டோக்கியோ ஒலிம்பிக்: தேஜிந்தர் வீசும் குண்டு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுக்குமா?

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
    • பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக

அடுத்த வாரம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும். இந்தியா 120 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் முழு உற்சாகத்துடன் இந்த விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்கும்.

இந்திய குழுவில், 26 தடகள விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தடகள போட்டிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும்.

இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள குண்டு எறிதல் வீரரான தேஜிந்தர் பால் சிங் தூர்,கடைசி நிமிடத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

கடந்த மாதம் பட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்சில் தேஜீந்தர் பால் சிங் தூர் 21.49 மீட்டர் குண்டு எறிந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். டோக்கியோ செல்லும் அணியில் இடம்பெற 21.10 மீட்டர் தூரம் எறிய வேண்டியது அவசியமாக இருந்தது.

தேஜீந்தர் இந்த தடையை எளிதில் தாண்டியது மட்டுமல்லாமல், தனது சொந்த மற்றும் ஆசிய சாதனையையும் முறியடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவருக்கு முன் ஆசிய சாதனையை, செளதி அரேபியாவின் சுல்தான் அப்துல் மஜீத் அல் ஹெப்ஷி நிகழ்த்தியிருந்தார். அவர் 2009 இல் 21.13 மீட்டர் எறிந்து இந்த சாதனையை படைத்தார். பட்டியாலாவில் சாதனை படைக்கும் முன் தேஜிந்தரின் அதிகபட்ச எறிதல் தூரம் 20.92 மீட்டராக இருந்தது.

தேஜிந்தர் பால் சிங் தூர் ,இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒலிம்பிக் அணியில் இடம் பெற முயற்சித்தாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மார்ச் மாதத்தில் பட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்சில் அவர் பங்கேற்றார். ஆனால் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியவில்லை.

ஆசிய விளையாட்டுகளில் தங்கம்

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம், Getty Images

2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20.75 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றபோது தேஜிந்தர் பால் சிங் பெயர் பிரபலமானது. இந்த வெற்றியை அவர் ஒரு தேசிய சாதனையுடன் அடைந்தார்.

2018 காமன்வெல்த் போட்டிகளில் அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் 19.42 மீட்டர் மட்டுமே எறிந்து அவர் 8 வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்த நாட்களில் புற்றுநோயுடன் போராடி வந்த தனது தந்தையின் நிலை அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம்.

தேஜிந்தர் 2017 ஆம் ஆண்டிலிருந்து வெற்றிப்படிகளில் ஏறத்தொடங்கினார். பட்டியாலாவில் நடைபெற்ற, ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டிகளில் அவர் 20.40 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்தார். இருந்தாலும், உலக சாம்பியன்ஷிப்பில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஏனெனில் அதில் தகுதி பெறுவதற்கான தூரம் 20.50 மீட்டர் ஆகும்.

2017 ஆம் ஆண்டில் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தேஜிந்தர் பால் 19.77 மீட்டர் குண்டெறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அங்கு அவர் 0.03 மீட்டர் சிறிய வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். ஆனால் 2019 ஆம் ஆண்டில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றார்.

தந்தை கண்ட கனவு

அவரது பயிற்சியாளர் மொஹிந்தர் சிங் தில்லோன், தேஜிந்தரை குண்டு எறிதலில் வல்லுநராக மாற்றும் பணியை செய்தார்.

முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதை தனது தந்தையால் பார்க்க முடியவில்லையே என்று தேஜிந்தர் வருத்தப்படுகிறார். ஏனெனில் அவரது தந்தை இப்போது இந்த உலகத்தில் இல்லை.

அவரது தந்தை கர்ம் சிங், குண்டு எறிதலில் இறங்குமாறு தேஜிந்தரை ஊக்குவித்தார். அந்த நேரத்தில் தேஜிந்தரின் முதல் தேர்வு கிரிக்கெட் விளையாடுவதாகும். அவர் மோகாவில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.

தேஜிந்தர் பாலின் சித்தப்பாவும் ஒரு குண்டு எறிதல் வீரர். எனவே, அணி விளையாட்டுக்கு பதிலாக தனிப்பட்ட விளையாட்டை தேர்வு செய்வதை தந்தை கர்ம் சிங் விரும்பினார்.

கை காயம் மற்றும் கொரோனா பயம்

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம், Getty Images

டோக்கியோவுக்கு தகுதி பெற்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக தேஜிந்தர் ஒப்புக்கொள்கிறார்.

கடைசி நிமிடத்தில் டோக்கியோவுக்கு தகுதி பெற்றது குறித்துப்பேசிய அவர், கையில் காயம் ஏற்பட்டதால் இரண்டு மூன்று மாதங்களுக்கு குண்டுஎறிய முடியவில்லை என்று கூறுகிறார்.

இந்தக் காரணத்தினால் மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ஃபெடரேஷன் கோப்பையில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

காயத்திலிருந்து மீள அவர் கையில் பிளாஸ்டர் போட வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெளிப்பட்ட ஏமாற்றமளிக்கும் செயல்திறன் மனதில் அழுத்தத்தை உருவாக்கத் தொடங்கியது.

கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு போன்றவை இந்த அழுத்தத்தை மேலும் கூட்டியது.. சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டன.

அந்த காலகட்டத்தில், ​​இந்திய தடகள கூட்டமைப்பு மற்றும் இந்திய விளையாட்டு அதிகார அமைப்பும் தொடர்ந்து அவருக்கு உதவின. இரானில் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால், டோக்கியோவுக்கு செல்ல முடியுமா முடியாதா என்று தேஜிந்தர் கவலை கொண்டார்.

இது தவிர ஜூன் மாதத்தில் கஜகஸ்தானுக்கு செல்வதும் ரத்து செய்யப்பட்டது. பட்டியாலாவில் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் நடக்குமா என்றும் தேஜிந்தர் சந்தேகிக்கத் தொடங்கினார். எல்லாம் சரியாக நடந்ததற்காக இப்போது அவர் கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.

22 மீட்டர் எறிவதே இலக்கு

தரவரிசை அடிப்படையில் டோக்கியோவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தனிப்பட்ட முறையில் தகுதி பெற தான் விரும்பியதாக தேஜீந்தர் பால் கூறுகிறார். நடப்பு சாதனையோடு கூடவே ஒரு மீட்டர் கூடுதலாக எறிய அவரால் முடிந்தால் டோக்கியோவில் அவர் பதக்கத்தை வெல்லமுடியும்.

அத்தகைய வாய்ப்பு குறித்துப்பேசிய அவர், 22 மீட்டர் எறியமுடிந்தால் பதக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் அனைவருக்கும் அழுத்தம் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

டோக்கியோவில் 22 மீட்டர் எறிவாரா அவர்? பிப்ரவரி மாதத்தில் பயிற்சியின்போது இதை எளிதாக செய்ய முடிந்தது என்று தேஜிந்தர் கூறுகிறார். அந்த நாட்களில் போட்டி இருந்திருந்தால், இந்த இலக்கை அவர் அடைந்திருக்கலாம்.

ஆசிய போட்டி தங்கம் வாழ்க்கையை மாற்றியது

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம், Getty Images

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெறப்பட்ட தங்கப் பதக்கத்தை தனது வாழ்க்கையின் திருப்புமுனையாக தேஜிந்தர் பால் கருதுகிறார். இதன் காரணமாக அவர் பிரபலமானார். அவருக்கு நிதி உதவியும் கிடைத்தது. அதன் அடிப்படையில் அர்ஜுனா விருதையும் அவர் பெற்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு தனது தந்தையின் நோய் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என்று தேஜிந்தர் கூறினார். தந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற சிந்தனையே அவரது மனதில் எப்போதும் இருந்தது. தேஜிந்தர் பால் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்துடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவரது தந்தை காலமானார்.

அந்த நாட்களில் குடும்பத்தினர் ஒருபோதும் தந்தையின் உடல்நிலை குறித்து முழு விஷயத்தையும் தன்னிடம் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பயிற்சியை இடையில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவேன் என்று அவர்கள் அஞ்சினர் என்று தேஜிந்தர் கூறுகிறார்.

அந்த நாட்களில் குடும்பத்தின் நிதி நிலை சரியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது பயிற்சியாளர் மொஹிந்தர் சிங் தில்லோன் ,பெரிதும் உதவியதுடன், தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஊக்கமும் அளித்தார்.

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா காரணமாக உள்ள கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் டோக்கியோவில் அவரது செயல்திறன் எப்படி இருக்கும் என்பது பற்றிப்பேசிய தேஜிந்தர் பால், அங்கு சென்றடைந்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும் என்றார். முககவசம் அணிந்து விளையாடுவது எளிதானதாக இருக்காது அவர் கருதுகிறார்.

அவர் பட்டியாலாவில் பயிற்சி செய்கிறார், ஆனால் அதிகரித்து வரும் வெப்பத்தைப் பற்றியும் அவர் கவலைப்படுகிறார். இருப்பினும் தனது உடற்தகுதி குறித்து அவர் திருப்தியுடன் உள்ளார்.

இன்று வரை ஒலிம்பிக்கில் தடகளப்பிரிவில் இந்தியா எந்த பதக்கமும் பெறவில்லை என்பது குறித்து பேசிய அவர், இந்த முறை பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தினமும் காலையில் மூன்று மணி நேரமும், மாலை மூன்று மணி நேரமும் அவர் பயிற்சி செய்கிறார்.

ரியோ ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில், அமெரிக்காவின் ரியான் க்ரூசர் 22.52 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்கரான ஜாய் கோவாக்ஸ் 21.78 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கமும், நியூசிலாந்தின் தாமஸ் வால்ஷ் 21.10 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், தேஜிந்தர் பால் சிங் தூரின் தற்போதைய சாதனை டோக்கியோவில் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :