எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்தது எப்படி?

பட மூலாதாரம், NurPhoto
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இந்திய ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்களில் நூதனமான முறையில் லட்சக் கணக்கான ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளை நடந்தது எப்படி?
தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல நகரங்களில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியின் எடிஎம்களில் வித்தியாசமான முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரங்களைக் குறிவைத்து இந்த கொள்ளைச் சம்வங்கள் அரங்கேறியுள்ளன.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் வசதி கொண்ட ஏடிஎம்களில், கணக்குப்படி பார்த்தால் பணம் எடுத்திருப்பது குறைவாக இருந்த நிலையிலும் அந்த எந்திரங்களில் இருந்த பணம் தீர்ந்து போயிருந்தது கண்டறியப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் மாநிலத்தில் உள்ள பல ஏடிஎம்களில் இதே போல நிகழ்ந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இந்திய ஸ்டேட் வங்கியின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் காவல்துறை ஆணையரைச் சந்தித்துப் புகார் கொடுத்ததோடு, ஆலோசனையும் நடத்தினார்.
இந்தக் கொள்ளை நடந்தது எப்படி?

இந்திய ஸ்டேட் வங்கி, இரண்டு நிறுவனங்களின் எடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது. அதில் பணம் செலுத்தும் வசதி கொண்ட எடிஎம் இயந்திரங்களை ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து அளித்து வருகிறது.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து வெளிவரும் பணத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் கையில் எடுக்காவிட்டால் அவற்றை இந்திரமே திரும்பவும் எடுத்துக்கொள்ளும். வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட மாட்டாது. இந்தியா முழுவதும் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் உள்ள ஒரு பலவீனத்தையே கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அதாவது, ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்து அளித்துள்ள ஏடிஎம்களில், பணத்தை எடுத்தார்களா இல்லையா என்பதை ஒரு சென்சார் கண்காணிக்கும். இந்தக் கொள்ளையர்களைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். பணம் வெளியே நீட்டப்படும்போது, அதை எடுக்காததுபோல சென்சாரை ஏமாற்றிவிட்டு, பணத்தை எடுத்துள்ளனர். இதனால், இவர்கள் கணக்கிலிருந்த பணம் தொடர்ந்து அவர்கள் கணக்கிலேயே இருந்து வந்தது. ஆகவே அடுத்தடுத்த எடிஎம்களில் இதே வேலையைச் செய்து தொடர்ச்சியாக பணத்தை எடுத்துள்ளனர்.
ஜூன் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் மட்டும் இந்த முறையில் 190 முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 16 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 15 ஏடிஎம்கள், பிற மாவட்டங்களில் 12 ஏடிஎம்கள் என இதுவரை 27 ஏடிஎம்களில் இதுபோல கொள்ளை நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுவரை கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தின் அளவு 48 லட்ச ரூபாயாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலையில் 71 லட்ச ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தொகை மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.

அடையாளம் காணப்பட்ட கொள்ளையர்கள்
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதும் தென் சென்னை மாவட்ட கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஏடிஎம்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இதுபோல பணம் எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் அந்த மையத்துக்கு வெளியே நின்றவாறு தொலைபேசியில் பேசுவது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தத் தருணத்தில் அருகில் உள்ள தொலைபேசி டவரைத் தொடர்பு கொண்டு பேசிய எண்களை ஆய்வு செய்த காவல்துறையினர், கொள்ளையடித்தவரின் எண்ணைக் கண்டுபிடித்தனர். இதற்குப் பின் அந்த எண் பணம் எடுக்கும் நேரத்தில் எந்த எண்ணுடன் தொடர்பு கொண்டது என்பது கண்டறியப்பட்டது. தொடர்புகொள்ளப்பட்ட எண் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் ஹரியானாவுக்குச் சென்றனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, அங்கே இரண்டு பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகத் தெரிகிறது. மொத்தமாக நான்கு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
பணம் எடுக்கும் வசதி கொண்ட ஏடிஎம்களில் மட்டுமே இதுபோல சென்சாரை ஏமாற்ற முடியும் என்பதால், இந்த இயந்திரங்களில் பணம் எடுக்கும் வசதியை இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கி முடக்கியுள்ளது.
பிற செய்திகள்:
- டெல்டா பிளஸ் திரிபு: கொரோனா தொடர்பு ஆபத்தை இப்போதே ஊகிப்பது கடினம்: ஆராய்ச்சியாளர்கள்
- மோதிரத்துக்குள் 300 அடி நீளத் துணி - இன்று எங்கே போனது?
- கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது?
- இந்தியாவில் வரவிருக்கும் புதிய கொரோனா தடுப்பூசிகள் - பட்டியல் இதோ
- பேய் பிடித்தல் என்பது உண்மையா? - மருத்துவ உலகம் சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












