சேலம் தாக்குதலுக்கு நியாயம் கேட்ட எடப்பாடி பழனிசாமி - மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதி

சேலம் கைது

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவரை காவல்துறை அதிகாரி தாக்கியதில் ஒருவர் பலியான விவகாரத்தை சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். இதையடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகில் உள்ள எடப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு வயது 45. இவரும் இவருடைய நண்பர் சிவன்பாபு உள்ளிட்டவர்களும் நேற்று இரு சக்கர வாகனத்தில் அருகில் உள்ள கருமந்துரை சென்று விட்டு மாலை நான்கு மணியளவில் திரும்பி வந்துள்ளனர்.

இவர்கள் பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியைக் கடக்கும்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி இவர்களது வாகனத்தை நிறுத்தினார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி தாக்கியதில் முருகேசனுக்கு தலையில் அடிபட்டது. அவர் உடனே மயங்கி விழுந்து இறந்து விட்டார், என்கிறார் அந்தத் தருணத்தில் முருகேசனுடன் இருந்தவரும் சம்பவத்தை நேரில் பார்த்தவருமான சிவன்பாபு.

முருகேசனுடன் இருந்தவர்கள் அவரைத் தாக்க வேண்டாம் எனக் கூறியும் தொடர்ந்து பெரியசாமி தரையில் விழுந்த முருகேசனை லத்தியால் தாக்கியதாக சிவன்பாபு உள்ளிட்டோர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த தாக்குதலில் பின் மண்டையில் பலத்த காயமடைந்த முருகேசன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

சேலம்
படக்குறிப்பு, இடமிருந்து உயிரிழந்த முருகேசன், உடன் சென்ற சிவன்பாபு

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலில் தும்பலில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஆத்தூர் மருத்துவமனைக்கு முருகேசன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கிருந்த மருத்துவர்கள் முருகேசனை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

சேலம் கைது
படக்குறிப்பு, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி

இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், முருகேசனை பெரியசாமி லத்தியால் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கையளிக்கும்படி சேலம் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் இது தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொண்டார். முருகேசனுடன் வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் எஸ்.எஸ் ஐ. பெரியசாமி உள்பட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் என தனித்தனியே விசாரணை நடத்தப்படது.

அதில் பெரியசாமி தாக்குதல் நடத்தியது உறுதியானது. இதையடுத்து பெரியசாமி மீது முருகேசன் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பெரியசாமியிடம் விசாரணை நடத்தினார். இதன் பிறகு பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

தாயார் புகார்

சேலம் கைது
படக்குறிப்பு, முருகேசனின் தாயார் கோவிந்தம்மாள்

"என் மகனிடம் சாராயம் கடத்துகிறாயா என்று கேட்டு அடித்திருக்கிறார்கள். அதற்கு, என்னிடம் அப்படியேதாவது இருந்தால் சொல்லுங்கள் என என் மகன் கூறியிருக்கிறான். இதற்குப் பிறகு அவனை அடித்ததோடு, உடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்" என அழுகையுடன் பிபிசியிடம் தெரிவித்தார் முருகேசனின் தாயார் கோவிந்தம்மாள்.

உயிரிழந்த முருகேசனுக்கு 18 வயதில் ஒரு மகளும் 17 வயதில் ஒரு மகளும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். "என் தந்தை தவறே செய்திருந்தாலும் விசாரணை செய்திருக்கலாமே தவிர இப்படி அடித்துக் கொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?" என கதறுகிறார் முருகேசனின் மகள் ஜெயப்ரியா.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தந்தையும் மகனும் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவத்தின் ஒராண்டு நேற்று நிறைவடைந்திருக்கும் நிலையில், சேலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் தி.மு.கவின் மகளிரணி செயலர் கனிமொழி, "சாமானிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7க்கு முன்பாக இருந்த மனநிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின், மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, முருகேசனின் உடல் கூராய்வுக்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் உடல் கூராய்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

(பிபிசி தமிழுக்காக சேலத்தில் இருந்து ஏ.எம்.சுதாகர் அளித்த உள்ளீடுகளுடன்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :