.

சர் தோராப்ஜி அப்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

1928ஆம் ஆண்டில் பெர்லின் ஒலிம்பிக் நடைபெறுவதற்கு முன்பு, சர் தோராப்ஜி இந்திய ஒலிம்பிக் சங்கம் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்தப் பதவிக்காக, பல அரசர்கள், வர்த்தக ஜாம்பவான்கள் காத்திருந்தார்கள்.

ஒலிம்பிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

அந்த நேரத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராவதற்கு நிதியாதாரம் பெரிய தகுதியாக இருந்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன் இந்தியாவிற்குத் தொடர்ந்து பிரதிநிதித்துவம் கிடைக்கும் வண்ணம், அதன் தலைவர், இங்கிலாந்து செல்லக்கூடிய அளவுக்கு நிதி ரீதியாக வலுவாக இருக்க வேண்டும், இதனால் ஐ.ஓ.சி (சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) கபுர்தலா மன்னர் ஜக்ஜித் சிங்கைப் பரிந்துரைத்தது. டாடாவும் இதை ஆட்சேபிக்கவில்லை.

இதற்கிடையில், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மற்றும் நவாநகரின் ஜாம் சாஹிப், ரஞ்சித்சின்ஜி மற்றும் பர்த்வான் அரசர் ஆகியோர் பெயர்களும் அடிபட்டன.

ஆனால் பாட்டியாலா மன்னர் மகாராஜ் பூபிந்தர் சிங் களத்தில் இறங்கியபோது அனைவரும் திடீரென பின்வாங்கினர்.

பாட்டியாலா மன்னர் மகாராஜ் பூபிந்தர் சிங், ரஞ்சித்சின்ஜிக்கு சிரமமான காலங்களில் பல முறை நிதி உதவி செய்ததால், ரஞ்சித்சின்ஜியும் பின்வாங்கினார். இருவருக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக இருந்தது.

1924 ஒலிம்பிக்கிற்குச் சென்ற பஞ்சாப் வீரர் தலிப் சிங்குக்கு உதவியவர் பூபிந்தர் சிங். தமக்கு எதிரான அரசியல் காரணமாக தலிப் சிங் தகுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன போது, ​​பாட்டியாலா மகாராஜாவிடம் உதவி கோரினார்.

இதன் பின்னர் பூபிந்தர் சிங் தமது அணியில் தலிப் சிங்கிற்குத் தகுதியான இடத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு பாட்டியாலா மாநில ஒலிம்பிக் சங்கத்தையும் உருவாக்கினார்.

ரஞ்சித்சின்ஜிஜிக்குப் பிறகு, விளையாட்டில் ஆர்வம் காட்டிய இந்திய அரசர் பூபிந்தர் சிங் தான்.

இதன் பின்னர், ஐ.ஓ.சி 1927 ஆம் ஆண்டில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பூபிந்தர் சிங்கைத் தேர்ந்தெடுத்தது. அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டவுடன், சர் தோராப்ஜி டாடாவை ஆயுட்காலத் தலைவர் பதவி வழங்கிக் கௌரவித்தார்.

தங்கம் வென்ற இந்தியா

1928 ஆம் ஆண்டு, பாரதம் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்றது. இது ஹாக்கி வீரர் தியான் சந்தால் சாத்தியமானது. அதன் பிறகு, ஆண்கள் ஹாக்கியில் தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்றது இந்தியா.

இப்போது 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வெல்லத் தயாராக, பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், விதை, அன்று தோராப்ஜி போட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :