ஆமிர் கான் - கிரண் ராவ் விவாகரத்து: 15 ஆண்டுகளுக்கு பிறகு பிரியும் பாலிவுட் சினிமா தம்பதி

பட மூலாதாரம், Reuters
பாலிவுட் நடிகர் ஆமிர் கானும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கிரண் ராவும் 15 ஆண்டுகால திருமண உறவுக்கு பிறகு தாங்கள் மணமுறிவு செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் மகனை இணைந்து இருவரும் வளர்ப்போம் என்றும் திரைப்படங்கள், பானி ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் மற்றும் தங்களுக்கு மிகவும் பிடித்தமான பிற திட்டங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
56 வயதாகும் அமீர்கானும் 47 வயதாகும் கிரண் ராவும் லகான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது 2001ம் ஆண்டு சந்தித்தனர். அவர்கள் டிசம்பர் 2005 இல் திருமணம் செய்து கொண்டனர். அப்படத்தில் கிரண் ராவ் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
அவர்கள் டிசம்பர் 2005இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது மகன் ஆசாத் ராவ் கான் டிசம்பர் 2011 இல் பிறந்தார்.
"ஒன்றாக இருந்த இந்த பதினைந்து அழகிய ஆண்டுகளில் நாங்கள் வாழ் நாளுக்கான அனுபவங்கள், மகிழ்ச்சி மற்றும் புன்னகையைப் பகிர்ந்து கொண்டோம்," என்று அவர்களது அறிக்கை தெரிவிக்கிறது.
தங்களுக்கு இடையிலான உறவு தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர்கள் அந்த அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த மணமுறிவு முடிவு கிடையாது புதிய பயணத்தின் தொடக்கம் என்றும் ஆமிர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது குழந்தைப் பருவம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருக்கும் ஆமீர் கான் இந்தியில் முன்னணி நடுவர்களில் ஒருவராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.

பட மூலாதாரம், AFP
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், குறிப்பாக சீனாவிலும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஆமீர் கான் நடிப்பில் கிரண் ராவ் இயக்கிய 'தோபி காட்' எனும் படம் 2011ஆம் ஆண்டு வெளியானது. இது தவிர பல திரைப்படங்களையும் கிரண் ராவ் தயாரித்துள்ளார்.
இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றும் தமது மனைவி கிரண் ராவ் தம்மிடம் கூறியதாகவும் 2015ஆம் ஆண்டு ஆமிர் கான் தெரிவித்திருந்தார்.
இது இந்தி திரைப்பட வட்டாரங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.
அதன் பின்பு தமக்கோ கிரண் ராவுக்கோ இந்தியாவை விட்டு வெளியேறி வசிக்கும் எண்ணமில்லை என்று ஆமிர் கான் அறிக்கை வெளியிட்டார்.
கிரண் ராவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆமீர் கானுக்கு ரீனா தத்தா எனும் அவரது முதல் மனைவியுடன் திருமணம் ஆகியிருந்தது. பின்னர் மணமுறிவு செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிற செய்திகள்:
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
- உத்தராகண்டில் தொடரும் அரசியல் குழப்பம்: 21 ஆண்டுகளில் 11 முதல்வர்கள் - என்ன நடக்கிறது?
- கொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; அ.தி.மு.கவை பலவீனப்படுத்த தி.மு.கவின் வியூகம் என்ன?
- போரில் செய்த பேருதவி: இந்திய மருத்துவருக்கு சிலை வைத்த சீனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












