உத்தராகண்டில் தொடரும் அரசியல் குழப்பம்: 21 ஆண்டுகளில் 11 முதல்வர்கள் - என்ன நடக்கிறது?

தீரத் சிங் ராவத்: உத்தராகண்ட் அரசியல் நிலைமை காரணமாக எழுந்துள்ள முக்கிய கேள்விகள்

பட மூலாதாரம், TIRATH SINGH RAWAT

    • எழுதியவர், ரோஹித் ஜோஷி
    • பதவி, டெஹ்ராடூனில் இருந்து பிபிசி இந்திக்காக

உத்தராகண்ட் முதல்வரானவுடன் தனது சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த தீரத் சிங் ராவத், முதல்வரான 114 நாட்களில் வெள்ளிக்கிழமை பதவி விலகினார்.

இதையடுத்து உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்க உள்ளார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 21 ஆண்டுகளில் முதல்வர் பதவியேற்கும் 11வது நபர் இவர்.

2000 வது ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உருவாக்கப்பட்ட உத்தராகண்டில் இதுவரை 10 முதலமைச்சர்கள் மாறிவிட்டனர். இவர்களில் நாராயண் தத் திவாரி மட்டுமே தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடிந்தது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே தலா 10 ஆண்டுகள் ஆட்சிக்காலம் கிடைத்தது, தமக்குக் கிடைத்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 3 பேரை அடுத்தடுத்து முதல்வராக்கியது காங்கிரஸ். பாஜக இதுவரை 6 முதல்வர்களை மாற்றியுள்ளது. இப்போது ஏழாவது முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தனது இரண்டு ஐந்தாண்டு ஆட்சியில் தலா மூன்று முதலமைச்சர்களை மாற்றியுள்ளது.

தீரத் சிங் ராவத் பதவி விலகியது ஏன்?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 151 ஏ இன் கீழ் உருவான அரசியலமைப்பு நெருக்கடி நிலைமைதான், தீரத் சிங் ராவத்தின் இந்த விலகலுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்கள், ஆனால் உண்மையில் பாஜக அரசமைப்புச் சட்ட நெருக்கடியால் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை , அரசியல் நெருக்கடி காரணமாகவே இது நடந்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

"பாஜக ஒரு அனுபவம் வாய்ந்த கட்சி. இப்போது இடைத்தேர்தல் சாத்தியமில்லை என்று அரசியலமைப்பு விதிமுறையை காரணம் காட்டி கூறப்படுவது சரியானது அல்ல. ஏனென்றால் இப்படி நடக்கும் என்று கட்சிக்கு முன்பே தெரியும்," என்றும் மூத்த ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான ஜெய் சிங் ராவத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஒடிஷா, நாகாலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் இத்தகைய சூழ்நிலையில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இங்கும் அது சாத்தியம்தான்..

பாஜக இந்த முடிவை எடுத்தது ஏன்?

உண்மையில், இடைத்தேர்தல்களில் முதலமைச்சரின் தோல்வி குறித்த அச்சம் பாஜகவுக்கு இருக்கும் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியாகும். இது 2022 தேர்தல்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

முந்தைய முதல்வர் திரிவேந்திர ராவத் பதவி விலகிய பின்னர் மார்ச் 10 ஆம் தேதி, பெளரி கட்வால் நாடாளுமன்ற உறுப்பினர் தீரத் சிங் ராவத் உத்தராகண்ட் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் முதல்வர் பதவியில் தொடரவேண்டுமானால்,அரசமைப்புச் சட்டத்தின்படி, 6 மாதங்களுக்குள் அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பாக மாநில சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.

தீரத் சிங் ராவத்

பட மூலாதாரம், FB/TIRATH RAWAT

உத்தராகண்ட் சட்டமன்றத்துக்கான கங்கோத்ரி, ஹல்த்வானி ஆகிய 2 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. பாஜக எம்எல்ஏ கோபால் சிங் ராவத்தின் மரணம் காரணமாக கங்கோத்ரி தொகுதியும், எதிர்க்கட்சித் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் இறப்பு காரணமாக ஹல்த்வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில், முதலமைச்சர் போட்டியிட்டிருக்கலாம்.

"ஹல்த்வானி தொகுதி முதலமைச்சருக்கு சவாலாக இருந்திருக்கும். ஏனெனில் அது இந்திரா ஹிருதயேஷின் கோட்டையாக இருந்தது. கூடவே அனுதாப வாக்குகளின் காரணமாக காங்கிரஸ் வேட்பாளரை அங்கு தோற்கடிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும். ஆனால், பாஜக அரசு தேவஸ்தான வாரியம் அமைத்ததால் கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிராக பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதனுடன் கூடவே, கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் அரசின் தோல்வி குறித்தும் மக்கள் கோபத்தில் உள்ளனர்," என்று ஜெய் சிங் குறிப்பிட்டார்.

2022 தேர்தலுக்கு சற்று முன்னர் முதலமைச்சரே தேர்தலில் தோல்வியடைந்தால், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும் என்று ஜெய் சிங் கூறுகிறார்.

பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணியும் போக்கு குறித்து தீரத் ராவத் முதல்வராக பதவியேற்றவுடனேயே ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார். இதற்காக அவர் தேசிய ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அவர் வெளியிடுவது அத்தோடு நிற்கவில்லை. 'அமெரிக்கா 200 ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்படுத்தியது' என்று கூறியது, 'குடும்பக் கட்டுப்பாடு' குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்து வந்தன.

இந்த அரசியல் சூழ்நிலைகளுக்குப் பின்னால் அதிகாரம் தொடர்பான உள்கட்சி இழுபறி பாஜகவில் இருப்பதாக, மூத்த அரசியல் பத்திரிகையாளர் சாரு திவாரி கூறுகிறார்.

"மார்ச் மாதத்தில், திரிவேந்திர ராவத் அரசுக்கு எதிரான அதிருப்தியை சமாதானப்படுத்த, தேசிய தலைமை அவரை பதவி விலக வைத்தது. புதிய முதல்வரை தேர்வுசெய்தபோது ​​, தேர்ந்தெடுக்கப்பட்ட 57 எம்.எல்.ஏக்களில் எவரையும் அது தேர்வு செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரான தீரத் ராவத் முதல்வராக கொண்டு வரப்பட்டார்.

"அதற்குப் பின்னால் எம்.எல்.ஏக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடாது என்ற உத்தி இருந்தது. ஆனால், பதவியேற்றவுடனேயே தீரத் சிங் ராவத் அளித்த சர்ச்சைக்குரிய அறிக்கைகள், தான் தவறு செய்துவிட்டதை பாஜக தலைமைக்கு உணர்த்தின. இதற்குப் பிறகு பாஜக மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை , சேதத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி," என்று அவர் மேலும் கூறினார்.

தீரத் சிங் ராவத்

பட மூலாதாரம், TWITTER/TIRATH SINGH RAWAt

ஐந்தாண்டு பதவி வகித்த ஒரே முதல்வர் என்.டி.திவாரி

உத்தராகண்ட் மாநிலத்தில், நாராயண் தத் திவாரி மட்டுமே 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யமுடிந்தது.

இதற்கு அவருடைய அரசியல் உயரமும், தலைமைப்பண்பும்தான் காரணம் என்று சாரு திவாரி விளக்குகிறார்.

"உத்தராகண்ட் மாநிலத்தின் எல்லா அரசியல் கட்சிகளையும் பார்க்கும்போது, நாராயண் தத் திவாரி மிகப்பெரிய தலைவராக இருந்தார். உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு தேசியத் தலைவராக இருந்த அவருடைய நிலை, காங்கிரஸ் தலைவரின் நிலைக்கு சமமாக இருந்தது. உத்தராகண்ட் மாநிலத்தில், அவர் காங்கிரசுக்குள் நன்கு அறியப்பட்ட தலைவராக இருந்தார். அதேபோல் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் அவருக்கு அங்கீகாரம் இருந்தது. உத்தரபிரதேசத்தின் சிக்கலான அரசியலில் தாக்குப்பிடித்த ஒரு அனுபவம் மிக்க தலைவருக்கு ஒரு புதிய மாநிலத்தில் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்வது கடினமான பணி அல்ல,"என்று அவர் கூறினார்.

என்.டி. திவாரிக்கு அடுத்தபடியாக திரிவேந்திர சிங் ராவத் 3 ஆண்டுகள் 357 நாட்கள் முதல்வராக இருந்தார். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்குடனான அவரது நெருக்கமே இதற்குக்காரணம் என்று சாரு திவாரி கருதுகிறார்.

உத்தராகண்டில் ஏன் முதல்வர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்?

தேர்தலுக்கு சற்று முன்னர் முதலமைச்சரை மாற்றும் உத்தியை உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த இரு தேசியக் கட்சிகளுமே கடைப்பிடித்தன.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கட்சிகளுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியே இதற்கான காரணம் என்று ஜெய் சிங் ராவத் கருதுகிறார். " கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பர சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது உத்தராகண்ட் அரசியலின் சிக்கலாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளின் வரலாற்றைப் பார்த்தால், பாஜக தலைவர்கள் பாஜக தலைவர்களிடமிருந்தும், காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களிடமிருந்தும் எதிர்ப்பை சந்திக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பரஸ்பர முரண்பாடு பெரிதாக உருவெடுக்காமல் தடுக்க, இரு கட்சிகளின் தலைமையும் முதலமைச்சர்களை மாற்றி எதிர் தரப்பை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுக்குப்பின்னர் எழுந்த அதிருப்தியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப காங்கிரஸ் கட்சியும் இதே போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போதைய முதல்வராக இருந்த விஜய் பகுகுணாவுக்கு பதிலாக ஹரீஷ் ராவத்தை அக்கட்சி முதலமைச்சராக்கியது. அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பகுகுணா காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார்.

பிரச்சனை புதிய முதலமைச்சருக்கு மட்டுமல்ல. எதிர்க்கட்சித் தலைவர் இந்திரா ஹிருதயேஷின் மரணத்திற்குப் பிறகு அவரது இடத்தைப்பிடிப்பதற்கும், உத்தராகண்ட் காங்கிரசில் இழுபறி நிலவுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன?

இந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியிருப்பது ஒரு அரசியல் நாடகம் என்றும் பாஜக உத்தராகண்ட் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. "ஒவ்வொரு துறையிலும் பாஜக அரசின் தோல்விகள் மற்றும் ஊழல் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இந்த காரணத்தால் மீண்டும் மீண்டும் முதல்வரை மாற்ற வேண்டியுள்ளது. இப்படிசெய்வதால் அக்கட்சி, உத்தராகண்ட் மாநிலத்தை அரசியல் ஸ்திரமின்மைக்குள் தள்ளுகிறது," என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரதீப் டம்டா பிபிசியிடம் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பாஜக சொல்வது என்ன?

நடப்பு சூழ்நிலையில் இருந்து உருவாகியுள்ள ஒரு இயற்கையான நிலைமை இது என்று பாஜக மாநில துணைத் தலைவர் தேவேந்திர பசீன் விவரிக்கிறார். "முதலமைச்சர் பதவி விலகிய பின்னர், சனிக்கிழமை நடைபெறும் பாஜக சட்டமன்றக் கூட்டத்திற்குப்பிறகு நிலைமை தெளிவாகிவிடும்" என்று அவர் கூறினார்.

புஷ்கர் சிங் தாமி

பட மூலாதாரம், Pushkar Singh Dhami/FB

படக்குறிப்பு, புஷ்கர் சிங் தாமி.

கட்சியின் மூத்த தலைவர்களான சத்பால் மகராஜ் மற்றும் தன் சிங் ராவத் ஆகியோருடன், ஹரக் சிங் ராவத்தின் பெயரும் புதிய முதலமைச்சருக்கான போட்டியில் அடிபட்டது. இப்போது பாஜக யாரை முதலமைச்சராக ஆக்குகிறதோ, அவருடைய தலைமையில்தான் 2022 ஆம் ஆண்டின் அடுத்த சட்டமன்றத் தேர்தலையும் போட்டியிட வேண்டியிருக்கும் என்ற நிலையில் புஷ்கர் சிங் தாமி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் யார் எத்தனை காலம் முதல்வர்களாக இருந்தனர்?

1. நித்யானந்த சுவாமி: 9 நவம்பர் 2000 முதல் 2001 அக்டோபர் 29 வரை (354 நாட்கள்)

2. பகத் சிங் கோஷியாரி: 2001 அக்டோபர் 30 முதல் 2002 மார்ச் 1 வரை (122 நாட்கள்)

3. நாராயண் தத் திவாரி: 2002 மார்ச் 2 முதல் 2007 மார்ச் 7 வரை (5 ஆண்டுகள் 5 நாட்கள்)

4. புவன் சந்திர கண்டூரி: 2007 மார்ச் 7 முதல் 2009 ஜூன் 26 வரை (2 ஆண்டுகள் 111 நாட்கள்)

5. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்: 2009 ஜூன் 27 முதல் 2011 செப்டம்பர் 10 வரை (2 ஆண்டுகள் 75 நாட்கள்)

6. புவன் சந்திர கண்டூரி: 2011 செப்டம்பர் 11 முதல் 2012 மார்ச் 13 வரை (184 நாட்கள்)

7. விஜய் பகுகுணா: 2012 மார்ச் 13 முதல் 2014 ஜனவரி 31 வரை (1 வருடம் 324 நாட்கள்)

8. ஹரீஷ் ராவத்: 2014 பிப்ரவரி 1 முதல் 2017 மார்ச் 18 வரை (3 ஆண்டுகள் 2 நாட்கள்)

9. திரிவேந்திர சிங் ராவத்: 2017 மார்ச் 18 முதல் 2021 வரை மார்ச் 10 வரை (3 ஆண்டுகள் 357 நாட்கள்)

10. தீரத் சிங் ராவத்: 2021 மார்ச் 10 முதல் 2021 ஜூலை 2 வரை(114 நாட்கள்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :